நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா! அவ்வளவும் அப்போது உண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்று சொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜூலியட்டிடம் ரோமியோ வைத்த ஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமே கிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும் என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது. என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா! நான் வங்கநாட்டுச் சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது. என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதை இப்போது பாடிக் காட்டட்டுமா?" என்றாள் சீதா.
"பேஷாய்ப் பாடு! கேட்கவும் வேண்டுமோ? நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே! அது வங்காளிப் பாஷைப் பாட்டா?" என்றாள் லலிதா. "நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்; ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்!" என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:-
"பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?
- என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?
காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார்?
- சகியே கைவிட்டுச் சென்றவர் யார்?
வான வெளியினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார்?
- சகியே தானாக நின்றவர் யார்?
தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார்?
- என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார்?"
இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். அவ்விதம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், "ஐயோ! பாவம்! என்னவெல்லாமோ கஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகி யிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐந்தாம் அத்தியாயம்
மாயா மோகினி
உலகமாகிற அரங்க மேடையை மறைப்பதற்கு மெல்லிய இருள் திரை விழுந்து கொண்டிருந்தது. வானத்தின் வடகிழக்கு மூலையில் கரிய மேகங்கள் திரண்டிருந்தன. மேகத் திரளை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கிழித்துக்கொண்டு மின்னல் கீற்றுக்கள் ஒரு கணம் ஜொலிப்பதும் மறுகணம் மறைவதுமாயிருந்தன. வாடைக்காற்று ஜில்லென்று வீசியது, தென்னந்தோப்புகளில் தென்னை மட்டைகள் ஆடி உராய்ந்து மர்ம சத்தத்தை உண்டாக்கின. வயல் வரப்பில் மேய்ந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பசு ஒன்று திடீரென்று கன்றை நினைத்துக் கொண்டு, "அம்மா!" என்று கத்திற்று. பட்டிக்காட்டுச் சங்கீத வித்துவான் ஒருவன். "நாளைக்கு நாளைக்கென் றேதினம் கழியுது!
ஞானசபையை எண்ணில் ஆனந்தம் பொழியுது;" என்று பாடிக்கொண்டு சென்றான். கொஞ்ச தூரத்தில் இன்னொரு இசைப் புலவன் புல்லாங் குழலில் நாட்டக் குறிஞ்சி ராகத்தை வாசிக்க முயற்சி செய்ய, அது புன்னாகவராளியாக உருக்கொள்ளப் பார்த்தது. சற்றுத் தூரத்திலிருந்த இலுப்பை மரத்தோப்பில் ஒரு இராத்திரிப் பறவை 'கிரீச்' என்று சத்தமிட்டு விட்டுச் சடபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு ஒரு மரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு மரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. வான விதானத்தில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தொடங்கின.
சீதாவின் விம்மல் சத்தம் வரவர லேசாக மறைந்தது. "அத்தங்கா! வீட்டுக்குப் போகலாமா?" என்று லலிதா கேட்டாள். "லலிதா! எனக்கு வீடு எங்கேயிருக்கிறது போவதற்கு?" என்று சொன்னாள் சீதா. "நான் உயிரோடிருக்கும் வரை என்னுடைய வீடு உன்னுடைய வீடுதான்!" என்றாள் லலிதா. உன்னுடைய நல்ல மனதை நான் அறிவேன், லலிதா! அதனாலேதான் உன்னைத் தேடி வந்தேன். ஆயினும் பெண்ணாகப் பிறந்தவளுக்கு அது போதுமா? எவ்வளவுதான் பிராண சினேகிதியாயிருந்தாலும் சொந்த வீட்டில் சுதந்திரமாயிருப்பது போல் இன்னொரு வீட்டில் இருக்க முடியுமா?..." "ஏன் இருக்க முடியாது? பேஷாய் இருக்கலாம். என்னுடைய தேவபட்டணத்து வீட்டில் எனக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு உனக்கு உண்டு; இன்னும் அதிகமாகக்கூட உண்டு!" என்றாள் லலிதா. "உன்னுடைய அன்பு காரணமாக இப்படிச் சொல்கிறாய். நீ சொன்னால் போதுமா? உனக்கு எஜமானர் இருக்கிறார் அல்லவா?" "இருந்தால் என்ன? அவர் எஜமானர் என்றால் நான் எஜமானி. அவருக்கு வீட்டில் எவ்வளவு பாத்தியதை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு! என்னுடைய எஜமானரின் நல்ல குணம் உனக்குத் தெரியாது, சீதா! என்னைக் காட்டிலும் அவர் உன்னிடம் அதிக பிரியமாக இருப்பார். அதிலும் நீ தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டாய் என்றும் சிறையிலே இருந்தாய் என்றும் அவருக்குத் தெரிந்தது முதல் உன்னைச் சிலாகித்து எத்தனையோ தடவை பேசியிருக்கிறார். நீ எங்கள் வீட்டில் எத்தனை நாள் இருந்தாலும் அவருக்குச் சந்தோஷமாகவேயிருக்கும்!" என்றாள் லலிதா.
சீதா, தன் தாய் நாட்டின் விடுதலைக்காகச் சிறை போகவில்லை என்றும், தன்னை இன்னொருத்தி என்று நினைத்துத் தவறாகச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட எண்ணினாள். "லலிதா! நீங்கள் எல்லாரும் நினைப்பதுபோல் அப்படியொன்றும் நான் தாய்நாட்டுக்குச் சேவை செய்துவிடவில்லை...." என்று சீதா சொல்ல ஆரம்பித்தாள். "எல்லாம் எனக்குத் தெரியும்! சூரியா அப்போதே எல்லாவற்றையும் விவரமாக எழுதியிருந்தான். ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் பிரமாதமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். நீ பிரமாதமான காரியத்தைச் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? அடக்கத்துக்கும் எல்லை வேண்டாமா?" என்றாள் லலிதா. ஓஹோ! இவர்கள் எல்லாம் இப்படி நினைப்பதற்குக் காரணம் சூரியாவா? தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவ்விதம் சூரியா எழுதியிருக்கிறான்.
அதை இப்போது இல்லையென்று சொல்லிச் சூரியாவைக் காட்டிக் கொடுப்பானேன்? தன்னைப்பற்றிச் சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டால் நினைத்துக்கொண்டு போகட்டுமே? அப்படி நினைப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? தான் சொல்ல எண்ணியதைச் சீதா மாற்றிக்கொண்டு, "மற்றவர்கள் செய்யாத காரியம் அப்படி என்ன நான் பிரமாதமாகச் செய்துவிட்டேன்? உன் அகத்துக்காரர் கூடத்தான் சிறையில் இரண்டரை வருஷத்துக்குமேல் இருந்திருக்கிறார்!" என்றாள். "ஆமாம்; அவர் செய்ததை நினைத்தாலும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது!" என்றாள் லலிதா. சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
திடீரென்று லலிதா, "இதுதான் எனக்கு அர்த்தமாகவேயில்லை. உன்னுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமில்லை என்று சொல்கிறாயே? கலியாணமான புதிதில் நீ எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தக் கடிதங்களை நான் அடிக்கடி எடுத்துப் படிப்பதுண்டு. உன்னுடைய கடிதங்களைப் படிக்கும்போது சுவாரஸ்யமான நாவல்களைப் படிப்பது போல அவ்வளவு சந்தோஷமாயிருக்கும். நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன். உன்னுடைய கடிதங்களை இவருக்குக்கூட நான் படித்துப் பார்க்கும்படி கொடுப்பதுண்டு..." "ஐயையோ! என்ன வெட்கக்கேடு! இப்படி நீ செய்வாய் என்று தெரிந்திருந்தால் எழுதியிருக்கவே மாட்டேன்!" என்றாள் சீதா. "எதற்காக இவ்வளவு பதற்றப்படுகிறாய்? இப்போது என்ன முழுகிப் போய்விட்டது. உன்னுடைய கடிதங்களைப் படித்து இவர் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருக்கிறார். இன்னொன்று கூடச் சொல்கிறேன், கேள்! உன்னுடைய கடிதங்களை அவர் படித்ததினால்தான் என்னிடம் அவருடைய அலட்சியம் நீங்கி அன்பாக நடந்துக்கொள்ளத் தொடங்கினார் என்று எனக்குச் சில சமயம் தோன்றும்." "அந்தவரையில் என் கடிதங்கள் உனக்கும் பிரயோஜனமாயிருந்தது பற்றிச் சந்தோஷந்தான்!" "ஆனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாயிருக்கிறது, அத்தங்கா! அவருக்கு ஏன் அப்படிப் புத்தி மாறியது! பெண்ணாய்ப் பிறந்தவள் யாரோ ஒருத்தியைப் பற்றிச் சொன்னாயே? அந்தப் பாதகி யார்? அவள் பெயர் என்ன?" "அவள் பெயர் தாரிணி!"
"தாரிணியா! சூரியா அவளைப் பற்றிக்கூட எழுதியிருந்தானே? அவள் ரொம்ப சாமர்த்தியக்காரி, உபகாரி, அப்படி இப்படி என்று. உன்னுடைய உயிரை ஒரு தடவை அவள் காப்பாற்றினாள் என்று எழுதியிருந்தானே!" "சூரியா உத்தமமான பிள்ளை, அவனுடைய மனது ரொம்ப நல்ல மனது. வெளுத்ததெல்லாம் பால் அவனுக்கு. அதனால் தாரிணியைப்பற்றி 'ஆ! ஹூ!' என்கிறான். அவளுடைய உண்மையான குணம் அவனுக்குத் தெரியாது." "அப்படியானால் அவள் ரொம்பப் பொல்லாதவளா?" என்று லலிதா கேட்டபோது சீதா சிறிது நிதானித்துவிட்டுக் கூறினாள்:- "தாரிணியைப் பொல்லாதவள் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் எவ்வளவோ நல்லவள்தான். என்னை ஏரியில் முழுகிப் போகாமல் அவள் காப்பாற்றியது உண்மைதான். அது மட்டுந்தானா? கொடிய சுரத்தில் வீழ்ந்து யமனோடு நான் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அவள்தான் எனக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். அவளும் நானும் தனியாக இருக்கும்போது அவளை என் உடன் பிறந்த சகோதரி என்றே எண்ணத் தோன்றும். உன்னைக்காட்டிலும்கூட அதிகமான அன்பு அவளிடம் எனக்கு உண்டாகும். அவளை விட்டு ஒரு நிமிஷ நேரமும் பிரிந்திருக்க மனம் வராது. வாழும்போது சேர்ந்தாற்போல் வாழ்ந்து சாகிறபோது சேர்ந்து சாகவேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அந்த மாதிரி அவளிடமே சொல்லியும் இருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவரின் பக்கத்தில் அவள் நிற்பதைப் பார்த்துவிட்டால் என்னுடைய மனதெல்லாம் மாறிவிடும். அவளிடம் எனக்குள்ள அன்பு விஷமாகிவிடும். அவர் அவளுடைய முகத்தைப் பார்த்தால் போதும்; எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரியும். அவரும் அவளும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எனக்கு வெறி பிடித்துவிடும். ஒன்று அவளையாவது கொன்றுவிட வேண்டும், அல்லது நானாவது செத்துப் போய்விட வேண்டும் என்று தோன்றும்..."
"ஐயோ! அத்தங்கா! எவ்வளவு கொடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாய்? எனக்கு அம்மாதிரியெல்லாம் மனம் வேறுபடுவதேயில்லை. இவர் யாராவது ஒரு ஸ்திரீயுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்கு அதில் எவ்விதமான வருத்தமோ கோபமோ உண்டாவதில்லை. உனக்கு மட்டும் ஏன் அப்படிப் பிசகான எண்ணம் தோன்ற வேண்டும்? நீ சொல்வதையெல்லாம் கேட்டால் பிசகு உன் பேரிலேதான் என்று எனக்குத் தோன்றுகிறது." "லலிதா! நீ பாக்கியசாலி! என்னைப்போல் நீயும் நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்று கனவிலும் நான் எண்ணமாட்டேன். அத்தகைய துர்க்கதிக்கு நீ ஆளாகாதபடி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். ஆனால் பிசகெல்லாம் என் பேரில்தான் என்று எண்ணிக்கொண்டு விடாதே! இந்த உலகத்தில் சில அதிசயப் பிறவியான ஸ்திரீகள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ ஓர் அபூர்வமான சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட வசீகர சக்தியுடைய ஸ்திரீகள் தாங்களே கடவுளுக்கும் தர்மத்துக்கும் பயந்து ஒழுங்காக நடந்து கொண்டால்தான் உண்டு. இல்லாவிட்டால் எத்தனையோ குடும்பங்களை அவர்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட முடியும். தாரிணியைப் பற்றிச் சூரியா எழுதியிருந்ததாகச் சொன்னாயல்லவா? நீ கோபித்துக் கொள்ளவில்லை என்று வாக்குறுதி கொடுத்தால் ஒரு விஷயம் சொல்லுகிறேன். சூரியா எவ்வளவோ நல்ல பிள்ளைதானே? ஆனால் அவன்கூட அந்த மாயாமோகினியின் வசீகரத்தில் மயங்கிப் போனவன்தான்!" என்றாள் சீதா.
"ஒரு விதத்தில் நீ சொல்லுவது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அண்ணா சூரியாவுக்கும் வயதாகி விட்டது அல்லவா? எத்தனை நாளைக்கு இப்படியே பிரம்மச்சாரியாகத் திரிந்து கொண்டிருப்பான்? சூரியா கலியாணம் செய்து கொள்ளாதபடியினால் சுண்டுவின் கலியாணமும் தடைப்படுகிறது என்று அம்மா ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். இனிமேல் சூரியா நம்ம பக்கத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொள்ளுவான் என்று எனக்குத் தோன்றவில்லை. சூரியாவுக்கும் நீ சொல்லுகிற அந்தத் தாரிணிக்கும் காதல் என்பது உண்மையானால் அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்று லலிதா கூறிய வார்த்தைகளில் ஆர்வம் ததும்பிக் கொண்டிருந்தது. "லலிதா! இராத்திர யெல்லாம் இராமாயணம் கேட்டு விட்டுச் சீதைக்குராமர் என்னவேணும் என்பதுபோலப் பேசுகிறாயே? காதல் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றம்!..." இவ்விதம் சீதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சற்றுத் தூரத்தில் காலடிச் சத்தம் கேட்டது. வந்தவன் சூரியாதான். "இரண்டு பெண்மணிகள் சேர்ந்துவிட்டால் காதலையும் கலியாணத்தையும் தவிர வேறு பேச்சுக் கிடையாது போலிருக்கிறது. அங்கே, அப்பா உங்களைக் காணோமே என்று தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பேரையும் கையோடு கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்!" என்றான் சூரியா.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஆறாம் அத்தியாயம்
நீர்மேற் குமிழி
கிட்டாவய்யர் மெலிந்து மலினமான குரலில், "சீதா! உன்னை ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருட்டி இத்தனை நேரம் வரையிலா குளத்தங்கரையில் உட்கார்ந்திருப்பது? முக்கியமான ஒரு விஷயம் பற்றி உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தேனே?" என்றார். "தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா! இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேதானே இருக்கப்போகிறேன்?" என்று சீதா சமாதானம் கூறத் தொடங்கினாள். "இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருக்கப் போகிறாய் என்பது சரிதான். ஆனால் நான் இருக்க வேண்டுமே உயிரோடு?" என்றார் கிட்டாவய்யர். "ஐயோ! மாமா! இப்படிப் பேசுகிறீர்களே! இந்தப் பாவியின் அதிர்ஷ்டமா இது? நான் அநாதை; திக்கில்லாதவள். நீங்களும் இவ்விதம் என்னிடம் கோபித்துக் கொண்டு பேசுவதாயிருந்தால்...." என்று கூறிக்கொண்டே சீதா கலகலவென்று கண்ணீரைப் பொழிந்தாள். "சீதா! நீ வருத்தப்படாதே! அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏதோ அபஸவ்யமாக வாயில் வந்து விட்டது. போனால் போகட்டும். ஆனாலும் நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடுமா என்ன? சாவைக் குறித்து எதற்காக நாம் பயப்பட வேண்டும்? என்றைக்காவது ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு எல்லோரும் போக வேண்டியதுதானே! 'நீர்மேற் குமிழி' என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? 'இன்றைக்கு இருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லையே!' என்று தாயுமான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார். இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டாம் நாள் ஆகிவிடுகிறது. பட்டினத்தடிகள் என்ன சொல்லியிருக்கிறார்? 'காலன் வருமுன்னே கண் பஞ்சடையுமுன்னே'...'
"மாமா! மாமா! என் பேரில் ஏதோ உங்களுக்குக் கோபம் போலிருக்கிறது. அதனாலேதான் இப்படிப் பேசுகிறீர்கள். கொஞ்சநாள் இங்கே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். உங்களைத் தவிர என்னிடம் அன்புள்ளவர்கள் இந்த உலகத்திலேயே யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு வந்தேன். நீங்களும் என்னை வெறுப்பதாகவே தெரிகிறது. நாளைக்கே நான் புறப்பட்டு விடுகிறேன்!" "சீதா! கொஞ்சம் பொறு! நான் சொல்வதைக் கேட்டுக்கொள்! உன் பேரில் எனக்கு யாதொரு கோபமும் இல்லை; என் பேரிலேதான் கோபம். கொஞ்சநாளாக நான் படுத்த படுக்கையாயிருக்கிறேன் அல்லவா? படுத்தபடியே யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருஷங்களாக நான் செய்த காரியங்கள் எல்லாம் தப்பு என்று தோன்றிக்கொண்டு வருகிறது. நம் நாட்டுப் பெரியவர்கள் வர்ணாசிரம தர்மம் என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் வர்ணத்தை மாத்திரம் நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம். சாதி ஆசாரத்தை அனுஷ்டிப்பதாகச் சொல்கிறோம். அதுவும் எப்படி? நமக்குச் சௌகரியமாயிருக்கும் வரையில்தான்! ஆனால் ஆசிரம தர்மத்தை எத்தனை பேர் அனுஷ்டிக்கிறார்கள்? மனிதர்களுக்கு வயது ஆகிவிட்டால் வானப் பிரஸ்த ஆசிர மத்தை மேற்கொள்ள வேண்டும். எனக்கு அந்த வயது முன்னமே ஆகிவிட்டது. பிள்ளைகள் தலையெடுத்து விட்டார்கள், பேரன் பேத்திகள் பிறந்து விட்டார்கள், இன்னமும் எதற்காக இந்தக் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டும்! அதனுடைய பலன் என்ன? இந்த ஊர்க்காரர்கள் சிலருடைய துர்ப்புத்தியைக் கேட்டுக் குடி படைகளின் விரோதத்தையெல்லாம் சம்பாதித்துக் கொண்டேன். என்னுடைய பாட்டனார் காலத்தி லிருந்து தலைமுறை தலைமுறையாக இந்தக் குடும்பத்துக்கு வந்த குடிபடைகள் இப்போது என்னிடம் வெட்டுப்பழி, குத்துப்பழியாகத் துவேஷம் கொண்டிருக்கிறார்கள்.
குடியிருந்த மனைக்கட்டுகளிலிருந்து அவர்களைத் துரத்தியடித்தேன். கோர்ட்டிலே கேஸ் போட்டு ஜயித்தேன், என்ன உபயோகம்? தலைமுறை தலைமுறையாக நம் குடும்பத்தை வாழ்த்திக் கொண்டிருந்தவர்கள் இன்று சபித்துக் கொண்டிருக் கிறார்கள். கடைசியாக இந்த ஆபத்து ஒன்று வந்து சேர்ந்தது. நம்முடைய மூதாதைகள் செய்த பூஜாபலத்தினால் இன்றுவரை உயிர் பிழைத்திருக்கிறேன். அங்கேயே என்னைக் கொன்று போட்டுவிடாமல் இந்த மட்டும் உயிரோடு விட்டார்களே! அந்தத் திருடர்கள் நன்றாயிருக்கட்டும்!" "மாமா! உங்களை அடித்த மகா பாவிகள் நன்றாயிருக்கவா? அவர்கள் நாசமாய்ப்போக வேண்டும். அவர்கள் கை அழுகிப் போக வேண்டும். யாரை வேண்டுமானாலும் நான் மன்னிக்கத் தயார், மாமா! உங்களை அடித்த பாவிகளை மட்டும் மன்னிக்க முடியாது." அவர்களை மன்னிப்பதற்கு நீ யார், அம்மா! அல்லது நான்தான் யார்? அவர்களைக் குற்றம் சொல்லுவதற்குத்தான் நாம் யார்? எய்தவனைவிட்டு அம்பை நோவதில் பயன் என்ன? எல்லா உயிர்களிலும் பகவான் குடிகொண்டிருக்கிறார் அடித்தவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். அடிப்பட்டவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். என்னை அடித்தவர்கள் மீது நான் கோபித்துக் கொண்டால், பகவானையே கோபித்துக் கொண்டதாகவல்லவா ஏற்படும்? உண்மையில் பகவான் என்னை அடித்தவர்களின் உருவத்தில் வந்து எனக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கிறார். 'வயது அறுபது ஆகப் போகிறதே! உனக்கு இன்னும் இந்த ஊரில் என்ன வேலை? போகிற கதிக்கு வழி தேடிக்கொள்ள வேண்டாமா? இனி மேலும் இந்தச் சம்சார பந்தத்தில் கிடந்து உழலப் போகிறாயா? புத்தி கெட்டவனே!' என்று பகவான் திருடனைப்போல வந்து எனக்கு உபதேசம் செய்திருக்கிறார்.
சீதா! எனக்கு இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் பிரியம் இல்லை. நல்ல வேளையாக நீ வந்த காரணத்தினால் சூரியாவும் வந்திருக்கிறான். அவனிடம் இந்தக் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளிக் கிளம்பிவிடப் போகிறேன். காசிக்குச் சென்று கங்கையில் ஸ்நானம் செய்ய வேணும். அப்புறம் ஹரித்வாரம், ரிஷிகேசம், பத்ரிநாத் முதலிய ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். கைலாசகிரிக்கே போக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பெரியவர் 'கைலாச யாத்திரை'யைப் பற்றி எழுதியிருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதைப் படித்து முதல் கைலையங்கிரியே எனக்குத் தியானமாயிருந்து வருகிறது". "மாமா! நீங்கள் அப்படி யாத்திரை கிளம்புவதாக இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போகிறேன்!" என்று சீதா மகிழ்ச்சி ததும்பக் கூறினாள். வாழ்நாளைக் கழிப்பதற்கு ஒரு ஆனந்தமான மார்க்கம் கிடைத்துவிட்டதே என்று அவளுடைய உள்ளம் குதூகலித்தது. "ஆகட்டும், சீதா! உன்னோடு அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்திரை போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், அதைக்காட்டிலும் எனக்குச் சந்தோஷமான காரியம் வேறொன்றும் இராது. அதற்காகத்தான் உன்னிடம் இதையெல்லாம் பற்றிச் சொன்னேன் ஆனால் நீயும் நானும் யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் உன்னுடைய வாழ்க்கையை நீ செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்!" என்றார் கிட்டாவய்யர். சீதா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தலை குனிந்தாள்.
"நான் எதைப்பற்றிச் சொல்கிறேன் என்பதை நீ தெரிந்து கொண்டாய்; அதனாலேதான் மௌனமாயிருக்கிறாய். உனக்கும் உன் புருஷனுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்ததிலிருந்து எனக்கு ஏற்பட்டிருக்கும் மன வேதனையைச் சொல்லி முடியாது. இந்த ஊரிலே உனக்குக் கலியாணம் நிச்சயமாகி நடந்தது. லலிதாவைப் பார்க்க வந்தவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொன்னான். உன் அம்மாமிக்கு வயிறு எரிந்தது, எத்தனையோ பேர் சூயைப்பட்டார்கள். ஆனால் நான் பரிபூரணமாகச் சந்தோஷமடைந்து லலிதாவுடன் ஒரே பந்தலில் உனக்குக் கலியாணம் செய்து கொடுத்தேன். இப்படிப்பட்ட பாக்கியம் உனக்குக் கிடைத்ததே என்று எல்லாத் தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தினேன். அது இப்படி ஆக வேண்டுமா? உன் தாயார்தான் கடைசி வரையில் கஷ்டப்பட்டு வேதனைப்பட்டுச் செத்துப் போனாள். நீயும் அப்படி இருக்க வேணுமா? ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொண்ட புருஷனுடன் நீ சந்தோஷமாயிருக்கக்கூடாதா? சொல், சீதா!"
"தலைவிதி வேறு விதமாயிருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும், மாமா? நீங்கள் எவ்வளவோ சந்தோஷத்துடன் கலியாணம் செய்து வைத்தீர்கள். நானும் பிரியப்பட்டுத்தான் கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் அவருடைய குணம் இப்படி யிருக்கும் என்று யார் கண்டது?" "அவனுடைய குணத்தைப்பற்றிச் சொல்கிறாய். உன்னுடைய குணம் எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா? பிறத்தியாரிடம் உள்ள குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சுலபம்.நம்மிடமுள்ள குற்றத்தை உணர்வது கஷ்டம்.
'இரண்டு கையையும் கொட்டினால்தான் சத்தம்' என்று கேட்டதில்லையா? புருஷன் எவ்வளவுதான் குணங்கெட்டவனா யிருந்தாலும் ஸ்திரீ குணமுடையவளாயிருந்தால் கடைசியில் புருஷனும் சீர்திருந்தி விடுவான், சீர்திருத்த முடியும். சீதா! நீ படித்தவள்; நாலும் அறிந்தவள்; நீ தேசத்துக்குச் செய்த சேவையைப் பற்றிச் சூரியா புகழ்ந்து சொன்னான். அதையெல்லாம் பற்றி எனக்குச் சந்தோஷந்தான். ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள். இந்தியா தேசம் விடுதலை அடைய வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் பாடுபடுகிறீர்கள். இந்த நாட்டின் முக்கியமான பெருமை என்ன தெரியுமா? உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில காலம் மிகவும் மேன்மையோடு இருக்கின்றன; பிறகு அடியோடு அழிந்து போகின்றன. ஆனால் நம்முடைய இந்தியா தேசம் பதினாயிரம் வருஷமாக அழிந்து போகாமலும் மேன்மை குன்றாமலும் இருந்து வருகிறது. மகாத்மா காந்தியைப் போன்ற உத்தம புருஷர்கள் இந்தப் பாரத தேசத்தில் இன்னும் அவதரிக்கிறார்கள். ஏன் தெரியுமா? இந்தத் தேசத்துப் பெண்மணிகளின் மகிமையினால்தான். ஆதிகாலத்திலிருந்து இந்தத் தேசத்தில் புருஷன் எவ்வளவு மூர்க்கனாயும் குணக்கேடனாயு மிருந்தாலும் அவனோடு ஒத்து வாழ்க்கை நடத்துகிறது என்று ஸ்திரீகள் இருந்து வந்தார்கள். அவர்களுடைய புண்ணியந்தான் இந்தப் பாரத தேசத்தைக் காப்பாற்றி வருகிறது. காந்தி மகாத்மா தம்முடைய தர்மபத்தினி கஸ்தூரிபாயைப் பற்றி எழுதியிருப்பதை நீ படித்திருப்பாய். மகாத்மா காரணமின்றிக் கஸ்தூரிபாயைக் கடிந்து கொண்டபோது அந்த மாதரசி எவ்வளவு பொறுமையாக நடந்து, கணவரே பின்னால் பச்சாதாபப் படும்படியாகச் செய்திருக்கிறாள்?
அவ்வளவு தூரம் போக வேண்டாம். உன்னுடைய மாமியையே எடுத்துக்கொள். ஓயாமல் அவள் என்னிடம் சண்டை பிடிக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் காரியாம்சத்தில் என் விருப்பத்தை மீறி அவள் ஏதாவது செய்வதுண்டா? எத்தனையோ தடவை நான் அவளை ரொம்பக் கோபித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவள் இந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறேன் என்று எப்போதாவது சொன்னதுண்டா?" "மாமா! கஸ்தூரிபாய் தெய்வாமிசம் பொருந்தியவர். மாமி மிகவும் பாக்கியசாலி; உங்களைப் பதியாகப் பெற்றார். ஆனால் நானோ எல்லாவிதத்திலும் துர்பாக்கியம் செய்தவள். கல்கத்தாவில் அலிப்பூர் ஜெயிலில் நான் இருந்த காலத்தில் ஒரு வருஷம் இவர் கல்கத்தாவில் இருந்திருக்கிறார். நான் சிறையில் இருப்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவையாவது அவர் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படியிருந்த போதிலும் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் அவரைப் போய்ப் பார்த்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்று எண்ணியிருந்தேன், ஆனால் என்ன ஆயிற்று? நான் விடுதலையாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாலேதான் அவர் சீமைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கல்கத்தாவில் அவர் நடத்திய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு எனக்கு அடியோடு புளித்துப் போய்விட்டது. இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்று தீர்மானித்து விட்டேன்!"
"அப்படிச் சொல்லாதே, சீதா! கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்ததே மெய் என்று ஒரு பழமொழி உண்டு. நீ இல்லாதபோது நீ கண்ணால் பார்க்காத விஷயங்களைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக்கொண்டு ஒன்றையும் முடிவு கட்டக் கூடாது. உன் பேரில் ராகவனுக்குக் கோபம் ஏற்படவும் காரணம் இருக்கிறது. சூரியாவுக்கு நீ வீட்டில் இடம் கொடுத்ததினாலும் பிற்பாடு ஜெயிலுக்குப் போனதினாலும் ராகவனுக்கு உத்தியோகம் போய்விட்டது. உத்தியோகம் என்றால் சாதாரண உத்தியோகமா? மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள உத்தியோகம். உன்னுடைய காரியத்தினால் அவ்வளவு பெரிய சர்க்கார் உத்தியோகம் போச்சு என்றால் புருஷனுக்குக் கோபமாயிராதா?" என்றார் கிட்டாவய்யர். "அந்த வேலை போனதினால் ஒன்றும் மோசமில்லை, மாமா! அதைவிடப் பெரிய சம்பளத்துடன் அவருக்குப் பாங்கி வேலை கிடைத்திருக்கிறது" என்றாள் சீதா. "அது எப்படியிருந்தாலும் சரி, ராகவன் சீமையிலிருந்து வந்தவுடன் அவனை நான் பார்க்கப் போகிறேன், நீயும் என்னுடன் வரவேண்டும். உங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் உள்ள தடங்கல்களையெல்லாம் போக்கி மறுபடியும் உங்களைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். மறு உலகத்தில் உன் தாயாரின் ஆத்மாவும் சாந்தி அடையும். இருக்கட்டும், சீதா! உன் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லையா?" என்று கிட்டாவய்யர் கேட்டார்.
"மாமா! எனக்கு அப்பாவைப் பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. அது ஒரு ஊகமான சந்தேகந்தான். உங்களிடம் சொல்லக்கூட என் மனம் தயங்குகிறது. நாக்குக் கூசுகிறது." "என்னிடம் உனக்கு என்ன கூச்சம். அம்மா! என்ன விஷயமிருந்தாலும் தயக்கமில்லாமல் சொல்லு!" "அப்பா இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதாக எனக்குச் சந்தேகம், மாமா!" "சிவசிவ சிவா! கேட்பதற்கே கர்ண கடூரமாயிருக்கிறதே!- எதனால் உனக்கு இப்பேர்ப்பட்ட சந்தேகம் உண்டாயிற்று சீதா?" "நானும் அம்மாவும் பம்பாயில் இருந்தபோது, ஒரு ஸ்திரீ வந்து எனக்காக ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்துவிட்டுப் போனது ஞாபகம் இருக்கிறதல்லவா? அம்மா உங்களிடம் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாளே?" "ஞாபகம் இருக்கிறது. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" "அந்த ஸ்திரீயை ஒரு சமயம் நான் டில்லியில் பார்த்தேன். அவளுடன் தாடி வளர்ந்த சாயபு ஒருவரையும் கண்டேன். என் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் உதித்தது. பிறகு நான் டில்லியிலிருந்து கல்கத்தாவுக்குப் போகும் மார்க்கத்தில் ஆக்ராவில் ஒரு பெரிய ஆபத்து எனக்கு வந்தது. ரயிலில் ஒரு பெட்டியை எடுத்ததாகத் திருட்டுக் குற்றம் சாட்டி என்னைக் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
திக்குத்திசை புரியாமல் நான் திகைத்து நின்ற சமயத்தில் ஒரு சாயபு கோர்ட்டுக்கு வந்து அந்தப் பெட்டியை அவர் திருடியதாக ஒப்புக் கொண்டார். அதற்காகத் தண்டனையும் அடைந்தார். எனக்காக அப்பேர்ப்பட்ட தியாகத்தைச் செய்தவர் யாராயிருக்கும் என்று கல்கத்தா சிறையில் வசித்தபோது யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அப்பாவாக இருக்கலாமென்று தோன்றியது. அப்புறம் யோசிக்க யோசிக்க அவர்தான் என்று உறுதி பெற்றேன்." "பகவானே! இப்படியும் உண்டா? நீ சொல்வது ஏதோ கதை மாதிரி இருக்கிறதே தவிர, உண்மையாகவே தோன்ற வில்லை. துரைசாமிக்கு இப்படிப் புத்தி கெட்டுப்போகும் என்று யாரால் நம்ப முடியும்? ஏதோ ஸ்திரீ விஷயமான சபலம் இருந்தாலும், கொஞ்ச நாளைக் கெல்லாம் விட்டுத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அதற்காக மதம்விட்டுமதம் மாறுவார்களா? அதிலும் எப்பேர்ப்பட்ட மதம்? கோயிலை இடிக்க வேண்டும்; விக்கிரகத்தை உடைக்க வேண்டும் என்று சொல்லும் மதம்! மத சம்பந்தமான விஷயங்களில் உன் புருஷன் எப்படி அம்மா!" "அவருக்கு ஹிந்து மதத்தில் ரொம்ப பற்று உண்டு. வேறு மதங்களைப் பிடிப்பதேயில்லை. அதிலும் முஸ்லிம் மதம் என்றால் அவருக்கு ரொம்பக் கோபம் வரும்.
சர்க்கார் உத்தியோகம் பார்த்தபோது அவருக்குக் கீழேயிருந்த துருக்க உத்தியோகஸ்தர்களை அவருக்கு மேலே தூக்கிப் போட்டு விட்டார்களாம். அதனால் அந்த மதத்தின் பேரிலேயே அவருக்கு அசாத்தியமான கோபம்" என்றாள் சீதா. "பிற மதத்தின் பேரில் கோபத்துக்குக் காரணம் அழகாய்த்தானிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஹிந்து மதத்தில் பற்று உள்ள வரையில் விசேஷந்தான். எப்படியாவது நான் திருத்தி விடுகிறேன் பார், சீதா! கூடிய சீக்கிரம் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் முடிந்துவிடும்" என்றார் கிட்டாவய்யர். "மாமா! என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்றா சொல்கிறீர்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? காரணமில்லாமல் அடிக்கடி மனதில் பீதி உண்டாகிறது. அப்போதெல்லாம் மார்புப் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அடிவயிற்றை ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. இராத்திரியில் நிம்மதியான தூக்கம் கிடையாது. மாமா! பயங்கரமான கனவுகள் காண்கிறேன்!" என்றாள் சீதா. அவளுடைய உடம்பு நடுங்கிற்று; கண்ணீர் பெருகிற்று. இதுவரை படுத்துக்கொண்டும் சாய்ந்து கொண்டும் பேசி வந்த கிட்டாவய்யர் எழுந்து உட்கார்ந்தார். சீதாவின் தலையைத் தொட்டுக்கொண்டு, "குழந்தாய்! அதெல்லாம் வீண் பிரமை. ஏதோ பழைய கஷ்டங்களை அநுபவித்த ஞாபகத்தினால் உன் மனம் கொஞ்சம் பேதலித்திருக்கிறது. அப்படிப் பீதி உண்டாகும் போதெல்லாம் ராமராம என்று தாரக நாமத்தைச் சொல்லு; பீதி மறைந்துவிடும். மேலும் நான்தான் உன்னுடன் வரப் போகிறேனே! உனக்கு ஒரு கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார் கிட்டாவய்யர். இந்தச் சமயத்தில் லலிதா அந்த அறைக்குள்ளே வந்தாள். கிட்டாவய்யர் கடைசியில் கூறிய மொழிகளைக் கேட்டுவிட்டு "அப்பா! இது என்ன? தேவபட்டணத்துக்கு என்னுடன் வரப்போவதாகச் சொன்னீர்கள். அரைமணியில் மறந்துவிட்டு இப்போது சீதாவுடன் புறப்பட ஆயத்தம் செய்கிறீர்களே! இந்த பம்பாய் அத்தங்காளிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி கட்டாயம் இருக்கிறது" என்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஏழாம் அத்தியாயம்
நித்திய வாழ்வு
இந்த உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில சமயம் சிறப்புடன் வாழ்வதும் பிறகு அழிந்து போவதும் வழக்கமாயிருக்கையில், பாரத தேசம் மட்டும் பல்லாயிரம் வருஷமாக நித்திய வாழ்வு பெற்றிருப்பதின் காரணம் என்ன என்பது பற்றிக் கிட்டாவய்யர் சீதாவிடம் கூறினார் அல்லவா? அவருடைய புதல்வன் சூரியநாராயணன் சற்று நேரத்துக்கெல்லாம் அதற்கு வேறொரு காரணம் கூறினான். கிட்டாவய்யர் வீட்டுத் திண்ணையில் கூடிய பார்லிமெண்டு சபையில் நடந்த விவாதத்தின்போது சூரியா அந்தக் காரணத்தைச் சொன்னான். "கொஞ்சம் இதைக் கேளுங்கள்; ஒரு குண்டூசியில் வரிசையாகத் தபால்தலைகளைக் குத்திக் கோப்பதாக வைத்துக்கொள்ளலாம். அதில் மேலேயுள்ள ஒரே ஒரு தபால், மனிதன் தோன்றிய பிறகு சென்றிருக்கும் காலம். அதற்கு முன்னால், கீழேயுள்ள அவ்வளவு தபால்தலைகளின் அளவுள்ள காலம், இந்த உலகத்தில் மனிதனைத் தவிர மற்ற பல்வேறு ஜீவராசிகள் வாழ்ந்து வந்தன. ஜீவராசிகளிலே தென்னை மர உயரமும் மதுரைக் கோயில் கோபுரத்தின் நீளமும் உள்ள சில பிராணிகள் இருந்தன. சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் அந்தப் பயங்கரமான பிராணிகள் இந்த உலகத்தில் அங்குமிங்கும் அகப்பட்டதையெல்லாம் விழுங்கிக்கொண்டு சஞ்சரித்தன. அந்தப் பிராணிகள் எல்லாம் இப்போது எங்கே? அவற்றின் இனமே அழிந்து இருந்த இடந் தெரியாமல் மறைந்து விட்டன. சரித்திர ஆராய்ச்சிக் காரர்கள் வெகு அபூர்வமாக அத்தகைய பிராணிகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றும், கரையாத பனித்திரளின் அடியில் அகப்பட்டுக் கொண்டபடியால் அந்த எலும்புக்கூடுகள் லட்சக்கணக்கான வருஷம் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்து இப்போது அகப்படுகின்றன. அவ்வளவு பிரமாண்டமான பிராணிகள் அவற்றின் வர்க்கத்து வாரிசே இல்லாமல் நசித்துப் போனதின் காரணம் என்ன? மாறிக்கொண்டு வந்த உலகத்தின் சீதோஷ்ண நிலைமைக்கேற்ப அவை மாறாமலிருந்ததுதான். மாறிக்கொண்டு வந்த பிராணிகளோ இன்று வரையில் வாழையடி வாழையாக வாழ்ந்து பல்கிப் பெருகி வருகின்றன.
"மனித குலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் பல தேசங்களில் மக்கள் ஒவ்வொரு சமயம் மிக உன்னத நிலைமையில் இருந்திருக்கிறார்கள். பாபிலோனியா, அஸ்ஸீரியா, கிரீஸ், எகிப்து முதலிய அத்தகைய பழைய காலத்து நாகரிக மக்களின் சமூகங்கள் நசித்து அழிந்து போய்விட்டது. ஏன் தெரியுமா? காலத்துக்கேற்ப அந்தச் சமூகங்கள் மாறாமல் அப்படியே இருக்கப் பார்த்ததுதான் காரணம். ஆனால் நம்முடைய பாரத தேசமோ உலகில் வேறு எந்தத் தேசத்தையும் காட்டிலும் அநாதியான நாகரிகத்தை உடையது. ஆயினும் இன்றுவரை அழிந்து போகாமல் இருக்கிறது. காரணம் என்ன? இந்தத் தேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கால மாறுதலுக்கு ஏற்பத் தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ஒரே ஒரு உதாரணத்தைக் கேளுங்கள். வேத காலத்தில் நம் முன்னோர்கள் பலவித யாகங்கள் செய்தார்கள். அந்த யாகங்களில் குதிரைகள், மாடுகள், ஆடுகள் முதலிய பல ஜீவப் பிராணிகளைப் பலி கொடுத்தார்கள். அந்த மிருகங்களின் மாமிசத்தை அவிப்பாகம் என்பதாகத் தேவர்களுக்கு அளித்து மிச்சத்தைத் தாங்களும் உண்டார்கள்.
கௌதம புத்தர் அவதரித்து யாகங்களைக் கண்டித்தார். யாகங்களில் பலி கொடுப்பதைக் கண்டித்தார். கௌதம புத்தருடைய கொள்கைகள் உலகமெங்கும் பரவின. அந்தக் கொள்கைகளில் முக்கியமானவற்றை அந்தக் காலத்துப் பாரத மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; யாகங்கள் நின்று போயின. பிற்காலத்தில் ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலிய ஆச்சாரிய புருஷர்கள் யாகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. துளசிதாஸர், துக்காராம், தியாகராஜர் முதலிய பக்த சிரோமணிகளும் யாகம் செய்யச் சொல்லவில்லை.,இந்த ஒரு உதாரணத்தைப்போல ஆயிரம் உதாரணம் ஹிந்து சமூகத்தின் சரித்திரத்திலிருந்து எடுத்துக்காட்டலாம். அவ்விதம் அடிக்கடி புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஆச்சாரங்களையும் வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு வந்ததினால் ஹிந்து சமூகம் இன்றைக்கு ஜீவசக்தி பெற்றிருக்கிறது.
"அத்தகைய அவசியம் - ஹிந்து சமூகம் பல ஆசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. ஹிந்து தர்மத்துக்குக் கேடு நேராமல் என்னென்ன சமூக சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று போதனை செய்ய மகாத்மா காந்தி அவதரித்திருக்கிறார். அவருடைய போதனையின்படி தீண்டாமை, சாதி வித்தியாசம், குழந்தை மணம் முதலிய வழக்கங்களை ஒழித்தேயாக வேண்டும். நம்முடைய பாட்டனார்களின் காலத்தில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களையே இன்னமும் கைக்கொள்ளலாம் என்று எண்ணினோ மானால் நம்மைப் போன்ற அறிவீனர்கள் இல்லை என்று ஏற்பட்டுவிடும்." "பாரத தேசத்து மக்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு வந்தால் இந்த உலகில் நிலைபெற்று வாழலாம்; மேன்மையாகவும் வாழலாம். வழக்கங்களை மாற்ற மாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தால் சரித்திரத்தில் எத்தனையோ ஜீவப்பிராணிகளும் எத்தனையோ தேசமக்களும் அழிந்து போனது போல நாமும் அழிந்துபோக வேண்டியதுதான்!...." சூரியாவின் இந்த நீண்ட பிரசங்கத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான பிச்சுவய்யர் இப்போது குறுக்கிட்டு, "நீ சொல்லுகிறது சரிதான், அப்பா! யார் இல்லை என்கிறார்கள்? நம்முடைய காலத்திலேயே எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. நான் சிறு பையனாயிருந்த போது பிராமணன் சாப்பிடுவதை மற்றச் சாதியார் பார்க்கக் கூடாது. சமபந்தி போஜனம் செய்தால் சாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள். அந்த ஆசாரத்தையெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள்? அந்தக் காலத்தில் இந்த அக்கிரகாரத்தில் ஒருவர்கூடத் தலையில் கிராப் வைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்ததில்லை. இப்போது எந்த வீட்டிலாவது கிராப் வைத்துக் கொள்ளாத பையன் இருந்தால் காட்டுப் பார்க்கலாம்! கிடையவே கிடையாது!" என்று சொன்னார்.
"மாமா! இந்த மாதிரி முக்கியமில்லாத விஷயங்களில் மாறுதல் நடந்திருக்கிறது, ஆனால் இது போதுமா? போதாது. நம்முடைய பாட்டனார் காலத்தில் பண்ணையாட்களை நடத்தியது போல இந்தக் காலத்திலும் நடத்தலாம் என்று நினைத்தோமானால் பெரும் பிசகாக முடியும்...." "பார்த்தீராங்காணும், பஞ்சுவய்யரே! பையன் எங்கேயெல்லாமோ சுற்றி என்னவெல்லாமோ சக்கரவட்டமாகப் பேசுகிறானே என்று பார்த்தேன், கடைசியில் பண்ணை ஆள் விஷயத்துக்கு வந்து விட்டான். அப்பனே! அந்த விஷயம் ஹைகோர்ட்டு வரையில் போய்த் தீர்ந்து போய்விட்டது. அதைப் பற்றி நீ இப்போது பேச வேண்டாம். வேறு ஏதாவது இருந்தால் சொல்லு" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "சாஸ்திரிகள் சொல்லுவது சரிதானே, சூரியா! இந்தக் கிஸான் கிளர்ச்சி விஷயம் இருக்கவே இருக்கிறது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ சுயராஜ்ய இயக்கத்தைப் பற்றிச் சொல்லு. மகாத்மா காந்தி முதலானவர்கள் இவ்வளவு பாடுபட்டார்களே! என்ன ஆயிற்று? சுயராஜ்யம் எப்போது வரப்போகிறது? நேதாஜி சுபாஷ் போஸ் இப்போது எங்கே இருக்கிறார்? ஜயப்பிரகாச நாராயணன் என்ன சொல்லுகிறார்? 'வெள்ளைக்காரா? வெளியே போ!' என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தீர்களே, அதன் பலன் என்ன? வெள்ளைக்காரன் எப்போது வெளியே போகப் போகிறான்?" என்று சீமாச்சுவய்யர் கேட்டார். "இவர்கள் தொண்டை கிழியும்படி 'வெள்ளைக்காரா! வெளியே போ!' என்று எங்கே கத்தி னார்கள்? நம்ப ஊர் சந்தைத் தோப்பில் நின்றுகொண்டு கத்தினார்கள். வெள்ளைக்காரனுடைய காதில் விழும்படி கத்தினால்தானே? அப்படிக் கத்தியிருந்தால் வெள்ளைக்காரன் வெளியே போயிராவிட்டாலும் அவனுடைய காதாவது செவிடாகப் போயிருக்கும்! அப்படியொன்றும் இவர்கள் செய்யவில்லையே! குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்; நம்ப ஊர்க் கழுதைப் பொட்டலில் வெள்ளைக்காரன் இருக்கிறானா, என்ன? இவர்களுடைய கூச்சலைக் கேட்டுவிட்டு வெளியே போவதற்கு?" என்று பஞ்சுவய்யர் வெளுத்து வாங்கினார்.
"மாமா! கொஞ்சம் பொறுங்கள். இப்போது உங்களுக்கு எகத்தாளமாய்த் தானிருக்கும். ஆனால் கொஞ்ச நாளில் நீங்களே பார்க்கப் போகிறீர்கள்! வெள்ளைக்காரன் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறத்தான் போகிறான்!" என்றான் சூரியா. "சரிதான், அப்பா, சரிதான்! முப்பது வருஷமாய் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன். முன்னொரு சமயம் 'ஒரு வருஷத்திலே சுயராஜ்யம் வரப் போகிறது' என்று சொன்னார்கள். அது வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டது. அப்புறம் உப்புச் சத்தியாக்கிரஹத்தின்போது சுயராஜ்யம் 'இதோ வரப் போகிறது!' என்றார்கள். 'சுயராஜ்யம் வாங்கி வருகிறதற்காக மகாத்மா லண்டனுக்குப் போயிருக்கிறார்!' என்றார்கள். 'வைஸ்ராய் இர்வின் சரணாகதி அடைந்து விட்டான்' என்றார்கள். கடைசியில் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. இப்போதும் 1942-ம் வருஷத்தில் 'ஆச்சுப் போச்சு' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேதாஜி படையெடுத்து வருகிறார் என்று சொன்னார்கள். எல்லாம் வெறும் சவுடால் பேச்சு என்று ஆயிற்று. அப்பேர்ப்பட்ட பயங்கரமான யுத்தம் நடந்தபோது, ஹிட்லர் ஒரு பக்கமும் டோ ஜா ஒரு பக்கமும் நெருக்கிக் கொண்டிருந்தபோதே, - இங்கிலீஷ்காரன் மசியவில்லையே! யுத்தத்தில் ஜெயித்தபிறகா இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுத்து விடப் போகிறான்!" என்றார் வேலாயுத முதலியார்.
"முதலியார்வாள்! உங்களைப் போல்தான் நானும் நினைத்தேன். இன்னும் அநேகரும் யுத்த சமயத்திலேதான் இந்தியாவின் சுயராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அவதார புருஷரான மகாத்மா வேறு விதமாக நினைத்தார். யுத்த காலத்தில் இங்கிலீஷ்காரர்களுக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று சொன்னார். நல்ல பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படுவது போல நாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். அவர் பேச்சை மீறி என்னைப் போல் எத்தனையோ பேர் இரகசியப் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டோ ம். ஆனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை. கடைசியாக இப்போது மகாத்மாவின் வழியினால் தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் கிட்டப் போகிறது என்ற நிச்சயத்திற்கு வந்திருக்கிறோம்!" என்றான் சூரியா. "நீயும் உன்னைப் போன்றவர்களும் மெத்தப் படித்த புத்திசாலிகள். அதனால் உங்களுக்குக் காந்தி காட்டுகிற வழிதான் சரியான வழி என்று நிச்சயிக்க இவ்வளவு காலம் ஆயிற்று. ஆனால் நாங்கள் எல்லோரும் படிப்பு வாசனையில்லாத பட்டிக்காட்டு மனிதர்கள். ஆகையால் ஆரம்பத்திலேயே அந்த நிச்சயத்துக்கு வந்துவிட்டோ ம். இந்தியாவுக்குக் கதிமோட்சம் பிறந்தால் மகாத்மாவினால்தான் பிறக்க வேண்டும். வேறு யாராலும் இல்லை என்று முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே முடிவு செய்து விட்டோ ம். உன் அப்பாவும் நானும் அன்றைக்குக் கதர் கட்ட ஆரம்பித்தவர்கள் இன்றைக்கும் கதர் கட்டி வருகிறோம். தெரியுமோ, இல்லையோ? சீமாச்சு இப்போது விற்கிறது மில் துணியானாலும் அவன் கட்டிக் கொள்கிறது கதர் வேஷ்டிதான்!" என்று சொன்னார் பஞ்சுவய்யர்.
"மாமா! காந்தி மகானிடம் உங்களுக்கு அவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் எப்போது இருக்கிறதோ, அப்போது அவர் சொல்கிறதை முழுவதும் கேட்டு அப்படியே நடக்க வேண்டியதுதானே?" என்றான் சூரியா."என்ன காரியத்தில் இதுவரை மகாத்மா சொல்கிறபடி நாங்கள் நடக்கவில்லை, நீ மட்டும் நடந்துவிட்டாய் என்பதைச் சொல்லேன் பார்க்கலாம்!" என்றார் அப்பாதுரை சாஸ்திரிகள். "சுயராஜ்யம் கூடிய சீக்கிரம் வரப் போகிறது. அதற்குள்ளே நம்மிடமுள்ள குறைகளை நீக்கிக்கொண்டு சுயராஜ்யத்துக்குத் தயாராக வேணும் என்று மகாத்மா சொல்கிறார்." "என்ன குறை எங்களிடம் இருக்கிறது, அதை எப்படி நீக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லேன்!" "முக்கியமாக, கிராமங்களில் உள்ள மிராசுதாரங்களுக்கும் குடிபடைகளுக்கும் தகராறு இருக்கக்கூடாது. உழைக்கிறவனுக்கு உழைப்பின் பலன் என்கிற கொள்கையை எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்." "சூரியாவையரே! நீ வேறு என்ன வேணுமானாலும் பேசும், இந்த ஆள்படை விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவேண்டாம். உம்முடைய தகப்பனார் ஏற்கெனவே இடங்கொடுத்துக் கொடுத்து அதன் பலனை இப்போது அநுபவிக்கிறார். அவருடைய உயிருக்கே உலை வைக்கப் பார்த்தார்கள். தெய்வாதீனமாகப் பிழைத்தார்!..." "அப்பாவை எங்களுடைய ஆட்கள் கொல்ல யத்தனித்தார்கள் என்பதை நான் நம்பவே மாட்டேன், அப்படி ஒரு நாளும் நடந்திராது. யாரோ வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் செய்த காரியத்துக்கு ஏழைக் குடிபடைகள்மேல் எதற்காகப் பழியைப் போடுகிறீர்கள்!" "சரி விடு! உன்னிடம் இதைப்பற்றி வாதம் இடுவானேன்!
போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சில நாளைக்கெல்லாம் உண்மை என்னவென்று தெரிந்து விடுகிறது. அப்புறம் இந்த மாதிரி பேச மட்டாய்!" இந்தச் சமயத்தில் லலிதா வீட்டு வாசலுக்கு வந்து, "அண்ணா! உன்னை அப்பா கூப்பிடுகிறார்!" என்றாள். "சரி அப்பாவைப் போய்ப் பார்! அவர் சொல்கிறதையாவது கேட்டு அதன்படி செய்!" என்று சொல்லிவிட்டுத் திண்ணைப் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் சபையைக் கலைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். சூரியா தன் தந்தை இருந்த அறைக்குள் சென்று அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்தான். "மன்னியுங்கள், அப்பா! நாங்கள் சத்தம் போட்டுப் பேசியது உங்களுக்குத் தலைநோவாக இருந்திருக்கும். தெரியாமல் இரைந்து பேசிவிட்டேன்!" என்றான். "சூரியா! நீ பேசியதெல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தது. அதனால் எனக்குத் தலைவலி உண்டாகவில்லை. ரொம்பவும் சந்தோஷம் உண்டாயிற்று. உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நானே எண்ணிக் கொண்டிருந்தேன். சில நாளாக நான் யோசனை செய்து பார்த்ததில் நீ சொல்வதுதான் சரி என்ற உன்னுடைய முடிவுக்கு வந்திருக்கிறேன். நீ இந்த ஊரில் தங்கி உன்னுடைய இஷ்டப்படி எல்லாம் நடத்து; குடிபடைகளுக்கு என்ன செய்யவேண்டுமோ செய். நான் உனக்குப் பூரண அதிகாரம் கொடுக்கிறேன். எனக்கு இந்த ஊரில் இருக்க இனிப்பிரியமில்லை. வானப் பிரஸ்த ஆசிரமத்தை என்னுடைய மனம் நாடுகிறது. எங்கேயாவது யாத்திரை போக வேண்டும் என்று தோன்றுகிறது. லலிதா தேவபட்டணத்தில் வந்திருக்கும்படி கூப்பிடுகிறாள். காசி ஹரித்வாரம், பத்திரிநாத் முதலிய ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதற்குச் சீதா என்னை அழைத்துப் போவதாகச் சொல்கிறாள்..."
"சீதா எதற்காக உங்களை அழைத்துப் போக வேணும், அப்பா! நான் அழைத்துப் போகிறேன். அந்த இடங்களெல்லாம் எனக்குத் தெரியும், காசியில் ஆறுமாதம் இருந்தேன்." "சூரியா! நீ என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போவதைக் காட்டிலும் இங்கே இருந்து குடிபடைகளைக் கவனித்துச் செய்ய வேண்டியதைச் செய்தால் அதுவே எனக்குப் பரம திருப்தியாயிருக்கும்..." இந்தச் சமயத்தில் சரஸ்வதியம்மாள் உள்ளேயிருந்து வந்து, "சூரியா! அப்பாவோடு அதிகமாகப் பேச்சுக் கொடுக்காதே! அர்த்த ராத்திரி ஆகப்போகிறதே! அவர் தூங்க வேண்டாமா?" என்றாள். "அம்மா சொல்வது சரிதான்; தூங்குங்கள் அப்பா! விவரமாக நாளைக்குப் பேசிக்கொள்ளலாம். எப்படியும் உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்வேன்!" என்றான் சூரியா. மறுநாள் தந்தையுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குச் சூரியாவுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிட்டாவய்யரைத் தீர்த்தயாத்திரை அழைத்துப் போவது யார் என்ற பிரச்சனையும் எழுவதற்கு இடமில்லாமல் போய் விட்டது. திருமூலர் என்னும் மகான் மனித வாழ்வின் அநித்தியத்தைக் குறிப்பிடுவதற்கு ஓர் அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார்.
'அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரோடு மந்தணம் புகுந்தார்!
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே!
இராத்திரி அறுசுவை உண்டி தயாரித்து வைத்ததை ஒரு கிரகஸ்தர் சாப்பிட்டார், பிறகு மனைவியோடு சயன அறைக்குச் சென்றார், 'இடது மார்புக்கு அருகில் கொஞ்சம் வலிக்கிறது!' என்று சொன்னார். தூங்கினால் வலி போய்விடும் என்று படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான்! பிறகு எழுந்திருக்க வேயில்லை. திருமூலர் வாக்கின் கடைசி வரி கிட்டாவய்யரின் விஷயத்தில் பலித்துவிட்டது. இராத்திரி சூரியாவிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டு நிம்மதியோடு படுத்துத் தூங்கியவர் மறுபடி எழுந்திருக்கவே இல்லை. அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் பரிதாபமான ஓலக்குரல்களும் துயரம் ததும்பிய பிரலாபமும் ஒப்பாரியும் ஒருமித்து எழுந்தன. எல்லாரிலும் அதிகத் துயரத்துடன் புலம்பி அதிகமாகக் கண்ணீர் விட்டுக் கதறியவள் கிட்டாவய்யரின் மருமகளாகிய சீதாவேயாகும்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
எட்டாம் அத்தியாயம்
"மாமழை போற்றுதும்"
போர்க்களத்தில் அம்பு மழையைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட இலட்சியத்தை நோக்கிச் செல்லும் வீரனைப்போல் அந்த ரயில் வண்டி காற்றையும் மழையையும் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதாவும், லலிதாவும், லலிதாவின் புருஷன் பட்டாபிராமனும் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய கவனமும் வண்டிக்கு வெளியே தோன்றிய காட்சிகள் சென்றிருந்தது. வானம் முழுதும் கருமேகங்கள் மூடி மழை பெய்து கொண்டிருந்தபடியால் பகல் நேரம் அந்திப் பொழுதைப் போல் மங்கி இருள் அடைந்து தோன்றியது. சடசடவென்று அடித்த மழை ஒரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளைத் தாக்கிச் சுக்கு நூறாக்கிவிட முயன்று கொண்டிருந்தது. ஆனால் இன்னொரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளின் வழியாக வெளியே தோன்றிய பலவிதக் காட்சிகள் தெளிவாகப் புலனாகிக் கொண்டிருந்தன. நீர்வளமும் நிலவளமும் நிறைந்து செழித்த பிரதேசத்தின் வழியாக ரயில் அச்சமயம் போயிற்று.
பெருங் காற்றில் பேயாட்டம் ஆடிய தென்னை மரங்களின் மட்டைகள் வானத்து மேகங்களின்மீது கோபங்கொண்டு தாக்கி அடித்தன. அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த மூங்கில் மரங்கள் நாலா பக்கமும் சுற்றிச் சுற்றி மழைத் துளிகளைத் தாக்கிச் சிதறச் செய்து கொண்டிருந்தன. மாமரக்கிளைகள் அலங்கோலமாக ஆடியபோது, அவற்றில் மழைக்கு ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருந்த பட்சிகளின் பாடு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது.
திடீரென்று ஒரு மாமரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்தது. அதிலிருந்த ஒரு காக்கை மழையினால் நனைந்த சிறகுகளை விரிக்க முடியாமல் விரித்து, பறக்க முடியாமல் பறந்து கரகரவென்று கட்டிப் போயிருந்த தொண்டையினால், "அபயம்" "அபயம்" என்று கூவிக்கொண்டு இன்னொரு மரத்தில் போய் உட்கார்ந்தது. "ஐயோ! பாவம்!" என்று சீதா பரிதாபக் குரலில் கூறிவிட்டு லலிதாவைப் பார்த்தாள். லலிதா குழந்தை பாலுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தபடியால் பட்டாபிராமனுடைய முகத்தை நோக்கினாள். பட்டாபிராமன் அச்சமயம் சீதாவைக் கவனித்துக் கொண்டிருந்தான். மழையில் நனைந்த காக்கைக்கு அவள் இரக்கப்பட்டதைக் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். "அந்தக் காக்கையின் பாடு கஷ்டந்தான்!" என்று சொன்னான். "நான் பிறந்த வேளையில் அந்தக் காக்கையும் பிறந்திருக்க வேண்டும்!" என்றாள் சீதா. லலிதா திரும்பிப் பார்த்து, "எந்தக் காக்கை? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்!" என்று கேட்டாள். சீதாவும் பட்டாபிராமனும் பேசாமல் இருந்தார்கள். "ஒரே மௌனமாயிருக்கிறீர்களே? என்ன விஷயம் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?" என்று லலிதா மறுபடியும் கேட்டாள். "ஒரு மரக்கிளை ஒடிந்து விழுந்தது, அதிலிருந்து ஒரு காக்கை அலறி அடித்துக் கொண்டு இன்னொரு மரத்துக்குப் பறந்து சென்றது! நீ வனிக்கவில்லை!" என்றான் பட்டாபிராமன். "பாலு என்னமோ கேட்டான் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை" என்றாள் லலிதா. "அதைத்தான் நானும் சொன்னேன்!" என்றான் பட்டாபிராமன். "குழந்தையைக் காட்டிலும் எனக்கு காக்கை ஒசத்தியில்லை!" என்று சொன்னாள் லலிதா. "குழந்தையைக் காட்டிலும் காக்கை ஒசத்தி என்று யார் சொன்னது?" என்றான் பட்டாபிராமன். ரயில் போய்க் கொண்டேயிருந்தது.
ஒரு ஊருக்குப் பக்கத்தில் வயல்கள் சூழ்ந்திருக்க பொட்டைத் திடலில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சிதையின் தீ மழையில் நனைந்து அணைந்து போய் விடாதபடி சிலர் அதன்மேல் அவசர அவசரமாகக் கீற்றுப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். "அதோ பார், அம்மா! நெருப்புக்கு மேலே பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்! எதற்காக அம்மா?" என்று பட்டு கேட்டாள். எல்லாரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள். சிதை எரிவதைக் கண்டதும், "மாமாவையும் இந்த மாதிரி தானே சிதையில் வைத்துக் கொளுத்திவிட்டு வந்தோம்?" என்று சீதா சொல்லி விட்டு விம்மி அழத் தொடங்கினாள். லலிதாவின் கண்களிலும் கண்ணீர் துளித்தது ஆனால் அவள் அழவில்லை. "அப்பா செத்துப் போனது கூட எனக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. நீ துக்கப்படுகிறதைப் பார்த்தால்தான் அதிக வருத்தமாயிருக்கிறது!" என்று லலிதா கூறினாள். "மாமா செத்துப் போனதற்காக யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் மிக மேலான கதிக்குப் போயிருப்பார்.
மோட்சங்களுக்குள்ளே மிக உயர்ந்த மோட்சத்துக்கு அவர் நிச்சயம் போயிருப்பார்!" என்றான் பட்டாபிராமன். சீதா விம்மலை நிறுத்திக் கண்களையும் துடைத்துக் கொண்டு, "அது வாஸ்தவந்தான். சூரியாவைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றதற்கே அவர் எவ்வளவோ மேன்மையான கதிக்குப் போயிருக்க வேண்டும்!" என்றாள். "சந்தேகமில்லை; பத்து நாளைக்குள் சூரியா குடியானவர்களை எவ்வளவு சரிக் கட்டிக் கொண்டு விட்டான்!" என்று பட்டாபிராமன் சொன்னான். "அப்பா செத்துப் போன அன்றைக்கே குடிபடைகள் எல்லாம் கூட்டமாய் வந்து கதறி அழுது விட்டார்களே!" என்றாள் லலிதா. ரயில் போய்க் கொண்டேயிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாகக் காணப்பட்டது. "இது என்ன, ஒரே ஜலப்பிரளயமாகவல்லா இருக்கிறது? ராஜம்பேட்டையைக் காட்டிலும் இங்கே மழை அதிகம் போலிருக்கிறதே!" என்றான் பட்டாபிராமன். "நாம் ரயில் ஏறிக் கிளம்பிய பிறகு அங்கேயும் மழை கொட்டியிருக்கலாம்," என்றாள் சீதா.
"மழை இல்லை, மழை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது அடைத்து வைத்துக் கொண்டு கொட்டுகிறது!" என்றாள் லலிதா. "மழை கொஞ்சநாள் இல்லாமற் போனால்தான் மழை எவ்வளவு அவசியமானதென்று ஜனங்களுக்குத் தெரிகிறது. வேத காலத்து ரிஷிகள் சூரியனை எப்படி தோத்திரம் செய்தார்களோ அப்படியே வருணனையும் பிரார்த்தனை செய்தார்கள். சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காவியத்தில் சூரியனையும் சந்திரனையும் போற்றிவிட்டு, "மாமழை போற்றுதும்" மாமழை போற்றுதும்" என்று அழகாகப் பாடியிருக்கிறது!" என்று பட்டாபிராமன் தன்னுடைய புலமையைத் தெரியப்படுத்திக் கொண்டான். "இருந்தாலும் மழையை ரொம்பப் போற்றி விடாமலிருந்தால் நல்லது. இப்படி ஒரே கொட்டாகக் கொட்டினால் ஏழை ஜனங்கள் என்ன செய்வார்கள்? அதோ பாருங்கள்!" என்றாள் லலிதா. அவள் சுட்டிக்காட்டிய பக்கத்தில் ஒரு கிராமத்து வீதிகளுக்குள்ளே மழைத் தண்ணீர் ஆற்று வெள்ளம் போலப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குடிசை வீட்டின் கூரையைப் பெருங்காற்று அப்படியே பிய்த்துத் தூக்கி அப்பாலே எறிந்திருந்தது. குடிசையில் பாக்கி நின்ற குட்டிச் சுவர்கள் மழையில் நனைந்து கரைந்து கொண்டிருந்தன. குடிசைக்குள்ளேயிருந்த சட்டிப் பானை தட்டுமுட்டுச் சாமான்களை ஒரு ஸ்திரீயும் இரண்டு ஆண் பிள்ளைகளும் எடுத்து அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். "இந்த மாதிரி எவ்வளவு குடிசை இன்றைக்கு இடிந்து விழுந்து போச்சோ? அந்தக் குடிசைகளில் வசித்த ஏழை ஜனங்கள் எல்லாரும் என்ன கஷ்டப்படுவார்களோ?" என்று லலிதா பரிதாபப்பட்டாள். "எனக்கு இங்கேயே ரயிலிலிருந்து குதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ஓடிப்போய் வீடுவாசல் இழந்த அந்த ஏழை ஜனங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!" என்றாள் சீதா. மழை மேலும் கடுமையாகப் பெய்தது. காற்று இன்னும் தீவிர வேகமடைந்து மோதி அடித்தது. ரயில் அசைந்து ஆடிக்கொண்டும் திணறித் திண்டாடிக் கொண்டும் தண்டவாளங்களின் மீது ஊர்ந்தும் சென்று கொண்டேயிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஒன்பதாம் அத்தியாயம்
பட்டாபியின் புனர்ஜென்மம்
ரயில் தேவபட்டணம் ஸ்டேஷனை நெருங்கியபோது இரவு எட்டு மணி இருக்கும். ரயில் பாதையின் இரு பக்கமும் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் ரயில் வண்டியின் விளக்குகள் வரிசையாகப் பிரதிபலித்தன. அவ்வாறே தேவபட்டணத்தை அடுத்துள்ள சாலைகளில் போட்டிருந்த விளக்குகளும் பக்கத்தில் கடல் போலத் தேங்கியிருந்த தண்ணீரில் வரிசையாகப் பிரதிபலித்து மினுமினுத்தன. வானை மூடியிருந்த மேகங்களினாலும் பூமியில் சூழ்ந்திருந்த அந்தகாரத்தினாலும் கருமை உருக்கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் வரிசை வரிசையான மின்சார தீபங்களும் தண்ணீரில் அவற்றின் பிரதிபிம்பங்களும் சேர்ந்து ஏதோ ஒரு மாயாபுரி வானத்திலிருந்து பூமியில் இறங்கியிருக்கிறது போன்ற பிரமையை உண்டாக்கின. ரயில் ஸ்டேஷனுக்குள் சென்று நின்றதும் பட்டாபிராமன் முதலியவர்கள் ரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார்கள். கதவைத் திறந்தவுடனேயே ஊதல் காற்று சுளீர் என்று அடித்தது. கீழே அவர்கள் இறங்கி நின்ற இடத்தில் பிளாட்பாரத்தின் மேற்கூரை இருந்தபோதிலும் திறந்திருந்த இரு பக்கங்களிருந்தும் மழைச்சாரல் வந்து தாக்கியது. போர்ட்டர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டே வந்து சாமான்களைத் தூக்கிக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டேஷனுக்கு ஒரு பக்கத்திலிருந்து ஏராளமான ஜனங்கள் சொட்டச் சொட்ட நனைந்த துணிகளுடன் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தார்கள். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான ஸ்திரீகளும் புருஷர்களும் குழந்தைகளும் ரயில் பிளாட்பாரத்திலும் பிளாட்பாரத்துக்கு வெளியிலும் வந்து நிறைந்து விட்டார்கள். அவர்களுடைய துணியிலிருந்தும் உடம்பிலிருந்தும் சொட்டிய ஜலம் ரயில்வே ஸ்டேஷனை வெள்ளக்காடு ஆக்கியது. முதலில் இவ்வளவு பேரும் ரயில் ஏற வருகிறார்களா என்ன என்று எண்ணிப் பட்டாபிராமன் ஆச்சரியப்பட்டான். ஆனால் ஈரத்துணிகளுடன் வந்தவர்கள் யாரும் அந்த ரயிலுக்குள் ஏறவில்லை, ரயிலும் போய்விட்டது.
அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து இடிபட்டுக் கொண்டு பட்டாபிராமனும் அவனுடைய குடும்பத்தாரும் வெளியேற வேண்டி நேர்ந்தது. "இது என்ன கூட்டம்? இவ்வளவு பேரும் எந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருக்கிறார்கள்?" என்று பட்டாபிராமன் போர்ட்டரைக் கேட்டான். "இவர்கள் ரயில் ஏற வரவில்லை, ஸார்! இன்று சாயங்காலம் அடித்த புயலிலும் மழையிலும் இவர்களுடைய கூரைக் குச்சுகள் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. மழைக்குத் தங்க இடமில்லாமல் இங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். சனியன் பிடித்தவர்கள்!" என்றான் போர்ட்டர். "ஏன் அப்பா வீணாகத் திட்டுகிறாய்? ஏழை ஜனங்கள் வேறு எங்கே போவார்கள்?" என்றாள் சீதா. "எங்கேயாவது சத்திரம் சாவடி பார்த்துப் போய்த் தொலைகிறது தானே? தங்க இடமில்லாவிட்டால் ரயில்வே ஸ்டேஷன்தானா அகப்பட்டது? இன்றைக்குச் சாயங்காலத்திலிருந்து இவர்களைத் துரத்தித் துரத்தி எனக்குக் கையும் அலுத்துவிட்டது சத்தம் போட்டுப் போட்டு வாயும் வலிக்கிறது!" என்றான் போர்ட்டர். கஷ்டப்பட்டு வாடகை வண்டிகள் பிடித்து ஏறிக்கொண்டு பட்டாபிராமன் முதலியவர்கள் வீடு போய்ச் சேர்ந்தார்கள். வீடு சேர்ந்ததும் லலிதா சரசரவென்று வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். பட்டாபிராமன் ஆபீஸ் அறைக்குள் சென்று வந்திருந்த கடிதங்களைப் பார்த்துவிட்டுப் பத்திரிகை படிக்கத் தொடங்கினான். குழந்தைகள் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்குச் சென்றார்கள்.
சீதா மட்டும் சோகமே உருக் கொண்டவளாக ஈரமான துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். இலை போட்டானதும் லலிதா சாப்பிடக் கூப்பிடுவதற்காகக் கூடத்தில் வந்து பார்த்தாள். "இது என்ன, சீதா! ஈரத் துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறாயே?" என்று கேட்டாள். அதே சமயத்தில் பட்டாபிராமன் தன்னுடைய ஆபீஸ் அறைக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். "எனக்கென்னமோ அந்த ஏழை ஜனங்களின் நினைவாகவே இருக்கிறது, அவர்கள் எல்லாரும் - சின்னக் குழந்தைகள் உள்பட - ராத்திரியெல்லாம் ஈரத் துணியோடுதானே கழிக்கப் போகிறார்கள்? அவர்களை நினைத்தால் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொள்ளவே மனம் வரவில்லை! இந்த மச்சு வீட்டில் கொஞ்சம்கூட நனையாமல் சௌகரியமாக உட்கார்ந்திருப்பதே வேதனையாயிருக்கிறது!" என்றாள் சீதா.
"அது பரிதாபமான விஷயந்தான்; அதற்காக நாம் என்ன செய்வது? பத்துப் பேரா, இருபது பேரா? ஆயிரம் பேருக்கு மேலே இருக்கும்பொழுது விடிந்த பிறகு அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்!" என்றான் பட்டாபிராமன். "சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்; வாருங்கள்!" என்றாள் லலிதா. "இன்று இராத்திரி அத்தனை ஜனங்களும் பட்டினி கிடக்கப் போகிறார்கள். பச்சைக் குழந்தைகள் பசி தாங்காமல் அழுவார்கள். அதை நினைத்துக் கொண்டால் நமக்கு எப்படிச் சாப்பிடுவதற்கு மனம் வரும்?" என்றாள் சீதா.
"ஆகையால் அதை நினைத்துப் பார்க்கவே கூடாது. உலகத்திலுள்ள கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மன நிம்மதி இராதுதான்!" என்றான் பட்டாபிராமன். "நம்முடைய கவலையை நாம் பட்டால் போதாதா? ஊர்க் கவலையையெல்லாம் எதற்காக விலைக்கு வாங்க வேண்டும்?" என்றாள் லலிதா. "சில பேரால் அப்படிச் சொந்தக் காரியத்தை கவனிப்பதோடு இருக்க முடிகிறது. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே" என்றாள் சீதா. "எனக்குப் பட்டும், பாலுவும் சாரலில் நனைந்ததைப் பற்றியே நினைவாயிருக்கிறது. ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்று கவலையாயிருக்கிறது!" என்று லலிதா சொன்னாள். "ரயில்வே ஸ்டேஷனில் இந்தக் குழந்தைகள் மாதிரி எத்தனை குழந்தைகளைப் பார்த்தோம்! அவ்வளவு பேரும் இன்று ராத்திரியெல்லாம் மழையிலும் சாரலிலும் கிடக்கப் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடம்புக்கு வந்தால் யார் கவனிப்பார்கள்?" என்றாள் சீதா. "நானும் அதைப்பற்றி யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பொழுது விடியட்டும்; என்னுடைய சிநேகிதர்களுடன் கலந்து யோசித்து ஏதாவது ஏற்பாடு செய்யலாம். இப்போது உலர்ந்த துணி உடுத்திக்கொண்டு சாப்பிடலாம் வாருங்கள்! நம்முடைய உடம்பைப் பாதுகாத்துக் கொண்டால்தானே மற்றவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியும்?" என்றான் பட்டாபிராமன். இதைக் கேட்ட சீதா எழுந்து சாப்பிடச் சென்றாள். சாப்பிட்ட பிறகு மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் படுக்கச் சென்றார்கள். லலிதா படுத்துக்கொண்ட உடனே கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினாள். சீதாவுக்கு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த ஏழை ஜனங்களை நினைத்து நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பட்டாபிராமனுக்கோ சீதாவின் தயாள குணத்தை எண்ணி எண்ணித் தூக்கம் வரவில்லை.
மறுநாள் பொழுது விடிந்ததும் பட்டாபிராமன் சீதாவிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற எண்ணி வெளியே சென்றான். எத்தனை ஏழைக் குடும்பங்களின் குடிசைகள் விழுந்துவிட்டன. எத்தனை பேர் தங்க இடமின்றியும் உண்ண உணவின்றியும் தவிக்கிறார்கள் என்பதை யெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். சில சிநேகிதர்களோடு கலந்து பேசி வெள்ளக் கஷ்ட நிவாரண வேலை தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தான். மத்தியானம் வீட்டுக்குத் திரும்பி வந்து சீதாவிடம் எல்லா விவரங்களையும் கூறினான். "கல்கத்தாவில் இந்த மாதிரி கஷ்ட நிவாரண வேலையில் எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. நானும் உங்களுடன் வந்து ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் என்னால் இயன்ற உதவி செய்கிறேனே! வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவே இல்லை!" என்றாள் சீதா. பட்டாபிராமன் மிக்க சந்தோஷத்துடன் அதை ஒப்புக் கொண்டான். "இந்த ஊரில் அம்மாதிரி சேவை செய்யக்கூடிய இன்னும் சில சகோதரிகளும் இருக்கிறார்கள்! அவர்களுடன் உன்னைச் சேர்த்து விடுகிறேன்" என்று சொன்னான். அன்று மத்தியானமே பட்டாபிராமன் ஒரு பக்கத்திலும் சீதா இன்னொரு பக்கத்திலும் வெள்ளக் கஷ்ட நிவாரண வேலையில் ஈடுபட்டார்கள். முதலில் சிலநாள் வரையில் குடிசைகளை இழந்த ஏழை ஜனங்களுக்குப் பள்ளிக்கூடங்களில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அவ்வளவு பேருக்கும் சமையல் செய்து சாப்பாடு போடவேண்டியிருந்தது. நோய்ப் பட்டவர்களுக்கு மருந்து கொடுக்க சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கு நோய் நொடி வராமல் சர்வ ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தன.
மழை நின்று தரை காய்ந்த பிறகு அவர்களுக்கெல்லாம் புதிதாகக் குடிசைகள் கட்டிக்கொள்ள வசதி செய்து கொடுக்க வேண்டி வந்தது.நிவாரண வேலை முடிவடைவதற்கு மூன்று மாதம் பிடித்தது. இந்த மூன்று மாத காலமும் பட்டாபிராமனுக்கும் சீதாவுக்கும் ஓயாத ஒழியாத வேலை இருந்தது. அவர்களுடன் அந்த ஊர்க்காரர்கள் இன்னும் பலர் ஒத்துழைத்தார்கள். சீதாவின் ஊக்கமும் உழைப்பும் இனிய சுபாவமும் மதுரமான மொழிகளும் அனைவருக்கும் உற்சாகத்தை ஊட்டி வந்தன. தேவபட்டணமெங்கும் சீதாவின் புகழ் பரவி வந்தது. பட்டாபிராமன் சிறையிலிருந்து வந்தது முதல் உற்சாகம் குன்றியிருந்தான். தேசத்திற்குச் சுதந்திரமோ வந்தபாடில்லை. நாட்டில் தேசீய ஊக்கம் என்பதே கிடையாது. பழையபடி கோர்ட்டுக்குப் போய் வக்கீல் தொழில் செய்யப் பிடிக்கவில்லை. மேலும், கட்சிகாரர்களுக்கு எங்கே போவது?
செய்வதற்கு வேறு வேலையும் இல்லை. இதனாலெல்லாம் மனச்சோர்வு அடைந்திருந்தவன் இப்போது புனர்ஜென்மம் எடுத்தவன் போல் ஆனான். வெள்ளக் கஷ்ட நிவாரணத்தில் அவனுக்கு வேலை நிறைய இருந்தது. அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்தமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பியதும் அன்றன்று நடந்த வேலைகளைப்பற்றிப் பட்டாபியும் சீதாவும் உற்சாகமாகப் பேசிக் கொள்வார்கள். வீட்டில் பொதுவாகக் கலகலப்பு அதிகமாயிற்று. இது லலிதாவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.
"இந்த வீடு இம்மாதிரி முன்னெப்போதும் கலகலப்பாயிருந்ததில்லை, சீதா! இவரும் இவ்வளவு குதூகலமா யிருந்ததில்லை. உன்னை இவருக்கு ரொம்பவும் பிடித்துப்போயிருக்கிறது. யாருக்குத்தான் உன்னைப் பிடிக்காமலிருக்கும்; நீ இங்கேயே எப்போதும் இருந்து விடு, சீதா!" என்று லலிதா அடிக்கடி சொல்லுவாள். "கடவுளுடைய சித்தமும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எனக்குப் போக்கிடம் எங்கே?" என்று சொல்வாள் சீதா. "உன் குழந்தை வஸந்தியை நீ மதராஸில் விட்டு வைத்திருப்பது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. நாலு பேர் நாலு சொல்வதற்கு ஏன் இடம் வைத்துக் கொள்ள வேண்டும்? குழந்தையையும் இவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து விடு! இரண்டு குழந்தையோடு மூன்றாவது குழந்தையாக இருந்துவிட்டுப் போகிறாள்!" என்று லலிதா கூறுவாள். "இந்தக் கோடைக்குப் பள்ளிக்கூடம் சாத்தியதும் வஸந்தியை அழைத்து வந்துவிடலாம் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்று சீதா பதில் கூறுவாள். நாள் செல்லச் செல்ல, அந்த வீட்டில் லலிதாவின் செல்வாக்கு குன்றி சீதாவின் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. பட்டுவும் பாலுவும் அம்மாவின் வார்த்தையைக் காட்டிலும் அத்தையின் வார்த்தைக்கு அதிக மதிப்புக் கொடுக்கத் தொடங்கினார்கள். அரை நாழிகை நேரம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாலும் அவர்கள் வரமாட்டார்கள்; ஆனால் அத்தை ஒரு தடவை கூப்பிட்டால் ஓடி வந்து விடுவார்கள்.
வேலைக்காரர்கள் வீட்டு அம்மாளைக் காட்டிலும் டில்லி அம்மாளுக்கு அதிக மரியாதை காட்டத் தொடங்கினார்கள். லலிதா ஏதாவது ஒரு காரியத்தை இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று சொன்னால், "டில்லி அம்மா அப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறார்களே!" என்று வேலைக்காரர்கள் கூசாமல் பதில் சொல்லுவார்கள். சுண்டு, லலிதா சொல்லுகிற காரியத்தை எந்த நாளும் செய்ததில்லை; இப்போதும் அவள் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டான். ஆனால் சீதா அவனிடம் ஏதாவது செய்யும்படி சொல்லிவிட வேண்டியதுதான்! அடுத்த நிமிஷமே விழுந்தடித்து ஓடிச் சென்று அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு வருவான். 'எள்ளு' என்று சொன்னால், 'எண்ணெய்' கொண்டு வந்து விடுவான். இதெல்லாம் லலிதாவுக்குத் திருப்தியாகவே இருந்து வந்தது. தன்னுடைய அத்தியந்த அன்புக்குரிய தோழிக்கு இப்படி எல்லாரும் மரியாதை செய்வது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. "அத்தங்கா! உன்னிடம் என்னதான் சொக்குப் பொடி இருக்கிறதோ? இப்படி எல்லாரும் மயங்கிப் போய்விடுகிறார்களே?" என்று லலிதா சீதாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பத்தாம் அத்தியாயம்
எலெக்ஷன் சனியன்!
வெள்ளக் கஷ்டத்தில் அகப்பட்ட ஏழைகளுக்கு முடிவில் அதனால் நன்மை ஏற்பட்டது. வயோதிகர்கள், குழந்தைகள் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இரண்டு இரண்டு புதுத் துணிகள் உடுத்திக் கொள்ளக் கிடைத்தன. சுத்தமான இடத்தில் சுத்தமான முறையில் கட்டிய புதிய குடிசைகள் கிடைத்தன. ஊருக்கு நடுவே ஒரு சிறு பிள்ளையார் கோவிலும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் பிரதி சனிக்கிழமை தோறும் பஜனை நடந்தது. இவ்வாறு வெள்ளக் கஷ்டத்துக்கு ஆளானவர்களின் பாடு கொண்டாட்டமாயிற்று. ஆனால் கஷ்ட நிவாரண வேலை செய்தவர்களின் பாடு திண்டாட்டமாயிற்று. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாமற்போகவே பட்டாபிராமன் மறுபடியும் மனச் சோர்வு அடைந்தான். சீதா சீமைக்குச் சென்ற கணவனைப் பற்றியும் மதராஸில் உள்ள குழந்தையைப் பற்றியும் எண்ணி எண்ணி உருகினாள். வீட்டில் கலகலப்புக் குறைந்தது; எல்லாருடைய முகமும் களை இழந்தது. ஒரு நாள் மாலை சில நண்பர்கள் பட்டாபிராமனைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அந்த ஊரில் நகரசபைத் தேர்தல் வருகிறதென்றும் அதற்குப் பட்டாபிராமன் நிற்கவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். தேர்தலில் நின்று ஜெயித்தால் சேர்மன் பதவி கிடைப்பதற்கும் 'சான்ஸ்' இருக்கிறது என்று ஆசை காட்டினார்கள். பட்டாபி ராமனுக்கு இந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே ஒரு தடவை தன் தந்தை இன்னொருவருக்காகத் தேர்தலில தலையிட்ட தினால் நேர்ந்த விளைவுகள் அவனுக்கு எச்சரிக்கையாக இருந்தன.
ஆனாலும் அடியோடு அவன் மறுத்துச் சொல்லவில்லை. சிறை சென்று வந்த தியாகியாகிய அவனை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள். அது மட்டுமல்லாமல், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள விபத்தின்போது அவன் ஏழை ஜனங்களுக்குச் செய்த சேவையைத் தேவப்பட்டணமே பார்த்துப் பிரமித்துப் போயிருப்பதாகவும், யாராவது அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தால் அத்தகையை எதிரிக்குத் தேவபட்டணம் நல்ல பாடம் கற்பிக்கும் என்றும், பட்டாபிராமன் வெற்றி அடைவது சர்வ நிச்சயம் என்றும் அந்த நண்பர்கள் சொன்னார்கள். அவர்களுக்குப் பட்டாபிராமன், "யோசித்துச் சொல்கிறேன்" என்று பதில் அளித்தான். அன்றிரவு சாப்பிடும்போது லலிதா, "யாராரோ வந்து என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தார்களே? என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டாள். "முனிசிபல் எலெக்ஷனுக்கு நிற்கும்படி சொன்னார்கள்! உன் அபிப்பிராயம் என்ன?" என்று பட்டாபிராமன் லலிதாவைக் கேட்டு விட்டுச் சீதாவின் முகத்தைப் பார்த்தான். லலிதா, "எலெக்ஷனும் வேண்டாம்; ஒன்று வேண்டாம் ஊரில் இருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லையாக்கும். ஏமாந்தவர் என்று தேடி வந்தார்களாக்கும்?" என்றாள். "சட்டென்று அப்படி ஏன் சொல்கிறாய், லலிதா! வந்தவர்கள் எல்லாரும் உன் அகத்துக்காரரின் சிநேகிதர்கள் தானே? அவர்கள் வேண்டுமென்று கெடுதலான காரியத்தைச் சொல்லுவார்களா?" என்று சீதா கேட்டாள். "உனக்கு இந்த ஊர் சமாச்சாரம் தெரியாது அத்தங்கா! முன்னே ஒரு தடவை இவருடைய அப்பா யாரோ ஒருவருக்காக எலெக்ஷனில் வேலை செய்தார். ஆனால் எங்களுக்கும் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமற் போயிற்று. பல வருஷங் கழித்துச் சூரியா வந்து சண்டையைத் தீர்த்து வைத்தான்! உனக்குக்கூட நான் எழுதியிருந்தேனே?" என்றாள்.
"அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம்! இவருடைய அப்பா தேசத்துக்காக எதுவும் செய்யவில்லை. இவர் இரண்டரை வருஷம் சிறையில் இருந்து விட்டு வந்திருக்கிறார். இவர் எலெக்ஷனுக்கு நின்றால் யார் எதிர்த்து நிற்க முடியும்? எதிர்த்து நிற்கிறவர்கள் அதோ கதி அடைய வேண்டியதுதான்!" என்று சீதா கூறினாள். "நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமான காரியமில்லை. கள்ள மார்க்கெட்டில் ஏராளமான பணம் பண்ணிய ஆசாமி ஒருவர் இந்த வார்டில் நிற்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன். போட்டி பலமாக இருக்கும்!" என்றான் பட்டாபிராமன். "எவ்வளவு பலமாக இருந்தாலும் சரிதான்! அதற்காகப் பயந்து விடுவதா என்ன? நீங்கள் மட்டும் தேர்தலுக்கு நின்றால், நான் வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்கத் தயார்!" என்றாள் சீதா. "நீங்கள் அவ்வளவு ஊக்கமாக வேலை செய்வதா யிருந்தால் நானும் நிற்கத் தயார்!" என்று சொன்னான் பட்டாபிராமன். "அப்படி உற்சாகமாகச் சொல்லுங்கள்! நாளைக்கே வேலை ஆரம்பித்து விடலாம்!" என்றாள் சீதா. "எல்லாவற்றுக்கும் கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. எதிர்த்த வீட்டுக்கார ரிடம் யோசனை கேளுங்களேன் நமக்கு வேண்டியவர்களில் வயதானவர், சரியான யோசனை சொல்லக்கூடியவர், தாமோதரம் பிள்ளைதானே?" என்று லலிதா சொன்னாள். "எதிர்த்த வீட்டுக்காரரைப் போய்க் கேட்பது என்ன? அவர்தான் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்பது தெரியுமே? எலெக்ஷனுக்கு நிற்க வேண்டாம் என்றுதான் அவர் சொல்லுவார்!" என்றாள் சீதா.
"எலெக்ஷனுக்கு நின்றால் ரொம்பப் பணச் செலவு ஆகும். நமக்கு இப்போது வருமானமும் இல்லையே?" என்றாள் லலிதா. "பணம், பணம் என்று அடித்துக் கொள்வது எனக்குப் பிடிப்பதே இல்லை. பணத்தை தலையில் கட்டிக்கொண்டா போகப் போகிறோம்? அப்படி யொன்றும் பணச் செலவும் அதிகமாக ஆகிவிடாது. ஆகிற செலவுக்கு நான் என் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்கிறேன்!" என்று சீதா ஆவேசமாகக் கூறினாள். "நீ ஒன்றும் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்க வேண்டாம். அப்படி நாங்கள் கதியற்றுப் போய்விடவில்லை!" என்றாள் லலிதா. "போதும் போதும்; நிறுத்து. இந்த உதவாக்கரைப் பேச்சை!" என்று பட்டாபிராமன் கடுகடுப்புடன் லலிதாவைப் பார்த்துச் சொன்னான். "யார் என்ன சொன்னாலும், நீங்கள் எலெக்ஷனுக்கு நிற்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடித்தமில்லை!" என்றாள் லலிதா. "உனக்கு நான் செய்கிற காரியம் எதுதான் பிடித்தமாயிருந்தது? நான் 1942-ல் சட்ட மறுப்புச் செய்தபோதும் நீ 'வேண்டாம்' என்றுதான் சொன்னாய். உன்னுடைய யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான்!" என்றான் பட்டாபிராமன். லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அதைக் காட்டிக் கொள்ள அவளுக்கு வெட்கமாயிருந்தது. வேறு பக்கம் திரும்பிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சமையற்காரியோ அல்லது வேறு வேலைக்காரர்களோ இருக்கும்போது தன் கணவருடன் எந்த விஷயத்தைப் பற்றியும் வாக்குவாதம் தொடங்கக் கூடாது என்று அவள் மனம் சங்கல்பம் செய்து கொண்டது. வேலைக்காரர்கள் முன்னால் மட்டும் என்ன? சீதா இருக்கும்போதுகூட எந்த விஷயத்தைப் பற்றியும் இனிமேல் விவாதம் செய்யக்கூடாதுதான்! என்ன அவமானம்! என்ன மானக்கேடு.
மறுநாள் பட்டாபிராமன் எதிர் வீட்டுக்குப் போய்த் தாமோதரம்பிள்ளையிடம் தான் எலெக்ஷனுக்கு நிற்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றும் தெரியப்படுத்தினான். "என்னுடைய ஆசீர்வாதம் வேண்டிய மட்டும் தருகிறேன், தம்பி! ஆனால் இந்த அருமையான யோசனை உனக்கு யார் சொன்னது?" என்று தாமோதரம் பிள்ளை கேட்டார். "எல்லா சிநேகிதர்களும் ஒருமிக்க வந்து சொன்னார்கள்; எனக்கும் அது சரி என்று தோன்றித்தான் நிற்கிறேன்" என்றான் பட்டாபி. "அதிலுள்ள லாப நஷ்டங்களைப்பற்றி யோசித்தாயா? பணச் செலவு ரொம்ப ஆகுமே! அதோடு வீண் விரோதங்கள் ஏற்படும். இப்போது உனக்கு ஊரில் ரொம்ப நல்ல பெயர் இருக்கிறது. அதை ஏன் கெடுத்துக் கொள்கிறாய்!" என்றார் தாமோதரம் பிள்ளை. "நல்ல பெயர் எதற்காகக் கெடுகிறது? தேசத் தொண்டில் இறங்கிய பிறகு அதையெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? நான் சிறைக்குப் போவதற்கே பயப்படவில்லையே? மற்றதற்கெல்லாம் பயப்பட்டு விடுவேனா?" என்றான் பட்டாபிராமன். "சிறைக்குப் போவது வேறு விஷயம், தம்பி. அதனால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை. ஆனால் எலெக்ஷன் விஷயம் அப்படியல்ல. பலபேருடைய துவேஷத்துக்கு ஆளாகும் படி நேரிடும்."
"எது எப்படியானாலும் நான் தேர்தலுக்கு நிற்பது என்று தீர்மானித்துச் சிநேகிதர்களிடம் சொல்லியும் விட்டேன். இனிப் பின் வாங்குவதற்கில்லை!" என்றான் பட்டாபிராமன். "அப்படியானால் சரி; உனக்கு வெற்றி கிடைக்கக்கூடும். அதற்கு என்னாலான உதவியும் செய்கிறேன். உன் தகப்பனாரையும் சூரியாவையும் உத்தேசித்து உனக்கு நான் உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால் ஒரு விஷயம், தம்பி! அந்தப் புது டில்லிப் பெண் சீதா எப்போது ஊருக்குப் போகப் போகிறாள்? சீக்கிரத்தில் அவளை அனுப்பி விடுவது நல்லது!" என்றார் தாமோதரம் பிள்ளை. "இதென்ன திடீரென்று இப்படிச் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நீங்கள் அடிக்கடி புகழ்ந்து பாராட்டுவது வழக்கம் ஆயிற்றே?" "நல்ல காரியம் செய்து கொண்டிருந்த வரையில் புகழ்ந்து பாராட்டினேன். இந்தக் காரியத்தில் உன்னைத் தூண்டி விட்டிருப்பது நல்ல காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை!" "பிள்ளைவாள்! சீதாவுக்கும் என்னுடைய தீர்மானத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை! அவள் என்னைத் தூண்டிவிடவும் இல்லை; எனக்குச் சுயபுத்தி இல்லையா, என்ன?" என்றான் பட்டாபிராமன்.
நகரசபைத் தேர்தலுக்கு நிற்பதாகப் பட்டாபிராமன் தெரிவித்த நாளிலிருந்து அந்த வீட்டில் வருவோர் போவோரின் கூட்டமும் கூச்சலும் அதிகமாயின. பகல் என்றும் இரவென்றும் இல்லாமல் தேர்தலுக்கு வேலை செய்யும் சிநேகிதர்களும் தொண்டர்களும் எந்த நேரத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் பட்டாபியின் வீட்டிலேயே காப்பி, சிற்றுண்டி, சாப்பாடு முதலியவை வைத்துக்கொண்டார்கள். வெற்றிலை கவுளி கவுளியாகவும், புகையிலை கத்தை கத்தையாகவும் செலவாயின. பணம் நோட்டு நோட்டாகச் செலவாகி வந்தது. சீட்டுக்கட்டு தினம் ஒன்று வாங்கப்பட்டது. வீட்டில் ஒரு வருஷத்துக்குச் சேகரித்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் ஒரு மாதத்தில் தீர்ந்து போயின. லலிதாவுக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை. அவளுடைய வருத்தத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னும் சில நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன சீதாவின் ஆடம்பரமும் அதிகார தோரணையும் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்தன. பெண்மைக்குரிய அடக்கம் வரவரக் குறைந்து வந்தது. தேர்தல் வேலைக்கு என்று வருகிற புருஷர்களோடு சரிசமமாக உட்கார்ந்துகொண்டு இரைந்து பேசுவதும் வாதாடுவதும், 'ஹா ஹா ஹா' என்று கைதட்டிச் சிரிப்பதும் வழக்கமாகிக் கொண்டு வந்தன. சீதாவின் நல்ல குணங்களைப் பற்றி ஏற்கெனவே ரொம்பவும் புகழ்ந்து பேசிய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்போது அவளைப் பற்றிக் குறைவாகப் பேசத் தொடங்கினார்கள். பட்டாபிராமனைப் பற்றியும் ஒரு மாதிரி எகத்தாளமாகப் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் பேச்சு லலிதாவின் காதுக்கு எட்டி அவளுக்கு மிக்க மன வேதனையை உண்டுபண்ணி வந்தது.
ஒரு நாள் வாசல் பக்கத்துக் காமிரா உள்ளில் பட்டாபிராமனும் அவனுடைய எலெக்ஷன் தோழர்களும் சீதாவும் உட்கார்ந்து அட்ட காசமாகப் பேசிச் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனதில் ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் எப்போது போய்த் தொலைவார்கள் என்று காத்திருந்தாள். அவர்கள் போனதும் சீதாவும் உள்ளே வந்து மச்சுப்படி ஏறித் தனது அறைக்குச் சென்றாள். பிறகு பட்டாபிராமன் வந்தான்; லலிதாவைப் பார்த்து, "சமையல் ஆகிவிட்டதா? சீக்கிரம் கிளம்ப வேணும்" என்றான். "நன்றாகச் சீக்கிரம் கிளம்பினீர்கள்! சீக்கிரம் கிளம்பி என்ன கோட்டை கட்டப் போகிறீர்களோ, தெரியவில்லை. இந்த எலெக்ஷன் சனியன் உங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது!" என்றாள் லலிதா. "என்ன உளறுகிறாய்? வாயை மூடு! ஷட் அப்?" என்று பட்டாபிராமன் உரத்துக் கத்தினான். "நான் ஒன்றும் உளறவில்லை, உள்ளதைத்தான் சொல்லுகிறேன். எலெக்ஷன் சனியன் மட்டுமா? சீதா சனியனும் உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது!" என்று லலிதா ஆத்திரமாகச் சொன்னாள். பட்டாபிராமன் ரௌத்ராகாரம் அடைந்தான், அவனுடைய முகம் விகாரப்பட்டது. "என்ன சொன்னாய்? ஜாக்கிரதை; வாயைத் திறந்தாயோ, கொன்று விடுவேன்!" என்று பதறிக்கொண்டே சொன்னான். "ஆமாம்; அப்படியே கொன்று விடுங்கள்! உங்கள் மகாத்மா காந்தி இதைத்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறார்?" பட்டாபியின் பதட்டம் கொஞ்சம் அடங்கியது. தக்க பதில் சொல்வதற்குச் சிறிது யோசித்தான். அதற்குள் லலிதா, "இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம். நான் சொல்லுகிறதைக் கொஞ்சம் கேளுங்கள்.
இந்த எலெக்ஷன் சங்கடத்தை விட்டுத் தொலையுங்கள். அதை விட்டுத் தொலைக்க முடியாவிட்டால் சீதாவையாவது இந்த வேலைக்குக் கூப்பிட வேண்டாம். ஊர் சிரிக்கிறது; என் மானம் போகிறது!" என்றாள். "மானம் போகட்டும்; தாராளமாகப் போகட்டும். நானும் எலெக்ஷனை விடுவதாகவும் உத்தேசமில்லை. சீதாவுக்குத் தடை உத்தரவு போடப் போவதுமில்லை. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம்; உன் வேலையைப் பார்!" என்றான் பட்டாபிராமன். "நான் தலையிடாமல் வேறு யார் தலையிடுவது, நீங்கள் இவ்விதம் சொன்னால் சீதாவை நான் ஊருக்குப் போகச் சொல்லி விடுகிறேன்!" என்றாள் லலிதா. "சீதாவை ஊருக்குப் போகச் சொல்ல நீ யார்? உனக்கு என்ன அதிகாரம்?" என்று பட்டாபிராமன் கர்ஜித்தான். "பின்னே யாருக்கு அதிகாரம்? என்னுடைய அத்தங்கா சீதாவை நான் அழைத்துக்கொண்டு வந்தேன்; நான் போகச் சொல்கிறேன்."
"சீதா இந்த வீட்டிலிருந்து போகமாட்டாள். யாராவது போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!" "என்னுடைய வீட்டிலிருந்து நான் ஏன் போகிறேன்? எங்கிருந்தோ வந்த நாயை வீட்டிலே வைத்துவிட்டு....?" பட்டாபிராமனுக்கு மறுபடியும் ரௌத்ராகாரம் வந்து விட்டது. "என்னடி சொன்னாய்? யாரடி நாய்?" என்று கேட்டுக் கொண்டே அவன் லலிதா அருகில் வந்தான். "இதோ இந்த நிமிஷமே உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்! திமிர் பிடித்த கழுதை!" என்று சொல்லிக் கொண்டே லலிதாவின் கழுத்தில் கையைப் போட்டு வெளி வாசற்படியை நோக்கித் தள்ளத் தொடங்கினான். லலிதா, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள். அதைக் கேட்டுவிட்டு வந்தனைப்போல் சூரியா அச்சமயம் உள்ளே நுழைந்தான். சூரியா வந்ததைப் பார்த்துவிட்டுப் பட்டாபிராமனும் லலிதாவும் பிரமித்துப் போய் நின்றார்கள். மேல் மச்சுப்படியில் நின்று கொண்டு சீதா இந்த நாடகத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தின் கொந்தளிப்பை முகத்தோற்றம் காட்டியது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினொன்றாம் அத்தியாயம்
பட்டாபியின் பதவி மோகம்
சூரியாவைப் பார்த்து ஒரு நிமிஷம் திகைத்துப் போய்ப் பேசாமல் நின்ற லலிதா மறு நிமிஷம் ஒருவாறு சமாளித்துக் கொண்டு முகத்தில் மலர்ச்சியையும் வருவித்துக் கொண்டாள். "சூரியாவா! இது என்ன? சொல்லாமல் திடீரென்று வந்து விட்டாய்," என்று கேட்டுவிட்டுப் பட்டாபிராமனைத் திரும்பிப் பார்த்து, "பார்த்தீர்களா? இந்த மாதிரியெல்லாம் விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? சூரியாவாக இருந்ததினால் போயிற்று! வேறு யாராவது பார்த்திருந்தால் நிஜம் என்றல்லவா நினைத்துக் கொள்வார்கள்?" என்றாள். பட்டா பிராமன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "வா, அப்பா! நல்ல சமயம் பார்த்துத்தான் வந்தாய்! தாம்பத்திய கலக நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது!" என்றான். சூரியாவுக்குத் தான் கண்ட காட்சியை உண்மை என்று நம்புவதா, நாடகம் என்று நினைப்பதா என ஒரு கண நேரம் திகைப்பு உண்டாயிற்று. எப்படியாவது இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, "நாடகத்தைப் பார்க்க நான் தனியாக வரவில்லை! அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்!" என்றான். இதைக் கேட்டவுடன் பட்டாபிராமன், லலிதா இருவருடைய முகங்களும் சுருங்கின. பட்டாபிராமன் மாடிக்குப் போகலாமா என்று அண்ணாந்து பார்த்தான். அங்கே சீதா எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத் துடன் நிற்பதைக் கண்டதும் மேலும் கோபமடைந்து தன்னுடைய ஆபீஸ் அறைக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தினான். லலிதா சூரியாவை நெருங்கி வந்து, "அண்ணா! இவருக்கு என் மேல் நிஜமாகக் கோபம். நீ கொஞ்சம் அவருடன் நல்ல வார்த்தையாகப் பேசிச் சமாதானப்படுத்து!" என்றாள்.
அந்தச் சமயம் சரஸ்வதி அம்மாள் மூட்டை முடிச்சுகளுடனும் ஊறுகாய் ஜாடியுடனும் உள்ளே வரவே, "வா! அம்மா!" என்று சொல்லிக்கொண்டு அவளை வரவேற்கப் போனாள். சூரியா அண்ணாந்து பார்த்தான், அங்கே ஒரு நிமிஷத்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சீதா அறைக்குள் போய் விட்டதை அறிந்து கொண்டான். பட்டாபிராமனைப் பார்ப்பதற்கு அவனுடைய ஆபீஸ் அறைக்குச் சென்றான். "சூரியா! உன்னிடம் வேஷம் போட எனக்கு விருப்பம் இல்லை. உன் தங்கை அம்மாதிரி பொய் நடிப்பு நடிக்கவேண்டும் என்கிறாள். அது என்னால் முடியாத காரியம், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நீ உள்ளே நுழைந்து வந்தபோது நான் லலிதாவைக் கழுத்தைப் பிடித்து நிஜமாகவே தள்ளிக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் உன் அத்தங்கா சீதாதான். அந்தப் புண்ணியவதியை நீ தயவு பண்ணி இங்கிருந்து அழைத்துக் கொண்டு போய்விடு. அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து உன் தங்கையின் குணமே மாறிப் போய்விட்டது. அவளுடைய நச்சையும் ஆத்திரத்தையும் ஆங்காரத்தையும் என்னால் பொறுக்கவே முடியவில்லை. தயவு பண்ணி உன் அத்தங்காளை அழைத்துக் கொண்டு போய்த் தொலை!" என்று படபடவெனப் பொழிந்தான் பட்டாபிராமன். "ஆகட்டும், ஸார்! உங்கள் இஷ்டப்படியே செய்கிறேன். நீங்களும் லலிதாவும் இந்த நிலைமைக்கு வருவீர்கள் என்று நான் சொப்பனத்தில்கூட நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் என்பதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது" என்றான் சூரியா.
"நீ என்ன செய்வாய், சூரியா! உன் பேரில் என்ன தப்பு? ஸ்திரீகளுடைய சுபாவம் இவ்வளவு மோசமாயிருக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்? இத்தனை நாளாகக் கிரகஸ்தாசிரமம் நடத்தும் எனக்கே தெரியவில்லையே? இந்த முட்டாள் தனத்தைக் கேள்! உன் அத்தங்கா சீதாவை இங்கே அழைத்துவர வேண்டாம் என்று நான் எவ்வளவோ முட்டிக் கொண்டேன். இவள் கேட்கவில்லை; பிடிவாதமாக அழைத்துக் கொண்டு வந்தாள். 'அத்தங்கா' 'அத்தங்கா' என்று பரிந்து பிராணனை விட்டு விடுகிறவளைப் போலப் பேசினாள். சீதா நாகரிகமாக நாலுபேருடன் பேசுவதையும் பழகுவதையும் கண்டால் இவளுக்கு அசூயையாயிருக்கிறது. அப்படியெல்லாம் இவளை இருக்க வேண்டாமென்று யார் தடுத்தார்கள்? நானோ இந்த 'ரெச்சட்' எலெக்ஷனில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறேன். வேலை விழி பிதுங்குகிறது, இன்னும் இரண்டு வாரந்தான் பாக்கி யிருக்கிறது வோட்டுப் போடும் தேதிக்கு. பலமாக வேலை செய்யாவிட்டால் இத்தனை நாள் பட்ட கஷ்டமும் செலவழிந்த பணமும் வீணாய்ப் போய்விடும். இந்த நெருக்கடியில் நான் எலெக்ஷன் வேலையைக் கவனிப்பதா, இந்தப் பெண் பிள்ளைகளின் சண்டையைத் தீர்த்துக் கொண் டிருப்பதா? நல்ல வேளையாக மகராஜன், நீ வந்துவிட்டாய்! சீதாவை அழைத்துக்கொண்டு போய்விடு! நான் நிம்மதியாக என் வேலையைப் பார்க்கிறேன்!" என்று பட்டாபிராமன் பேசி நிறுத்தியபோது பெரும் மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. "பட்டாபி ஸார்! இந்த எலெக்ஷன் தொல்லையில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாமலிருந் திருக்கலாம்," என்று சூரியா பேசத் தொடங்குவதற்குள்ளே பட்டாபிராமன் மறுபடியும் குறுக்கிட்டான்.
"நீ இப்படித்தான் சொல்லுவாயென்று எனக்குத் தெரியும். நீ சர்வ சங்க பரித்யாகி; நித்தியப் பிரம்மச்சாரி. உன்னைப் போலவே எல்லாரும் உலகத்தை வெறுத்துவிட்டு இருக்க முடியுமா? எனக்கு இந்த உலகத்திலே இன்னும் சில காரியங்கள் இருக்கின்றன. எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டணத்தில் கொஞ்சம் பொது ஊழியம் செய்ய வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. எனக்குப் பணம் காசில் பற்றுக் கிடையாது. ஆனால் புகழ் என்பது ஒன்று இருந்து தொலைக்கிறதல்லவா? புகழை விரும்பாமல் யார் இருக்க முடியும்? தன்னோடொத் தவர்கள் தன்னுடைய ஊர் மனிதர்கள், தன்னுடைய தேசத்தவர்கள் இவர்களிடம் புகழ் அடைய ஒருவன் விரும்பவில்லை யென்று சொன்னால் அதை நான் நம்ப முடியாது. அப்படிச் சொல்கிறவனை நான் சுத்த 'ஹம்பக்' என்றுதான் சொல்வேன்.
இந்தத் தேவபட்டணத்தில் என் தகப்பனார் எவ்வளவோ செல்வாக்குடன் இருந்தார், அவர் காலம் ஆகிவிட்டது. 'யானைக்குப் பிறந்தது பூனையாயிற்று' என்று பெயர் வாங்க எனக்கு இஷ்டமில்லை. நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு மனுஷன் என்று பெயர் வாங்காவிட்டால் இந்த வாழ்க்கையினால்தான் என்ன பிரயோஜனம்? மேலும், இந்த ஊர் 'பார்ட்டி பாலிடிக்ஸ்' விஷயமும் உனக்குத் தெரியாது. பழைய முனிசிபல் சேர்மன் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாகப் பணம் சேர்த்து இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறான். தேவபட்டணமே தன்னுடைய சொந்தக் கோட்டை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனை இந்தத் தடவை தோற்கடித்தாலொழிய, இந்த ஊரில், 'காங்கிரஸ்' என்ற பெயரையே யாரும் எடுக்க முடியாது. அந்தக் கிராதகனை எதிர்த்து நின்று தோற்கடிப்பதற்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இங்கே எல்லாருடைய ஏகோபித்த அபிப்ராயமும் இதுதான். இதில் தலையிடுவதற்கு உனக்கு உரிமை இல்லை; தகுதியும் இல்லை! எலெக்ஷன் இன்னும் இரண்டு வாரம் இருக்கும் சமயத்தில் நான் பின்வாங்கினால் அதைக் காட்டிலும் அவமானம் வேறு வேண்டியதில்லை. அப்புறம் நான் வெளியில் தலைகாட்டவே முடியாது."
பட்டாபிராமன் மூச்சு விடுவதற்காகப் பேச்சை நிறுத்திய சமயம் பார்த்துச் சூரியா சொன்னான்: "பட்டாபி ஸார்! நான் ஒரு வார்த்தை சொல்லுவதற்குள் நீங்கள் நூறு வார்த்தை சொல்லி விட்டீர்கள். இந்தச் சமயத்தில் உங்களைப் பின்வாங்கும்படி நான் சொல்லவில்லை. அதற்கு உரிமையோ, தகுதியோ, ஒன்றும் எனக்கு கிடையாது என்பதையும் அறிந்திருக்கிறேன். 'எலெக்ஷனில் இறங்காமல் இருந்திருக்கலாம்' என்று மட்டுந்தான் சொன்னேன். அதுவும் என்னுடைய அபிப்ராயமே தவிர உங்களைக் கட்டாயப்படுத்த உத்தேசமே எனக்குக் கிடையாது. இப்போது நீங்கள் தேர்தலுக்கு நின்று இவ்வளவு தூரம் வேலை நடத்திய பிறகு உங்களைப் பின் வாங்கும்படி சொல்ல எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் சொல்ல வந்தது வேறு விஷயம். எலெக்ஷன் வேலையில் சீதா ரொம்ப ஒத்தாசையாயிருக்கிறாள் என்று நான் கேள்விப்பட்டேன். ஆகையால் அவளை இந்தச் சமயம் ஊருக்கு அனுப்புவது உசிதமாயிராது. இத்தனை நாள் இருந்தவள் இன்னும் இரண்டு வாரம் இருக்கட்டும். அதற்குப் பிறகு வேண்டுமானால் பார்க்கலாம்....." "உனக்கென்னடா, அப்பா, சூரியா! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லி விடுகிறாய். கஷ்டப்படுகிறவன் நான் அல்லவா? இந்த இரண்டு பொம்மனாட்டிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டு என்னால் இனிமேல் சங்கடப்பட முடியாது. வேலை அநியாயமாய்க் கெட்டுப் போகிறது. அப்படிச் சீதா இங்கு இருக்கிறதாயிருந்தால் லலிதாவையாவது நீ அழைத்துக்கொண்டு போகவேண்டும். போதும் போதாதற்கு உன் அம்மா வேறு வந்திருக்கிறாள். சிவ சிவா; வீட்டில் இனிமேல் இருபத்து நாலு மணி நேரமும் ரகளைதான். சூரியா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நீ சீதாவையும் உன் தாயாரையும் இன்றைக்காவது நாளைக்காவது அழைத்துக் கொண்டு போய்விடு! தெரிகிறதா? நானும் லலிதாவும் எப்படியோ எங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறோம். இந்த உலகத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பிறந்திருக்கவில்லையல்லவா? சீதாவை நம்பிக் கொண்டுதானா இந்த எலெக்ஷனில் நின்றேன்?...."
"பட்டாபி ஸார்! கொஞ்சம் என் வார்த்தையைக் கேளுங்கள். என்னுடைய அபிப்ராயத்தில் உங்களுக்கு எப்போதும் கௌரவம் இருந்து வந்தது. நான் அப்படி ரொம்பத் தவறுதலாக எந்தக் காரியத்தையும் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்து வந்தது. அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொண்டு ஒரே ஒரு நாள் எனக்குச் சாவகாசம் கொடுங்கள். அதற்குள் சீதாவிடமும் லலிதாவிடமும் பேசிப் பார்த்துவிட்டு முடிவாக என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன். ஒன்றிலும் சரிக்கட்டி வராது என்று தோன்றினால் உங்கள் இஷ்டப்படியே சீதாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!" என்றான் சூரியா. "சரி! உன்னுடைய சாமர்த்தியத்தைப் பார்த்து விடலாம்!" என்றான் பட்டாபிராமன். சீதாவைப் பார்த்துச் சூரியா , "அத்தங்கா! நான் உள்ளே வந்தபோது நடந்த நாடகத்தை நீயும் மாடியிலிருந்து பார்த்தாய் போலிருக்கிறதே!" என்றான். "ஆமாம், சூரியா! அது என் தலைவிதி! காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோட என்பார்கள் அல்லவா?
அதுபோல நான் எந்த இடத்துக்குப் போனாலும் என்னோடு துரதிர்ஷ்டத்தையும் கொண்டு போகிறதாகக் காண்கிறது. நான் நல்லது செய்யப் பார்த்தாலும் அது எப்படியோ கெடுதலாய் முடிந்து விடுகிறது. இன்றைக்கே நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுவதாகத் தீர்மானித்து விட்டேன்!" "இன்றைக்கே கிளம்பி எங்கே போவதாக உத்தேசம்?" என்று சூரியா கேட்டான். "எங்கே போகிறது? போகிறதற்கு இடமில்லையா என்ன? கிணறு, குளம், ஏரி, சமுத்திரம் எல்லாந்தான் இருக்கிறது! இல்லாவிட்டால் ரயில் தண்டவாளம் இருக்கிறது! மதராஸுக்குப் போய் ஒரு தடவை வஸந்தியைப் பார்த்துவிட வேணும். அப்புறம், ஏதாவது ஒரு வழி தேடிக் கொள்கிறேன். உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுச் சீதா கலகலவென்று கண்ணீர் வடித்தாள். "அத்தங்கா! எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வாழ்க்கையில் நீ ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறாய் என்பது உண்மைதான். ஆனால் உன்னைவிடக் கஷ்டம் அனுபவித்தவர்களும் உலகத்தில் உண்டு. அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் வந்திருக்கிறது."
"என்னுடைய கஷ்ட காலம் என்னோடு மட்டும் போனால் தேவலையே, சூரியா! நான் எங்கே போகிறேனோ, அங்கெல்லாம் தொடர்ந்து வந்து விடுகிறதே! ராஜம்பேட்டைக்கு வந்தேன்; அருமை மாமாவை யமலோகத்துக்கு அனுப்பினேன்! இவ்விடம் வந்தேன்; என் அருமைத் தோழிக்கும் அவளுடைய புருஷனுக்கும் சண்டையை மூட்டினேன், டில்லியிலே அவருக்கு என்னாலே உத்தியோகமே போய்விட்டது. சூரியா! வஸந்தியை மதராஸிலிருந்து நான் ஏன் அழைத்துக்கொண்டு வரவில்லை தெரியுமா? பள்ளிக்கூடம் வீணாய்ப் போய் விடுமே என்று குழந்தை சொன்னது வாஸ்தவந்தான். அது அவளாய்ச் சொல்லவில்லை, பாட்டி சொல்லிக் கொடுத்ததையே சொன்னாள். 'பள்ளிக்கூடம் போனால் போகிறது; என்னுடன் வா!' என்று நான் சொல்லி யிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். ஆனால் நான் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. எனக் கென்னமோ மனதில் சதா காலமும் ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது - என்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஏதாவது ஆபத்து வரும் என்று, அதனால்தான் குழந்தையை அழைத்து வரவில்லை. பாட்டியிடமே பத்திரமாயிருக்கட்டும் என்று விட்டு வந்தேன்." "அத்தங்கா! ஒருவரால் ஒருவருக்குக் கஷ்டம் வரும் என்பதெல்லாம் முட்டாள்தனம். உலகத்தில் உனக்கு மட்டும்தானா கஷ்டம் வந்திருக்கிறது. தேசம் தேசமாகக் கஷ்டம் வந்திருக்கிறது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு, கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஒரேயடியாகக் கஷ்டம் வந்திருக்கிறது. வங்காளத்தில் அறுபது லட்சம் ஜனங்கள் பஞ்சத்தினால் செத்துப் போனார்கள்! ஹிரோஷீமா என்னும் பட்டணத்தில் வசித்த இரண்டரை லட்சம் ஜனங்களும் ஒரே நிமிஷத்தில் அமெரிக்கர் போட்ட அணுகுண்டினால் செத்துப் போனார்கள்!
நேற்று உலகத்தையே ஜயித்து விட்டதாகக் கனவு கண்ட ஜெர்மானியர் எட்டுக் கோடிப் பேர் இன்று நாலு தேசங்களின் காலடியில் கிடந்து மிதிபடுகிறார்கள். கஷ்டம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்பதெல்லாம் நம்முடைய பகுத்தறிவினால் கண்டறிய முடியாத தெய்வ இரகசியம். ஒருவருக்கு இன்னொருவர் கஷ்டத்தை உண்டுபண்ண முடியாது. ஒருவருடைய துரதிர்ஷ்டம் இன்னொருவரைத் தொடர முடியாது." "சரி சூரியா! உன்னோடு வாதம் செய்ய என்னால் முடியுமா? பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய் சொல்!" "கடவுள் எந்தெந்த நிலைமையில் நம்மை வைத்திருக்கிறாரோ அந்தந்த நிலைமையில் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியது" என்றான் சூரியா. "இப்போது என்னுடைய கடமை என்ன!" என்று சீதா கேட்டாள். "அத்தங்கா! இப்போது உன்னுடைய கடமை இந்த எலெக்ஷனில் பட்டாபி ஜயிக்கும்படி செய்வதுதான். மாப்பிள்ளை பட்டாபியின் மனதை என்னைப் போல் அறிந்தவர்கள் இல்லை, பட்டம் பதவியின் பேரில் அவருக்கு மோகமே கிடையாது. ஆறு மாதத்துக்கு முன்னால் அவரிடம் 'தேர்தலுக்கு நில்லுங்கள்' என்று யாராவது சொல்லியிருந்தால் குலுங்கச் சிரித்திருப்பார். அப்படிப்பட்டவருடைய மனதில் தேர்தல் வெறியை நீ மூட்டிவிட்டாய்! இதுவரை தேர்தல் வேலையில் ஒத்தாசையும் செய்து வந்திருக்கிறாய். இந்தச் சமயத்தில் நீ கைவிட்டு போனால் அடியோடு எல்லாம் மாறிப் போனாலும் போகும். ஆகையால் தேர்தல் தேதி வரையில் இருந்து, ஆரம்பித்த காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை" என்றான் சூரியா.
"நீ சொல்வதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும் இந்த வீட்டில் இனிமேல் நான் எப்படி இருக்க முடியும்? நீ வருவதற்குச் சற்று முன்னால் இங்கே என்ன பேச்சு நடந்தது என்று உனக்குத் தெரியாது. என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டு மறுகாரியம் பார்க்கும்படி லலிதா பட்டாபிராமனிடம் சொன்னாள். 'சீதா இந்த வீட்டை விட்டுப் போகமாட்டாள், போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!' என்று பட்டாபிராமன் சொன்னார். இந்த வார்த்தைகளை என் காதாலேயே கேட்டேன். நிலைமை இவ்வளவு விகாரமாகப் போன பிறகு நான் இந்த வீட்டில் இருக்கலாமா?" "அத்தங்கா! அவர்கள் இரண்டு பேரும் புத்தி நிதானமாயிருக்கும்போது அவ்விதம் சொல்லியிருக்க மாட்டார்கள். லலிதா ஏதோ கோபத்தில் உளறியிருக்கிறாள். பட்டாபியும் ஆத்திரத்தினால் யோசியாமல் ஏதோ சொல்லி யிருக்கிறார். நீ தேர்தல் முடியும் வரையில் இங்கே இருக்க வேண்டும் என்று லலிதாவைக் கொண்டே நான் கேட்டுக் கொள்ளச் செய்கிறேன்." "அவள் கேட்டுக் கொண்டு என்ன பிரயோசனம்? மாமி வேறு வந்திருக்கிறாள். மாமிக்கு ஏற்கெனவே என் பேரில் அசாத்தியமான கோபம். இதெல்லாம் மாமிக்குத் தெரிந்தால் என்னை இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது இருக்க விடுவாளா?" "மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகவேண்டும் என்ற ஆசை அம்மாவின் மனதில் குடிகொண்டு விட்டது. அதற்காக உன் காலில் விழுந்து வேண்டிக் கொள்ள வண்டுமானாலும் வேண்டிக் கொள்வாள். உண்மையில் உன்னை இங்கே இருக்கும்படி செய்வதற்காகவே அம்மா இப்போது வந்திருக்கிறாள், தெரியுமா?"
இதைக் கேட்டதும் சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. இத்தனை நேரம் வாடிச் சுருங்கியிருந்த அவளுடைய முகத்தில் சிறிது மலர்ச்சி உண்டாயிற்று "சூரியா! நீ சொல்வது உண்மைதானா? அல்லது பரிகாசம் செய்கிறாயா!" என்று கேட்டாள். "பரிகாசம் இல்லை; உண்மைதான்! இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் அம்மாவே உன்னிடம் வந்து சொல்லுவாள். ராஜம்பேட்டை சீமாச்சுவய்யர் பட்டாபிக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை செய்கிறாராமே?" "ஆமாம்! அதைப்பற்றி என்ன?" "சீமாச்சுவய்யர் இங்கிருந்து கிராமத்துக்கு வந்து அம்மாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொன்னார். நீ தான் பட்டாபியின் புத்தியைக் கெடுத்துவிட்டாய் என்றும், எலெக்ஷனுக்கு நிற்பதில் பணம் எல்லாம் போய்விடும் என்றும், லலிதாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்றும் சொன்னார். ஆனால் பலன் சீமாச்சுவய்யர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக ஆயிற்று. மாப்பிள்ளை பெரிய உத்தியோகத்துக்குப் போகவில்லையென்று அம்மாவுக்கு ரொம்பக் குறை. இப்போது சேர்மன் வேலையாவது ஆகட்டும் என்று நூறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறாள். பெண்ணுக்குப் புத்தி சொல்வதற்காகவும் உன்னை உற்சாகப்படுத்து வதற்காகவும் வந்திருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றது தப்பு என்று நான் சொன்ன தற்காக என்பேரில் அம்மாவுக்கு அசாத்தியான கோபம்."
இந்த அதிசயத்தைக் குறித்துச் சீதா சிறிது நேரம் யோசனை செய்து கொண்டிருந்தாள். பிறகு சூரியாவைப் பார்த்து, "நான் எப்படியும் மதராசுக்கு ஒரு நடை போக வேண்டும், சூரியா! குழந்தை வஸந்தியிடமிருந்து நேற்று கடிதம் வந்திருக் கிறது" என்றாள். "வஸந்தி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்?" என்று சூரியா கேட்டான். "இன்னும் நாலு நாளில் பள்ளிக்கூடம் சாத்தி விடுவார்களாம். என்னைப் பார்க்க ஆசையாயிருக்கிறதாம். உடனே மதராசுக்கு வந்து அழைத்துப் போகும்படி எழுதியிருக்கிறாள்." "அத்தங்கா! நீ எலெக்ஷன் வேலையைப் பார்! நான் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வருகிறேன்!" என்றான் சூரியா. சரஸ்வதி அம்மாள் தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "உன்னைப் போல் அசட்டுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. உன் அகத்துக்காரர் எலெக்ஷனில் ஜயிப்பதற்கு அந்தப் பெண் சீதா எவ்வளவோ பாடுபட்டு வேலை செய்கிறாளாம்; நீ ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாயாமே?" என்றாள். "அம்மா! உனக்குக்கூட எலெக்ஷன் பைத்தியம் பிடித்து விட்டு! எலெக்ஷன் என்றாள் ஏதோ சாதாரண விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் எவ்வளவோ விரோதங்கள் வந்து சேரும். என் மாமனார் எலெக்ஷனில் தலையிட்டதனால் எவ்வளவு சங்கடப்பட்டார், தெரியுமா?" "எல்லாம் தெரியுமடி, தெரியும். எனக்குத் தெரியாததற்கு நீ சொல்ல வந்துவிட்டாய்? எனக்கு முன்னாலேயே நீ பிறந்து விட்டாயோ? அந்தப் பிராமணர் வேறே யாருக்காகவோ எலெக்ஷன் வேலை செய்து சங்கடத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். இது அப்படியில்லையே! மாப்பிள்ளையே தானே நிற்கிறார்?"
"மாப்பிள்ளையே நின்றால் விரோதம் வராமல் போய்விடுமா?" "எந்தக் காரியத்திலேதான் விரோதம் ஏற்படாமல் இருக்கிறது? வெற்றிலைப் பாக்குக் கடை வைத்து நாலு காசு லாபம் சம்பாதித்தால் அதற்குக்கூட நாலு பேர் விரோதம். யாராவது ஒரு பொம்மனாட்டி நல்ல புடவை கட்டிக் கொண்டால் அதைப் பார்த்து நாலு பேருக்கு அசூயை. மாட்டு வண்டியிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். மோட்டாரிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். அப்படியெல்லாம் விரோதம் வரும் என்று பயந்து கொண்டிருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியுமோ? ஆண்டிப் பரதேசியாய்ப் போக வேண்டியதுதான். மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயித்தால் நாளைக்குச் சேர்மன் வேலைக்கு வரலாம் என்று சொல்கிறார்களே? அது நிஜந்தானே?" "வந்தால் என்ன பிரயோசனம் அம்மா! சேர்மன் என்று நெற்றியில் எழுதிக் கட்டிக் கொள்கிறதா?" "சீ! அசடே! ஏதாவது ஏடாகூடமாய்ச் சொல்லாதே! சேர்மன் வேலை என்றால் சாதாரணம் என்று நினைக்கிறாயோ?
என்னுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா இதே தேவப்பட்டணத்தில் சேர்மனாயிருந்தார். அவருடைய வீட்டுக்குச் சேர்மன் வீடு என்று பெயர். அந்தக் காலத்திலே மோட்டார் வண்டி இல்லை. இரட்டைக் குதிரை சாரட்டில் ஆபீஸுக்கு கிளம்புவார். அதைப் பார்க்க வீதியில் உள்ளவர்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். தாத்தாவுடன் இரட்டைக் குதிரை சாரட்டில் நான்கூட ஒரு தடவை ஏறிப் போயிருக்கிறேன். நன்றாக ஞாபகமாயிருக்கிறது." லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது, மனதிலும் மகிழ்ச்சி உண்டாயிற்று. சீதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றித் தன்னிடம் சண்டை பிடிக்கவும் அவளை உடனே வீட்டைவிட்டு அனுப்பச் சொல்லவுமே அம்மா புறப்பட்டு வந்திருப்பதாக நினைத்தாள். விஷயம் அதற்கு மாறாயிருக்கவே லலிதாவின் மனத்திலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. "அம்மா! முன்னெல்லாம் சேர்மன் வேலைக்கு இருந்த கௌரவம் இப்போது கிடையாது. அப்படியேயிருந்தாலும், அதற்காகச் செலவழிக்கிற பணம் எல்லாம் என்ன ஆகிறது? நம்மிடத்தில் பணம் கொட்டியா கிடக்கிறது? சேர்மன் உத்தியோகத்துக்குச் சம்பளம் கிடையாது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.
"சம்பளம் இல்லாமற் போனால், என்ன? பட்டிக்காட்டில் இருந்தால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ. முன்னேயெல்லாம் சேர்மன் வேலை என்றால் வெறும் கௌரவந்தான். இப்போது கௌரவத்துடன் வருமானமும் உண்டு. இத்தனை நாளும் இந்த ஊரிலே சேர்மன் வேலை பார்த்தவர் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித் திருக்கிறாராம். வியாபாரிகளுக்குச் சர்க்கரை பெர்மிட் வாங்கிக் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். அவர் குழந்தைக்குப் போன வருஷம் ஆண்டு நிறைவு கலியாணம் நடந்ததாம். அரை லட்சத்துக்குப் 'பிரஸெண்டு' மட்டும் வந்ததாம். உன் குழந்தைகளுக்குத்தான், ஆண்டு நிறைவு நடந்தது. என்ன கிடைத்தது? வந்திருந்தவர்களுக்குப் போலீஸ் காரர்களின் குண்டாந்தடி அடிதான் கிடைத்தது." லலிதா களுக்கென்று சிரித்தாள். "என்னடி சிரிக்கிறாய். பெண்ணே? நான் சொல்கிறது சிரிப்பாயிருக்கிறதா!" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். "அதற்காகச் சிரிக்கவில்லை அம்மா! நீ சொல்கிறது ஒரு விதத்தில் உண்மைதான். சில பேர் சேர்மன் வேலையிலே கூடப் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் உன் மாப்பிள்ளை அப்படிப்பட்டவர் இல்லையே என்பதை நினைத்துக்கொண்டு சிரித்தேன். அவர் கை நீட்டிப் பணம் வாங்கவும் மாட்டார்; பிரஸெண்டு வாங்கவும் மாட்டார்.
ஒருவரை ஒன்று கேட்கவும் மாட்டார்." "இவர் என்னத்துக்காக வாங்கவேணும்? இவர் கை நீட்டி ஒன்றும் வாங்க வேண்டியதில்லை. ஒருவரை ஒன்று கேட்க வேண்டியதுமில்லை. சேர்மன் வேலை ஆகிவிட்டால் எல்லாம் தானே தேடிக் கொண்டு வராதா?" இதைக் கேட்டுக்கொண்டே சீதா சமையலறைக்குள் வந்தாள். லலிதா அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். தனக்கும் தன் புருஷனுக்கும் நடந்த பேச்சைச் சீதா மேல் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது லலிதாவுக்குத் தெரியாது. ஆகையால் கொஞ்சம் குதூகலமாகவே சீதாவைப் பார்த்து "அத்தங்கா! கேட்டாயா அதிசயத்தை! அம்மா ஒரேயடியாக உன் கட்சி பேசுகிறாள். இந்த எலெக்ஷன் விஷயத்திலே நம் வீட்டில் உன் கட்சிக்குத்தான் மெஜாரிடி இருக்கிறது; நான் மைனாரிடியாகி விட்டேன். அம்மாவுக்கு இருக்கிற உற்சாகத்தைப் பார்த்தால் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு இவளே வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்பாள் போலிருக்கிறது!" என்றாள் லலிதா.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பன்னிரண்டாம் அத்தியாயம்
சீதாவின் பெருமிதம்
"சீதா! வாடி, அம்மா! நான் சகல விஷயமும் கேள்விப்பட்டேன்! மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது?" என்றாள் சரஸ்வதி அம்மாள். சூரியா சொன்னதிலிருந்து மாமியின் மனோபாவத்தைச் சீதா கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் இவ்வளவு அன்பும் ஆதரவுமாகப் பேசியது சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மாமி! நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா! என்னுடைய தலைப்பொறுப்பு நீங்கிற்று. இனிமேல் எல்லாம் உங்கள் பாடு! இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும்!" என்று சொன்னாள். "ஊருக்குக் கிளம்புகிறாயா? அழகாய்த் தானிருக்கிறது! நான் வந்துவிட்டேனே என்று சொல்கிறாயா? நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா!...." "மாமி! மாமி! சத்தியமாய் நான் அதற்காகச் சொல்லவில்லை. உங்கள் பேரில் எனக்கு என்ன விரோதமா? எப்போதாவது உங்க ளுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? உண்மையாகவே நான் ஊருக்குப் போக வேண்டும் என்றிருக்கிறேன்..." "எல்லாம் மாப்பிள்ளைக்கு எலெக்ஷன் ஆன பிற்பாடு போகலாம். நீ சொல்லித்தான் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறாராம். நீ மீட்டிங்கில் பேசுகிறாயாம்; பாடுகிறாயாம். உன்னால்தான் மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகப் போகிறதென்று இந்த ஜில்லாவெங்கும் பேச்சாயிருக்கிறது. அப்படியிருக்க, நீ திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்றால், மாப்பிள்ளைக்கு யார் ஒத்தாசை செய்வார்கள்?"
"உங்களுடைய மாப்பிள்ளைக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டியதில்லை. அவருடைய சாமர்த்தியத்துக்கு இன்னொருத்தரின் ஒத்தாசை எதற்கு? அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும்? உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி 'அஸ்து' சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி! உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் 'உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு!" என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் 'சீ!' என்று போய் விடுகிறது! அவர் மனம் வெறுத்து 'எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்! எங்கேயாவது காசி ராமேஸ்வரத்திற்குப் போய் விடுகிறேன். இல்லாவிட்டால் திருவண்ணாமலைக்குப் போய் ரமண ரிஷிகளின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறேன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்று காலை முதல் பாருங்கள், இரண்டு பேருக்கும் ஒரே சண்டை!...." சரஸ்வதி அம்மாள் கோபத்தோடு தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "ஏண்டி லலிதா! இப்படித்தான் செய்கிறதா? அழகாயிருக்கிறதடி! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன? யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா? இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது! இல்லா விட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு!"
"சரி, அம்மா! நான் போய்விடுகிறேன்!" என்று லலிதா விளையாட்டுப் புன்சிரிப்புடன் கூறினாள். "பார்த்தீர்களா, மாமி இவள் சொல்வதை? ஊருக்குப் போய் விடுகிறாளாம்! நன்றாயிருக்கிறதல்லவா கதை? நாளைக்கு மாப்பிள்ளை எலெக்ஷனில் ஜயித்ததும், இவளைச் 'சேர்மனுடைய ஒயிப்' என்றும், 'மிஸ்ஸஸ் சேர்மேன்' என்றும் கொண்டாடப் போகிறார்களா? வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா? டீ பார்ட்டி களுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் பாகிறார்களா? 'எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவேண்டும்', 'எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்' என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா? குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா? வேறு யாராவது உட்காரப் போகிறார்களா? அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்!" "கொஞ்சம் சொல்கிறது என்ன? நிறையச் சொல்லுகிறேன். இவள் மாத்திரம்தான் இப்படி என்று நினைக்காதே. இவளுடைய அண்ணா இருக்கிறானே, உன்னுடைய அம்மாஞ்சி சூரியா, அவனும் இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான்.
எலெக்ஷனுக்கு நின்று விட்டதால் ஏதோ குடி முழுகிவிட்டது போல உளறுகிறான். 'வாயை மூடிக் கொண்டிரு! மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே!' என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன்.
அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள்! பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு! அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம்! அடியே, சீதா! உனக்கு இருக்கிற புத்தியிலே எட்டிலே ஒன்று இவர்களுக்கு இருக்கக் கூடாதா?" சீதாவின் உடல் பூரித்தது; உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தன்னைக் கண்டால் வேப்பங்காயைப் போல் கசந்து கொண்டிருந்த மாமி இப்படித் தன்னைச் சிலாகிக்கும் காலம் ஒன்று வரும் என்று சீதா கனவிலும் எண்ணியதில்லை. அப்படிப்பட்ட காலம் வந்தே விட்டது! இதை நினைத்துச் சீதாவின் நெஞ்சம் பெருமிதத்தினால் வெடித்து விடும் போல் விம்மியதில் வியப்பில்லையல்லவா! லலிதாவுக்கோ அம்மாவின் பேச்செல்லாம் ஒரு விதத்தில் கசப்பாயும் இன்னொரு விதத்தில் சந்தோஷ மாயும் இருந்தது. அம்மாவின் அப்பட்டமான சுயநலப் பேச்சுக் கசப்பாயிருந்தது. தன் அருமைத் தோழியின் விஷயத்தில் அம்மாவின் மனோ பாவம் மாறியது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. இந்த ஒரு நல்ல பயனுக்காகவே தன் புருஷன் தேர்தலுக்கு நின்றது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது.
"அம்மா! இத்தனை நாளைக்குப் பிறகு இப்போதாவது நீ அத்தங்காள் நல்லவள் என்றும் புத்திசாலி என்றும் ஒப்புக் கொண்டாயே? அதற்காக ரொம்ப சந்தோஷம்?" என்றாள். "அதென்ன அப்படிச் சொல்கிறாய், லலிதா! நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா? சீதா! நீயே சொல்லடி, அம்மா! உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒழுங்காகக் குடித்தனம் செய்து வாழவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா? அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம்? எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள்? ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா! இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மாமி! அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. என் குழந்தை வஸந்தியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, பள்ளிக்கூடம் சாத்தப் போகிறார்கள் என்று. குழந்தையைப் பார்ப்பதற்கு நான் போக வேண்டாமா?" "சூரியாவைப் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னால் போகிறது. நீ மட்டும் இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் இந்தண்டை அந்தண்டை போகக் கூடாது." "நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் போக வில்லை, மாமி! சூரியாவையே போக சொல்லுங்கள். ஆனால் உங்கள் பெண்ணிடம் மட்டும் நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள். அவள் அபசகுணம் போல எதற்கெடுத்தாலும் 'அஸ்து' என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது..."
"லலிதாவைப் பற்றி இனிமேல் நீ கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம். லலிதா வாயைத் திறந்தால் நீ என்னைக் கேள். நாலு அறை கொடுத்து ஒரு அறையில் தள்ளிக் கதவைப் பூட்டி விடுகிறேன். நாலு வருஷமாய் மாப்பிள்ளை வருமானமே இல்லாமலிருக்கிறார். இந்த சேர்மன் வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று நம்முடைய குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சீமாச்சு மாமா மெனக்கெட்டு வந்து உன்னைப்பற்றி ஏதேதோ புகார் சொன்னார். அதை யெல்லாம் நான் கேட்பேனா? 'போங்காணும்! யார் மேலாவது கோள் சொல்வதே உமக்கு வேலை! உம்முடைய வேலையைப் பாரும்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். சீமாச்சு மாமாவுக்கு இப்போதுள்ள சேர்மன் ஜவுளி லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாராம். அதிலே ரொம்பப் பணம் இவருக்கு லாபமாம். இரண்டு மச்சு வீடு கட்டியாகிவிட்டது! அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா! உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர் களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையா யிருந்திருக்கிறாயே? அதைச் சொல்லு! உனக்கு இவள் என்ன வேணுமானாலும் செய்யலாம். தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும்!" என்று சொன்னாள் சரஸ்வதி அம்மாள். சீதா சற்று முன் தான் அடைந்த மனவேதனையை அடியோடு மறந்து, குதூகலத்தினால் மெய்மறந்தாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதின்மூன்றாம் அத்தியாயம்
ராகவன் பகற் கனவு
நீலத்திரைக் கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த எஸ்.எஸ். எலிஸெபத் என்னும் பிரயாணக் கப்பல். அதில் நமது கதாநாயகன் சௌந்தரராகவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பெரும் பிரயத்தனம் செய்து அந்தக் கப்பலில் சௌந்தரராகவன் இடம் பெற வேண்டியிருந்தது. மகாயுத்தம் முடிந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை யாதலால் கப்பல்களில் பிரயாணிகளுக்கு இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. யுத்தம் முடிந்து சில மாதத்துக்கெல்லாம் ராகவன் இங்கிலாந்துக்குச் சென்றான். போதிய காரணமில்லாமல் தன்னைச் சர்க்கார் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவது இங்கிலாந்து சென்றதன் நோக்கம். என்னதான் கம்பெனி வேலை என்றாலும், அதில் சம்பளம் எவ்வளவுதான் கிடைத்தாலும், சர்க்கார் உத்தியோகத்துக்கு ஈடாகாதென்பது ராகவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போய்விட்டது. மேலும் எதற்காகத் தன் பேரில் ஒரு வீண் அபாண்டம் சர்க்கார் தஸ்தாவேஜுகளில் இருக்க வேண்டும்? யுத்தத்தில் பிரிட்டன் தோற்றுப் போய் இந்தியாவில் அரசாங்கம் மாறியிருந்தாலும் ஒருவாறு மனநிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் யுத்தத்தில் பிரிட்டன் ஜயித்து இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்திருக்கிறது! அவ்விதமிருக்கும்போது சர்க்கார் உத்தியோகத்தை எப்படி அவன் அலட்சியம் செய்ய முடியும்.
ஆரம்ப காலத்தில் ராகவனுடைய பொருளாதார ஞானத்தை மெச்சி உத்தியோகம் கொடுத்த துரை இங்கிலாந் திலேதான் அச்சமயம் இருந்தார். அவரிடம் தன்னுடைய கட்சியைச் சொல்லி முறையிட்டுச் சிபாரிசு பெறலாம் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அந்த ஆசை எவ்வளவு வீண் ஆசை என்பது இங்கிலாந்துக்குப் போன பிறகு தான் தெரிந்தது. யுத்தத்தின் போது ஜெர்மன் விமானங்கள் இங்கிலாந்தின் பெரும் பகுதியைப் பாழாக்கியிருந்தன. கோடானு கோடி பணம் யுத்தத்தில் செலவான காரணத்தினால் இங்கிலாந்து 'இன்ஸால்வெண்ட்' ஆகிவிடுமோ என்று பயப்படும்படியான நிலைமையில் இருந்தது. ஆங்கில மக்கள் போதிய உணவில்லாமலும், உடையில்லாமலும் மற்ற வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ராகவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி யார் உருகிக் கண்ணீர் வடிப்பார்கள்? அவனுடைய குறையைக் காதிலேதான் யார் வாங்கிக் கொள்வார்கள்? ராகவனுக்கு உத்தியோகம் கொடுத்து அவனைச் செல்லப் பிள்ளையைப் போல் நடத்திய துரைகூட இப்போது அவனுடைய புகாரைப் பொருட்படுத்தவில்லை. "மிஸ்டர் ராகவன்! இங்கே நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்கிற பாடே பெரும்பாடாக இருக்கிறது. பெரிய பெரிய சீமான்கள் எல்லாருமே தினந்தோறும் க்யூவில் நின்று அரை ராத்தல் ரொட்டி வாங்கிக் கொண்டு வந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது; நீ உனக்கு உத்தியோகம் போனதைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறாய்.
உன்னுடைய புகாரை எடுத்துக்கொண்டு நான் இங்கே யாரிடமாவது சிபாரிசு செய்யப் போனால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்! நீ வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு வேலை கிடைத்தால் நான் கூட வந்துவிடுவேன்! இங்கே நீ வீணாக அலைந்து காலங் கழிக்காதே! இந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கிடைத்திருக்கும் உத்தியோகத்தைச் சரியாகக் காப்பாற்றிக் கொள்!" என்று மாஜி வரவு செலவு இலாகாத் தலைவர் கூறிய புத்திமதி ராகவனைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் துரை இன்னொரு விஷயமும் சொன்னார்:- "ராகவன்! இனிமேல் இந்தியாவில் சர்க்கார் உத்தியோகத்துக்கு முன்னைப் போல் அவ்வளவு மதிப்பு இராது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்து விடுவது என்று இங்கே தொழிற் கட்சி மந்திரிகள் தீர்மானம் செய்து விட்டார்கள். அது சரியான தீர்மானம்! ஏனெனில் எங்களால் இனிமேல் நாற்பது கோடி ஜனங்கள் உள்ள ஒரு தேசத்தைக் கட்டி ஆள முடியாது. அதற்கு வேண்டிய ஆள் பலமும் வசதிகளும் இங்கே இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்றால் முதலில் காங்கிரஸ்காரர்கள்தான் அதிகாரத்திற்கு வருவார்கள். காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் நீ சர்க்கார் உத்தியோகம் பார்க்க விரும்ப மாட்டாய் அல்லவா?" ராகவனுடைய உள்ளம் மேலும் குழப்பத்தை அடைந்தது. துரையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் சர்க்கார் உத்தியோகம் திரும்பக் கிடைக்கும் என்ற ஆசை போய்விட்டது! நல்லவேளை, கம்பெனி உத்தியோகத்தை அவன் விட்டுவிடவில்லை. நாலு மாதம் லீவு வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான். திரும்பிப் போய்க் கம்பெனி உத்தியோகத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.
இந்தியாவுக்குப் போகும் கப்பலில் இடம் கிடைப்பது மிகவும் பிரயாசையாயிருந்தது. கப்பலுக்காக காத்திருந்த சமயத்தில் அங்குமிங்கும் அவன் சுற்றியலைந்தான். அப்படி அலைந்த போது அவன் கண்ட காட்சிகளும் கேட்ட விஷயங்களும் அவனுடைய மனதில் ஆச்சரியமான ஒரு மாறுதலை உண்டாக்கின. ஆகா! இந்த இங்கிலீஷ்காரர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய தீரர்கள்? நாட்டின் சுதந்திரத்துக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நாட்டின் சுபிட்சத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்? ஆனால் இந்தியாவில் நாம் இத்தனை காலமும் என்ன செய்து வந்தோம். அன்னியர்களின் கீழ் அடிமை உத்தியோகம் பார்த்து வந்தோம். அதைத் திரும்பப் பெறுவதற்காகக் கெஞ்சி மணியம் செய்ய இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். சீ! இது என்ன மானங்கெட்ட பிழைப்பு? இங்கிலீஷ் படிப்பு என்ன மாதிரி நம்முடைய புத்தியைக் கெடுத்து விட்டது? போனதற்கெல்லாம் பரிகாரமாக, இனிமேல் நடந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஏதேனும் ஒரு பிரமிக்கும்படியான காரியம் செய்ய வேண்டும்... எஸ்.எஸ். எலிஸபெத் கப்பலின் மேல் தளத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு சௌந்தரராகவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது மேற்கண்டவாறு பற்பல எண்ணங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தன. மனதை அதன் போக்கிலேயே விட்டபோது பதினைந்து வருஷங்களுக்கு முன் கராச்சியிலிருந்து பம்பாய்க்குக் கப்பலில் பிரயாணம் செய்ததில் வந்து மனம் நின்றது.
ஆகா! அந்தப் பிரயாணம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! அது பெரும்பாலும் சாமான்கள் அடுக்கிய சாதாரண நாலாந்தரமான கப்பல்தான்; இந்தக் கப்பலின் விஸ்தீரணத்திலோ கம்பீரத்திலோ அழகிலோ வசதியிலோ எட்டில் ஒரு பங்குகூட அந்தக் கப்பலில் இல்லை! ஆயினும் அந்தக் கப்பலில் அவன் அப்போது செய்த பிரயாணம் ஆகாய வெளியில் புஷ்ப ரதத்தில் தேவ தேவியர்களுக்கு மத்தியில் கந்தர்வர்களின் கானத்தைக் கேட்டுக் கொண்டு செய்த பிரயாணத்தைப் போல் ஆனந்தமயமாயிருந்தது. காரணம், அதே கப்பலில் தாரிணியும் பிரயாணம் செய்ததுதான். அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்? கொஞ்சம் பிடிவாதம் பிடித்துத் தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும்? தாரிணியிடமிருந்து மனம் சீதாவிடம் பாய்ந்தது. தாரிணியைப் புறக்கணித்தது ஒரு பிசகு என்றால், சீதாவை மணந்து கொண்டது அதைவிடப் பெரிய பிசகு. கிட்டாவய்யர் மகள் லலிதாவைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இல்வாழ்க்கை நிம்மதியாகவாவது இருந்திருக்கும். லலிதாவைப் பார்க்க போன இடத்தில் இவள் குறுக்கே வந்து சேர்ந்தாள்! கண்களை அகல விரித்துப் பார்த்து நம்முடைய மதியை மயக்கிவிட்டாள்! ஒரு விஷயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கண்ணழகிலே மட்டும் சீதாவுக்கு இணையில்லைதான். தாரிணியின் கண்களைக் காட்டிலுங்கூடச் சீதாவின் கண்கள் கொஞ்சம் அதிகம் அழகானவை என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் கண்ணழகு மட்டும் ஒரு பெண்ணிடம் இருந்தால் போதுமா? போதாது என்பதற்குத் தன்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அந்தக் கண்களின் வழியாக அவளுடைய உள்ளத்தின் இயல்பைப் பார்க்கும் சக்தி தனக்கும் இல்லாமல் போய்விட்டதே? சீச்சீ! என்ன சஞ்சலபுத்தி? என்ன சண்டை பிடிக்கும் சுபாவம்? என்ன அசூயை? என்ன ஆத்திரம்? பெண்களின் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பிரம்மதேவன் சீதாவைப் படைத்திருக்க வேண்டும்! 'சீதா' என்னும் பெயரைக் காட்டிலும் சூர்ப்பனகை என்னும் பெயர் அவளுக்கு அதிகப் பொருத்தமாயிருக்கும்.
சீச்சீ! இது என்ன எண்ணம்? தவறு முழுவதும் சீதாவினுடையதுதானா? தன் பேரிலும் தவறு இருக்கத்தான் இருக்கிறது! அவளை நடத்தவேண்டியபடி முதலிலிருந்தே நடத்தியிருந்தால் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அடங்கி நடந்திருப்பாள். புது டில்லி நாகரிக வாழ்க்கைக்கு அவளைத் தயார்ப் பண்ண யத்தனித்தது அல்லவா இப்படி வினையாக வந்து முடிந்தது? அவள் சுபாவம் கெட்டுப் போனதற்கு அந்த மடையன் சூரியாவும் ஒரு காரணம். தன்னுடைய அபிப்பிராயங்க
ளைக்காட்டிலும் சூரியாவினுடைய அபிப்பிராயங்கள் அல்லவா அவளுக்கு மேலாகப் போயிருந்தன? கடைசியாக எப்படிப் பட்ட படுகுழியில் கொண்டு போய் அந்தப் படுபாவி அவளைத் தள்ளி விட்டான்? இந்த ஸ்திரீகளின் சுபாவமே அதிசயமானது
தான்! சூரியாவிடம் அப்படி என்ன அழகை, அற்புதத்தை, இவர்கள் கண்டு விட்டார்களோ, தெரியவில்லை. சீதாவாவது 'அம்மாஞ்சி' என்று சொல்லி உருகிக் கொண்டிருந்தாள். தாரிணிக்கும் சூரியாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்குள் எப்படிச் சிநேகம் ஏற்பட முடியும்? ஆகா! சூரியாவைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்காகத் தாரிணி எப்பேர்ப்பட்ட சாகஸமான காரியம் செய்தாள்: என்ன துணிச்சல்! என்ன தைரியம்? இரண்டு பேரும் அன்றைக்கு மறைந்தவர்கள் அப்புறம் வெளிப்படவே இல்லை! மத்திய சர்க்காரின் துப்பறியும் இலாகா எவ்வளவோ முயன்றும் பயனில்லை!
எப்படி அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்கள்?
இதில் ரொம்பவும் விசித்திரமான வேடிக்கை என்னவென்றால், கல்கத்தாவில் சீதாவைத் தாரிணி என்ற பெயரால் கைது செய்து பாதுகாப்பு சிறையிலே வைத்திருந்ததுதான்! இந்த விஷயம் கல்கத்தாவுக்கு வந்து, கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் ராகவனுக்குத் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி அவன் நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாமல் இருந்தது. அவள் தாரிணி இல்லை, சீதா என்று தான் சொன்னால், அவள் கைதியானபோது ஏன் அதைச் சொல்லவில்லை என்று கேட்பார்கள் அல்லவா? டில்லியிலிருந்து அவள் கல்கத்தா வந்த காரணம் என்னவென்று கேட்பார்கள் அல்லவா? அந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? கிடக்கட்டும், கிடக்கட்டும்! சிறையிலேயே அடைந்து கிடக்கட்டும்; நன்றாக புத்தி வரட்டும்; எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும்போது அவளுக்கும் விடுதலை கிடைத்து வெளி வரட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் சீதாவுக்கு இன்னொரு 'சான்ஸ்' கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான்! அவளுடன் இல்லறம் நடத்த இன்னொரு பிரயத்தனம் செய்ய வேண்டியதுதான்! இவ்விதம் சௌந்தரராகவன் மனமுவந்து தயவு செய்து எண்ணிய தற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, சீதாவுடன் தான் இல்வாழ்க்கை நடத்தாவிட்டால் பாமா என்கிற பிசாசின் வாயில் விழ வேண்டியிருக்கும்! அது இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பு நெருப்பில் விழுவது போலாகும் இரண்டாவது காரணம், குழந்தை வஸந்தி, சீமைக்குப் புறப்படுமுன் ராகவன் சென்னைக்குத் தன் மகளைப் பார்க்கப் போயிருந்தான். அப்போது குழந்தை தன் கபடமற்ற கண்களினால் தந்தையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "அப்பா! அம்மாவை அழைத்து வரவில்லையா?" என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் தொனித்த ஆதங்கத்தை ராகவனால் மறக்கவே முடியவில்லை. குழந்தையை முன்னிட்டாவது மறுபடியும் ஒரு தடவை குடித்தனம் நடத்திப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
மூன்றாவதாக இன்னொரு காரணமும் இருந்தது; அது கொஞ்சம் விசித்திரமான காரணந்தான்.
ராகவன் புதுடில்லியை விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வீட்டுக்குள் திடீரென்று ஒரு ஸ்திரீ வந்தாள். அவளுடைய தோற்றம் அச்சத்தை அளித்தது. அதைவிட அவள் பேச்சுப் பயங்கரமாயிருந்தது. "நான் யார் தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியாது!" என்றான் ராகவன். "உன் மனைவி சீதாவின் தாயார் நான்!" என்றாள் அந்த ஸ்திரீ. ராகவன் சிரித்துக் கொண்டே, "சீதாவுக்கு எத்தனை தாயார்?" என்று கேட்டான். "சிரிக்காதே! உன் சாமர்த்தியம் உன்னோடு இருக்கட்டும். சீதா என்னுடைய மகள், வயிற்றில் பெற்ற மகள் அல்ல; ஆனாலும் அதைவிட அதிகம். உன் மனைவி ஒரு ரத்தினஹாரம் போட்டுக் கொண்டிருந்தாளே? அது இருக்கிறதா? அல்லது விற்றுச் சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்டாள். ராகவன் சிறிது வியப்பும் அச்சமும் அடைந்தான். ஆயினும் வெளிக்கு அதைரியத்தைக் காட்டிக்கொள்ளாமல், "நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ யார்? உன் பெயர் என்ன?" என்று அதட்டிக் கேட்டான். "சொல்கிறேன், கேள். நான் உன் மாமியார்; என் பெயர் ரஸியா பேகம்; அந்த ரத்தின ஹாரத்தை நான் சீதாவுக்குக் கொடுத்தேன், அதனாலேதான் கேட்கிறேன். அது போனால் போகட்டும். சீதாவை நீ கஷ்டப்படுத்துகிறாய் என்று எனக்குத் தெரியும். உங்களிடமிருந்து தொல்லைப்படுவதைக் காட்டிலும் சிறையிலிருப்பது மேல் என்று எண்ணி அவள் சிறைக்குப் போயிருக்கிறாள். ஒரு நாள் வெளியில் வருவாள். அப்போது அவளை நீ சரியாக நடத்திப் பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும்.
இல்லாவிட்டால் உன்னை இந்தக் கத்தியால் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லி ஒரு கத்தியை எடுத்துக் காட்டினாள். ராகவன் இப்போது உண்மையாகவே பயந்து நடுங்கிப் போனான். அவனால் வாயைத் திறக்கவே முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "ரஜனீபூர் பைத்தியம்" என்று ஒரு ஸ்திரீ ரஜனிபூர் ராஜாவைக் கொல்லப் பார்த்தாள் என்றும் அவள் டில்லியில் திரிந்து கொண்டிருந்தாள் என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். "நீ ரஜனிபூர்...." என்று தயக்கத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தவுடனே, "ஆமாம்; நான் ரஜனிபூர் மகாராணிதான்! என் அருமை மகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்! இல்லாவிட்டால் உன்னை நிச்சயமாய்க் குத்திக் கொன்று விடுவேன்!" என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ போய்விட்டாள். இந்தச் சம்பவம் கொஞ்ச நாள் வரையில் ராகவனுடைய மனதில் இடைவிடாமல் குடி கொண்டிருந்தது. ரஜனிபூர் பைத்தியம் என்பது யார் என்றும் அவளுக்கும் தன் மனைவி சீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அறிந்து கொள்ளப் பெரிதும் ஆவலாயிருந்தது. வேறு வழியில் இதைப்பற்றித் தெரிந்து கொள்ள முடிய வில்லை. சீதாவைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் உண்டு. நாளடைவில் ரஸியா பேகத்தின் வார்த்தைகளின் வேகம் மறைந்துவிட்டாலும் இன்னமும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் ராகவனுடைய மனதில் இருக்கத்தான் இருந்தது. அதற்காகவாவது சீதாவை மறுபடியும் கூட்டி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.... கடற்காற்று சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடல் அலைகளின் ஓசை பின்னணி சங்கீதத்தைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. ராகவனுக்குக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தன்னை அறியாமல் சாய்மான நாற்காலியில் படுத்த வண்ணம் அவன் தூங்கிப் போனான்.
அந்தப் பகற் தூக்கத்தில் ராகவன் ஒரு கனவு கண்டான். ஒரு பெரிய அரண்மனை, அதில் தர்பார் மண்டபம், பளிங்கு மேடையில் முத்து விதானத்தின் கீழ் அமைந்த நவரத்தின சிம்மாசனத்தில் ராணி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். "ரஜினிபூர் மகா ராணிக்கு ஜே!" என்ற கோஷம் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது. முதலில் தூரத்தில் நின்று பார்த்த ராகவன் அந்தச் சிம்மாசனத்தை நெருங்கிப் போனான். பத்து அடி தூரத்தில் சென்றதும் மகாராணி ராகவனைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "நான் யார் தெரிகிறதா?" என்று கேட்டாள். "ரஜினிபூர் ராணி!" என்றான் ராகவன். "நன்றாகப் பார்!" என்றாள் ராணி! உற்றுப் பார்த்த போது ராகவனுடைய உள்ளத்தைக் கவர்ந்த வேறொரு முகமாகத் தெரிந்தது. "ஆ! தாரிணி! நீயா?" என்று கேட்டான் ராகவன். "இன்னும் நன்றாய்ப் பார்! பார்த்துச் சொல்லு!" என்றாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மாது, ராகவன் பார்த்தான். இப்போது சீதாவின் முகமாகத் தெரிந்தது. "ஆ! சீதா! நீ தானா. தாரிணி மாதிரி எப்போது மாறினாய்!" என்று கேட்டான். "நான் மாறவில்லை, உங்கள் கண்களும் மனமும் மாறிவிட்டன" என்றாள் சீதா. "நான் உன்னைக் கஷ்டப்படுத்தியதை யெல்லாம் மன்னித்துவிடு!" என்றான் ராகவன். "நான் உங்களைக் கஷ்டப்படுத்தியதற்கும் நீங்கள் என்னைக் கஷ்டப்படுத்தியதற்கும் சரியாய்ப் போயிற்று. ஆகையால் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. குழந்தை வஸந்தி எங்கே?" என்று சிம்மாசனத்தில் கிரீடமணிந்து வீற்றிருந்த சீதா கேட்டாள்.
"ஆகா! வஸந்தியை மறந்து விட்டேனே! இதோ போய் அழைத்து வருகிறேன்!" என்று ஓடத் தொடங்கினான். வஸந்தியை எங்கேயோ விட்டு விட்டு வந்ததாக அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே என்பது நினைவில் இல்லை. ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்று கொண்டே ஓடினான். கால் புதைந்த ஆற்று மணலைக் கடந்து ஓடினான். ஓடையில் இறங்கித் தண்ணீரில் நனைந்து கொண்டு ஓடினான். காட்டிலும் மலையிலும் ஓடினான். பெரியதொரு அரண்மனையின் மேல்மாடி முகப்பில் ஓடினான். முதலில் "வஸந்தி!" "வஸந்தி!" என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடினான். பிறகு கூச்சல் போடவும் முடியாமல் தொண்டை நன்றாக அடைத்துக் கொண்டது. கால்கள் தடுமாறின; தலைச் சுற்றியது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து, "ஐயோ! வஸந்தி!" என்று கூச்சலிட்டான். யாரோ தோளைப் பிடித்துக் குலுக்கினார்கள்; உடனே விழிப்பு வந்து விட்டது. கனவு மயக்கத்தில் வஸந்திதான் என்று நினைத்துக் கொண்டு, "ஆ! என் கண்மணி! வந்து விட்டாயா!" என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கியவள் வஸந்தி அல்லவென்றும் பாமா என்றும் தெரிந்து கொண்டான். தன் மனதிற்குள்ளே, "அட பிசாசே! சற்று நேரம் என்னைச் சும்மா விடமாட்டாய்?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அந்தக் கனவு கண்டது முதல் ராகவனுக்கு வஸந்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அளவின்றிப் பெருகிற்று. குழந்தையை இனிமேல் என்றைக்கும் விட்டுப் பிரிவதில்லை என்று அடிக்கடி தீர்மானித்துக் கொண்டான். கனவை நினைத்துக் கொண்டு அவளுக்கு விபத்து ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே என்று ஓயாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.
பம்பாய்த் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கீழே இறங்கியவுடனே ஆகாய விமானத்தில் ஏறிச் சென்னைப்பட்டணத் துக்குச் சென்றான். பத்மாபுரத்தில் தன் தந்தை பத்மலோசன சாஸ்திரிகளின் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலில் வண்டி ஒன்று காத்துக் கொண்டிருந்தது. 'யாராவது ஊருக்குப் போகிறார்களா?' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். டாக்ஸி வண்டியின் சத்தத்தைக் கேட்டு அவனுடைய தாயார் வெளியில் வந்து பார்த்தாள். மகனை ஆவலுடன் வரவேற்றாள். "ஏன்டாப்பா! வருகிறதாகக் கடிதம் கூட எழுதவில்லையே!" என்று ஆவலாகச் சொன்னாள். ராகவன் அதைப்n பொருட் படுத்தாமல், "அம்மா! யாராவது ஊருக்குக் கிளம்புகிறார்களா?" என்று கேட்டான். "ஆமாண்டா, அப்பா! நீ வருகிறது தெரியாதோ இல்லையோ? சூரியா வந்திருக்கிறான். குழந்தை வஸந்தியை அழைத்துக் கொண்டு புறப்படுவதற்கிருந்தான். அதற்குள் நல்லவேளையாக நீ வந்து விட்டாய்!" என்றாள். "குழந்தையை எங்கே அழைத்துப் போவதாகச் சொன்னான்?" "தேவபட்டணத்துக்குத்தான். அங்கே அவள் அம்மா இருக்கிறாள் அல்லவா?" "ஓகோ! அப்படியா!" என்று கர்ஜித்தான் ராகவன். காமாட்சி அம்மாள், "நீ வந்துவிட்டபடியால் இன்றைக்குக் குழந்தை போவதற்கில்லை!" என்றாள். "இன்றைக்கும் இல்லை; என்றைக்கும் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். சூரியாவுடன் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராக நின்ற வஸந்தி அப்பாவைப் பார்த்ததும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். ராகவன் கால்சட்டைப் பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சூரியாவை நோக்கிக் குறி பார்த்து, "அடே காலிப்பயலே! உன்னைப் போன்ற அயோக்கிய சிகாமணியைக் கொன்றால் துளிக்கூடத் தோஷமில்லை!" என்று கர்ஜித்தான். சூரியா ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதிநான்காம் அத்தியாயம்
ரஜினிபூர் ராஜகுமாரி
சூரியா தன் திகைப்பை நீக்கிக் கொண்டு, "மாப்பிள்ளை! இது என்ன கோபம்? இங்கிலாந்தில் இருந்தபோது இங்கிலீஷ் சினிமாக்கள் அதிகமாகப் பார்த்தீர்களா, என்ன? ஒரு காரணமுமில்லாமல் துப்பாக்கியால் சுடுவேன் என்கிறீர்களே? தோட்டாக்களை வீணாக்க வேண்டாம். பின்னால் ஏதாவது அவசியமான காரியத்துக்கு உபயோகமாயிருக்கும்" என்றான். "எப்போதும் நீ அரட்டைக் கல்லித்தனமாகப் பேசுகிறதில் கெட்டிக்காரன் என்று எனக்குத் தெரியும். உன் அதிகப் பிரசங்கத்தை என்னிடம் காட்ட வேண்டாம், சீதாவை அழைத்துக்கொண்டு ஓடினவன் அல்லவா நீ? இப்போது வஸந்தியையும் `கிட்நாப்' செய்ய வந்துவிட்டாய்! உன்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். தப்பி ஓடப் பார்க்காதே! ஓடினால் கட்டாயம் சுட்டுவிடுவேன்!" என்றான் ராகவன். ராகவனுக்குப் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அப்பா! ராகவா! இது என்ன ரகளை வந்ததும் வராததுமாய்? அப்படியொன்றும் சூரியா செய்யத் தகாத காரியத்தைச் செய்யக் கூடியவன் அல்ல. நான்தான் வஸந்தியை அவள் அம்மாவிடம் அழைத்துப் போகும்படி சூரியாவிடம் சொன்னேன். வெகு நாளாக அந்தக் குழந்தை அப்பா, அம்மா இரண்டு பேரையும் பார்க்காமல் ஏங்கிக் கிடந்தது!" என்றாள்.
வஸந்தி, "சூரியா மாமா! நான் அப்பாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் சட்டென்று இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கள்!" என்றாள். குழந்தையின் மழலையைக் கேட்ட ராகவனுடைய மனம் சாந்தமும் சிறிது வெட்கமும் அடைந்தது. "மிஸ்டர் சூரியா! பொம்மனாட்டிகள் எல்லோருமே உன்னுடைய கட்சியில்தான் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். சரி! இந்தத் தடவை போனால் போகிறதென்று விட்டு விடுகிறேன். விடு சவாரி! நிற்காதே! கெட் அவுட்!" என்றான் ராகவன். "ஸார்! நான் போகத்தான் போகிறேன். ஆனால் போவதற்கு முன்னால் உங்கள் மனதில் உள்ள ஒரு தப்பெண்ணத்தை நிவர்த்திக்க விரும்புகிறேன். உங்கள் மனைவி சீதாவை நான் அழைத்துக்கொண்டு ஓடிப் போனதாகச் சற்று முன்பு சொன்னீர்கள். நிஜமாகவே நீங்கள் அவ்விதம் நம்புகிறீர்களா என்று தெரியவில்லை. நம்பினால் அதைக் காட்டிலும் தவறு வேறொன்றுமில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் சீதாவைக் கைப்பற்றிக்கொண்டு போனார்கள். அதைத் தடுத்து நிறுத்தி சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்காகவே நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அப்போதுதான் போலீஸார் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சத்தியமாகச் சொல்கிறேன்!" என்று சொன்னான் சூரியா.
"ஆமாண்டா அப்பா. ராகவா! இதையெல்லாம் சூரியா என்னிடமும் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் எனக்கு நம்பிக்கையாயிருந்தது, சீதாவும் அதே மாதிரிதான் சொன்னாள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "அம்மா பட்ட கஷ்டத்தை யெல்லாம் கேட்டால் அதிசயமாகவும் பயங்கரமாகவும் இருக்கு, "அப்பா! அரபிக்கதைகளிலே வருகிறது போல் இருக்கு!" என்றாள் வஸந்தி. ராகவன் தன் கைத் துப்பாக்கியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, "அப்படியானால் அதையெல்லாம் எனக்கும் விவரமாகச் சொல்லிவிட்டுப் போ! சூரியா! ஊருக்குப் போக அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான். "அப்படியே ஆகட்டும், மாப்பிள்ளை ஸார்! எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான் சூரியா. சூரியா ரஜனிபூர் ராஜாவின் ஆட்களைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே ராகவனுடைய மனதில் அதைப்பற்றிச் சூரியாவிடம் பூரா விவரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாகி விட்டது. ஆகையால், ஸ்நானம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் சூரியாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய பழைய மாடி அறைக்குப் போய்ச் சேர்ந்தான். "சூரியா கப்பலில் வரும்போது நான் ஒரு பயங்கரமான சொப்பனம் கண்டேன், குழந்தை வஸந்தி காணாமற் போய் விட்டது போலவும் அவளைத் தேடிக் கொண்டு நான் பூமியிலும் வானத்திலும் நீரிலும் நெருப்பிலும் புகையிலும் பனியிலும் ஓடி ஓடி அலைந்ததாகவும் கண்டேன். குழந்தையின் குரல் மட்டும் `அப்பா! அப்பா!' என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
கனவு கலைந்து எழுந்ததும் `இனி ஒரு நாளும் வஸந்தியை விட்டுப் பிரிவதில்லை!' என்று சபதம் செய்து கொண்டேன். ஆகையினால்தான் நீ வஸந்தியை அழைத்துப் போக வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டதும் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது! அதை நீ பொருட்படுத்த வேண்டாம்!" என்றான் ராகவன்.
"மாப்பிள்ளை, ஸார்! கனவு காண்கிற விஷயத்தில் தாங்களும் தங்களுடைய மனைவியும் போட்டி போடுவீர்கள் போலிருக்கிறது. நாம் ஆக்ராவுக்குப் போயிருந்தபோது அத்தங்காள் கனவு கண்டது பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?
ஆனால் அத்தங்காளின் வாழ்க்கையில் அந்த பயங்கரக் கனவைக் காட்டிலும் பயங்கரமான பல சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன!" என்று சொன்னான் சூரியா. "அந்தச் சம்பவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தான் உன்னை இருக்கும்படி சொன்னேன், சூரியா! நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றவில்லையா? சீதாவைப் பற்றி அவளுடைய கணவனாகிய எனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரிந்திருப்பது ஆச்சரியம் அல்லவா?" என்று ராகவன் குத்தலாகக் கேட்டான். "ஆச்சரியமான விஷயந்தான்; இல்லை என்று சொல்லவில்லை. சந்தர்ப்பங்கள் அப்படி ஏற்பட்டு விட்டன. மேலும், நீங்கள் அநாவசியமாக என்னவெல்லாமோ சந்தேகப்பட்டுக் கொண்டு அத்தங்காளைப் பற்றிக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்....."
"என்னுடைய சந்தேகங்கள் அவசியமா அநாவசியமா என்பதைப்பற்றி இப்போது சர்ச்சை வேண்டியதில்லை.
ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் உன் அத்தங்காளைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று ஒரு கதை சொன்னாயல்லவா?...."
"அது கதையல்ல, மிஸ்டர் ராகவன்! சத்தியமாக நடந்தது?" "அப்படியே இருக்கட்டும், ரஜினிபூர் ஆட்கள் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனது எதற்காக? பிடித்துக்கொண்டு போய் என்ன செய்தார்கள். நீ சொல்லுவதை மட்டும் உண்மை என்று நிரூபித்துவிடும் பட்சத்தில் அந்த ரஜினிபூர் சமஸ்தானத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு மறு காரியம் பார்ப்பேன்!" என்றான் ராகவன். "என்னால் ஒன்றையும் நிரூபிக்க முடியாது, மாப்பிள்ளை! எப்பொழுதோ யாரோ செய்த காரியத்தை நான் எப்படிச் சாட்சி விட்டு நிரூபிக்க முடியும்? நான் சொல்வதை நீங்கள் நம்பினால்தான் உண்டு." "அப்படியானால் நம்பிக்கை உண்டாகும்படியாக உன்னுடைய கதையைச் சொல், பார்க்கலாம்." "மறுபடியும் `கதை' என்றே கூறுகிறீர்கள். நான் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?" "நமக்குள் வீண் விவகாரம் வேண்டாம்! முதலில், ரஜினிபூர் ராஜாவின் ஆட்கள் எதற்காகச் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று சொல். ஒருவேளை காணாமற்போன ரஜினிபூர் ராஜகுமாரி என்பதாகச் சீதாவை நினைத்துக் கொண்டார்களோ?" என்று ராகவன் கேலியாகக் கேட்டான்.
"ஆமாம்; உங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறதே?" என்றான் சூரியா. "சூரியாவினுடைய பதில் ராகவனுடைய ஆவலை அதிகமாக்கிற்று. "நான் ஏதோ குருட்டாம் போக்காய்ச் சொன்னேன். நீ அதுதான் உண்மை என்கிறாய். நான் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போக வேண்டியதுதான். ஆயினும் பாக்கி விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக அடியோடு ஆச்சரியக் கடலில் முழுகிப் போய்விடாமல் மேலே தலையை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டிருக்கிறேன்!" என்று சொன்னான் ராகவன்.
"இன்னும் உங்களுடைய கேலிப் பேச்சுப் போகவில்லை, மாப்பிள்ளை, ஸார்! நீங்கள் எப்போதாவது ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டா? தாரிணி தேவியும் சீதா அத்தங்காளும் அசப்பிலே பார்க்கும்போது உருவ ஒற்றுமை கொண்டவர்களாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?" என்று சூரியா கேட்டான். ராகவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
மனதில் பற்பல ஐயங்களும் ஊகங்களும் அலைமோதிக் கொண்டு எழுந்தன. ஆயினும் வெளிப்படையான அமைதியுடன், "இல்லை சூரியா! பெண்மணிகளின் உருவங்களையோ அவர்களுடைய உருவ ஒற்றுமை வேற்றுமைகளையோ நான் அவ்வளவாக கவனிப்பதில்லை. நீ சொல்வதுபோல் தாரிணியும் சீதாவும் ஓரளவு உருவ ஒற்றுமை உள்ளவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம் அதனால் என்ன?" என்று கேட்டான்.
"வேறொன்றுமில்லை, ரஜினிபூர் ஆட்கள் தாரிணிதேவி என்று நினைத்துக்கொண்டு சீதாவைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள்!...." "ஆகா! அப்படியானால் தாரிணி....?" என்று ராகவன் ஆரம்பித்து, ஒரு பெரிய கேள்விக் குறியுடன் வாக்கியத்தை நடுவில் நிறுத்தினான். "ஆமாம்; ரஜினிபூர் ராஜகுமாரி உண்மையில் தாரிணி தேவிதான்!" என்றான் சூரியா.
ராகவன் சற்றுநேரம் வியப்பினால் திகைத்திருந்தான். பிறகு, "உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? தாரிணியுடன் எத்தனையோ காலம் நான் பழகியவன். அவளும் என்னிடம் சொல்லவில்லை; நானும் சந்தேகிக்கவில்லையே?" என்றான்.
"தாரிணி என்னிடம் சொல்லவில்லை! நானும் சந்தேகிக்கவில்லை. சீதா அத்தங்காள் மூலமாகத்தான் எனக்கு முதலில் தெரிந்தது." "தாரிணி என்று எண்ணிக் கொண்டு சீதாவை பிடித்துப் போனார்கள் என்று எப்படி அனுமானித்தாய்?"
"சீதாவை அவர்கள் கைப்பற்றிய முதல் நாள் நானும் தாரிணி தேவியும் வெள்ளி வீதிக்குப் பின்னால் உள்ள காந்தி மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்....."
அசூயை நிறைந்த குரலில் ராகவன், "என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான். "புரட்சி இயக்கத்தை எப்படித் தொடர்ந்து நடத்துவது, இந்தியாவின் சுதந்திரத்தை எப்படிக் கைப்பற்றுவது, வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு எப்படி வெளியேற்றுவது - என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி அவ்விடமிருந்து போன பிறகு மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களுடைய தோற்றத்தைப் பார்த்தவுடனேயே சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தெரிந்து போய்விட்டது. தாரிணியைக் கைப்பற்றுவதற்கு நான் உதவி செய்தால் லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய நோக்கம் என்னவென்பதை அப்போது நான் அறியவில்லை. சமஸ்தான ராஜாக்களின் வழக்கத்தையொட்டி துர்நோக்கங்கொண்டு தாரிணியைக் கொண்டுபோக எண்ணுகிறார்கள் என்று எண்ணினேன்.
அவர்களை நன்றாகத் திட்டி அனுப்பினேன். மறுநாள் அதே காந்தி மைதானத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே இடத்தில் நானும் சீதா அத்தங்காளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்...."
"ஆகா! அப்படிச் சொல்லு! உத்தமியாகிய அத்தங்கா சீதா, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பிக் காந்தி மைதானத்திற்கு வந்தாள் அல்லவா? எதற்காக?" "மாப்பிள்ளை! நீங்கள் கோபித்துக் கொள்வதில்லையென்றால் உண்மையைச் சொல்லி விடுகிறேன்." "நான் கோபித்துக் கொள்வதானால் பொய் சொல்வாயாக்கும்." "சரி!" எப்படியானாலும் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். ராகவன்! சற்று முன்னால் நீங்கள் என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னீர்கள். அப்படிச் செய்திருப்பின் ஒன்றும் மோசம் போயிருக்காது. ஆனால் முன்னொரு தடவை என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தீர்கள். தங்கள் வீட்டைச் சுற்றி இரகசியப் போலீஸ் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்திருந்தீர்கள். அந்தச் சமயம் நான் கைதியாகியிருந்தால் புரட்சி இயக்கத்துக்குப் பெருந்தீங்கு நேர்ந்திருக்கும்.
அவ்விதம் நேராமல் தங்கள் மனைவி சீதாதான் காப்பாற்றினாள். உங்கள் வீட்டுக்கு நான் வரவேண்டாம் என்று எனக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் காந்தி மைதானத்துக்கு வந்தாள்....."
சீதா தன்னைத் தேடி வந்தது பற்றி முழு உண்மையையும் சூரியா சொல்லவில்லை; பாதிதான் சொன்னான். அதுவே ராகவனுடைய மனதில் கொதிப்பை உண்டாக்கப் போதுமானதாயிருந்தது. `ஆகா! அந்தச் சண்டாளி அப்படியா செய்தாள்?
இந்தக் காலிப் பயலைக் காப்பாற்றிக் கொடுப்பதில் அவளுக்கு ஏன் அத்தகைய சிரத்தை ஏற்பட்டது?' என்று மனதிற்குள் எண்ணிப் பொருமினான். வெளிப்படையாக, "சூரியா! ஒரு பெண் பிள்ளையின் பேச்சை நீ இவ்வளவு தூரம் நம்பக்கூடியவன் என்று நான் எண்ணவில்லை. நான் ஏதோ தமாஷாகப் பேசியதை உண்மை என்று நினைத்துக் கொண்டு வந்து உன்னிடம் ஏதோ உளறியிருக்கிறாள்!" என்றான். "இருக்கலாம் மிஸ்டர் ராகவன்! தமாஷாகக்கூடக் கெடுதலான காரியங்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று இதிலிருந்து ஏற்படுகிறது. உங்களுடைய தமாஷ் பேச்சிலிருந்து எவ்வளவு விபரீதங்கள் நேர்ந்துவிட்டன, பாருங்கள்!" என்றான் சூரியா.
"அந்த விபரீதங்களைப் பற்றிய விவரத்தை இன்னும் நீ எனக்குச் சொல்லுகிற வழியாக இல்லை. அதைத் தெரிந்து கொள்வதற்கோ எனக்கு ஒரே பரபரப்பாயிருக்கிறது!" என்றான் ராகவன். "நீங்கள் சொல்லும்படி விட்டால்தானே? குறுக்கே ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தால் எப்படிச் சொல்லுவது? சற்று மௌனமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்!" "சரி! இதோ மௌனம்!" என்று சொல்லி ராகவன் கேலியாகத் தன் வாயைப் பொத்திக் கொண்டான். பிறகு சூரியா, சீதாவைத் தாரிணி என்று நினைத்துக் கொண்டு ரஜினிபூர் சமஸ்தானத்து ஆட்கள் கைப்பற்றிக் கொண்டு போனது முதல் சீதா கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்து கைதியானது வரையில் எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறினான். "ரஜினிபூர் ஆட்கள் செய்த தவறையே கல்கத்தா போலீஸ்காரர்களும் செய்தார்கள். சீதா அத்தங்காளைத் தாரிணிதேவி என்று கருதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்!" என்று சூரியா சொல்லி முடித்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினைந்தாம் அத்தியாயம்
கங்காபாயின் கதை
சூரியா சொல்லிய கடைசி விஷயம் ராகவனுடைய எண்ணத்தை வேறு வழியில் செலுத்தியது. பலவித சந்தேகங்கள் அவன் மனதில் உதித்தின. "ரஜினிபூர்ப் பைத்தியம்" என்று சொல்லப்பட்ட ஸ்திரீ தன்னிடம் சீதாவைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் இன்னும் ஏதோ மர்மம் இருக்கிறதென்றும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஒரு வேளை சீதாதான் உண்மையில் ரஜினிபூர் இளவரசியோ, என்னமோ; இந்தப் போக்கிரி சூரியாவும் அவனுடைய காதலி தாரிணியும் சேர்ந்து ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்னமோ? இல்லாவிட்டால் சீதா தவறாகச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தும் இவர்கள் ஏன் அவள் தாரிணி இல்லை என்று சொல்லி அவளை விடுவிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை? "சூரியா! தாரிணிதேவிதான் காணாமற்போன ரஜினிபூர் இளவரசி என்று ஏதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்? ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது?" என்றான் ராகவன். சூரியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "சீதா, ரஜினிபூர் ராஜகுமாரி என்று ஏற்பட்டால், எவ்வளவோ நலமாயிருக்கும், மிஸ்டர் ராகவன்! ஏனெனில், தாரிணிக்கு அந்த 'ராஜகுமாரி' என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான்; ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் 'ரொமாண்டிக்' இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது? யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார்!" என்று சூரியா சொன்னான்.
"உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும். சீதா டில்லியை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா?" "பேஷாகக் கேட்கிறேன்; சொல்லுங்கள்!" என்றான் சூரியா. அதன் பேரில் ராகவன், திடீரென்று ஒரு நாள் கையில் கத்தியுடன் தோன்றிச் சீதாவைச் சரியாக நடத்தவேண்டும் என்று தனக்கு எச்சரிக்கை செய்து விட்டுப்போன வெறி கொண்ட ஸ்திரீயைப்பற்றிச் சூரியாவிடம் விவரமாகச் சொன்னான். "அந்த ஸ்திரீ யார்? சீதாவைப் பற்றி அந்த வடநாட்டு ஸ்திரீக்கு ஏன் அவ்வளவு சிரத்தை உண்டாக வேண்டும்? உன்னால் சொல்ல முடியுமா?" என்று ராகவன் கேட்டான். "சொல்ல முடியும்" என்று சூரியா சொன்ன பதில் ராகவனைத் தூக்கி வாரிப் போட்டது. "அந்த ஸ்திரீயின் முதல் பெயர் ரமாமணிபாய். இப்போது அவள் பெயர் ரஸியாபேகம், சீதா அத்தங்காள் மீது அவளுக்கு வாஞ்சை ஏற்படக் காரணம் உண்டு. அது பெரிய கதை, மாப்பிள்ளை ஸார்! கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன்!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து ரஸியா பேகத்தைப் பற்றிய அபூர்வ வரலாற்றைச் சூரியா கூறினான்.
முப்பது வருஷத்துக்கு முன்னால் ரஜினிபூர் சமஸ்தானத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருந்த மகாராஜா மற்றும் பல சமஸ்தான மன்னர்களைப் போலவே சிற்றின்பப் பிரியனாயிருந்தான். இராஜ்ய காரியங்களைத் திவானும் பிரிட்டிஷ் ரிஸிடெண்டும் பார்க்கும்படி விட்டுவிட்டுத் தான் லீலா விநோதங்களில் காலங்கழித்து வந்தான். அந்த லீலா விநோதங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவன் மதோங்கர். ஒரு சமயம் ரஜினிபூர் மகாராஜாவின் சபைக்கு மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாடகி ஒருத்தி வந்து பாடினாள்; அவள் பெயர் கங்காபாய். மகாராஜாவுக்கு அவளுடைய பாட்டும் பிடித்திருந்தது; அவளையும் பிடித்திருந்தது. பாடகியுடன் அவளுக்குத் துணையாக அவள் தமக்கையும் வந்திருந்தாள். தமக்கையின் பெயர் ரமாமணி; அவள் நல்ல தைரியசாலி. உலக விவகாரங்களில் தனக்கு மிஞ்சியவள் கிடையாது என்று அவளுக்கு எண்ணம். மகாராஜாவின் முன்னிலையில் மூன்று நாள் இன்னிசைக் கச்சேரி நடந்த பிறகு மதோங்கர் என்பவன் அந்தப் பெண்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்தான்; பாடகியை மகாராஜாவுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகத் தெரியப்படுத்தினான். அதற்கு ரமாமணி, "அப்படியானால் மகாராஜா என் தங்கையைக் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்றாள். "மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்!" என்றான் மதோங்கர். ரமாமணி 'கலியாணம்' என்ற வார்த்தையினால் ஏமாந்து போய்விட்டாள். தன் தங்கைக்கு இதோபதேசம் செய்து சம்மதிக்கப் பண்ணினாள். "மகாராஜா எவ்வளவு பெரிய ரஸிகர் என்பதை நீயே பார்த்துத் தெரிந்து கொண்டாய். அவருடைய ராஜ்யமோ ரொம்பக் கீர்த்தி வாய்ந்தது, ஐசுவரியத்துக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட அரண்மனையில் மகாராணியாயிருக்கப் பூர்வ ஜன்மத்தில் நீ தவம் செய்திருக்க வேண்டும்" என்றாள். 'கலியாணம்' என்னும் கேலிக்கூத்து நடந்தது. அது கேலிக்கூத்து என்பது அந்தப் பெண்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடுதான் மகாராஜாவுக்கு ஏற்கெனவே மூன்று கலியாணங்கள் ஆகி அரண்மனையில் மூன்று ராணிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.
இதையறிந்து ரமாமணி திடுக்கிட்டாலும் ஆசையையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்த மூன்று ராணிகளுக்கும் குழந்தை இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஒருநாள் மகாராஜா கங்காபாயைப் பார்க்க வந்திருந்தபோது அவரைத் தனியாக ரமாமணி சந்தித்தாள். கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினாள். தன் தங்கைக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை ரஜினிபூர் இளவரசனாக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றார். அவ்விதமே மகாராஜாவிடம் ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் மதோங்கருக்குத் தெரிந்தது. ரஜினிபூர் ராஜ்யம் யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றி அவனுக்கு வேறு யோசனை இருந்தது. ஆகையால் ரமாமணியின் சூழ்ச்சிக்கு அவன் பதில் சூழ்ச்சி செய்தான். ராணி கங்காபாய்க்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அதைப் பிறந்த உடனே கொன்று விடவேண்டும் என்று மருத்துவச்சியிடம் ஏற்பாடு செய்தான். மதோங்கர்! மருத்துவச்சியிடம் பேசியதை மூன்றாவது மகாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தர்ம சிந்தையும் உதாரகுணமும் படைத்த உத்தமி. ரமாமணியை அழைத்து வரச் செய்து மதோங்கரின் சிசுஹத்தி ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள். பிரசவ காலம் நெருங்குவதற்கு முன்பு நாலாவது மகாராணியை பம்பாய்க்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படியும் அதற்கு வேண்டிய ஒத்தாசை தான் செய்வதாகவும் கூறினாள். மூன்றாவது மகாராணி கூறியது உண்மை என்பதற்கு வேண்டிய ஹேஷ்யங்கள் ரமாமணிக்குக் கிடைத்தன. மகாராஜாவோ அந்தச் சமயம் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். ஆகவே ரமாமணி மூன்றாவது மகாராணியின் யோசனைப்படியே காரியம் செய்தாள். தங்கை கங்காபாயை அழைத்துக்கொண்டு மதோங்கருடைய காவலாளிகளுக்குத் தெரியாமல் பம்பாய்க்குப் பிரயாணமானாள்.
ராஜபுத்திர நாட்டு வழக்கத்தைக் கங்காபாய் மேற்கொண்டு 'பர்தா' ஸ்திரீகளுக்குரிய முகமுடி அணிந்திருந்தாள். ஆகையால் அவளை அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதில் அதிக கஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் வேறுவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டன. கையில் கொண்டு வந்திருந்த பணமும் ரயில் டிக்கட்டுகளும் வழியில் காணாமற் போய்விட்டன. ஆகையால் பம்பாய் நகரையடுத்திருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் பரிசோதனை செய்த ரயில்வே உத்தியோகஸ்தன் அந்த ஸ்திரீகளிடம் டிக்கட் இல்லையென்று கண்டு அவர்களை இறக்கிவிட்டுவிட்டான். இரண்டு பேரும் பெண்கள், ஒருத்தி ஒன்பது மாதம் கர்ப்பம். கையில் பணம் இல்லை, ஆனால் கங்காபாய் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை விற்றால் பணம் கிடைக்கும் எங்கே, எப்படி விற்பது? ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது? அல்லது யாரிடம் சென்று உதவி கேட்பது? அதுவோ சின்னஞ்சிறிய ஸ்டேஷன்; வேளையோ இரவு வேளை. பம்பாயை அடுத்துள்ள சிறு ஸ்டேஷன்களில் ரயில் வரும்போது கூட்டம் கசகசவென்று இருக்கும். ரயில் போனதும் ஸ்டேஷன் நிர்மானுஷ்யமாகிவிடும். ரமாமணி தங்கையை அழைத்துக் கொண்டு பிரயாணிகள் தங்கும் வெயிட்டிங் அறைக்குச் சென்றாள். கங்காபாய்க்கு நிலைமை இன்னதென்று ஒருவாறு தெரிந்து விட்டது. முகத்தை மூடியிருந்த பர்தா துணிக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரமாமணி அவளுக்கு ஆறுதல் கூற முயன்றாள்.
அந்தச் சமயத்தில், "அது என்ன விம்மல் சத்தம்?" என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், "என்ன விஷயம்?" என்று விசாரித்தார். அப்படி விசாரித்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் சீதாவின் தந்தை துரைசாமி ஐயர். ரமாமணிபாய் அறைக்கு வெளியே வந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தங்கள் நிலைமையை ஒருவாறு எடுத்துக் கூறினாள். இராத்திரி தங்க இடம் வேண்டும் என்றும் மறுநாள் காலையில் தன் தங்கையை பம்பாயில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். "உதவி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார்.
துரைசாமிக்கு அப்போது சம்பளம் சொற்பம். அவருடைய மனைவி ராஜம்மாள் அதே சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு முதல் குழந்தை பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் செலவுக்குச் சம்பளம் போதாமல் மேல் வரும்படி ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆகையினால்தான் "எனக்கு என்ன தருவீர்கள்!" என்று கேட்டார். அந்தப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்ததில் அவர்களிடம் பணம் நிறைய இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ரமாமணி, "நீங்கள் இந்த சமயத்தில் உதவி செய்தால் எங்களிடம் உள்ள எந்தப் பொருளைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயார். என்னையே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்!" என்று சொன்னாள். துரைசாமிக்கு வெட்கமும் வியப்பும் உண்டாயின. இந்த மாதிரி பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.
மனதிற்குள், "சிவ சிவா! ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது?" என்று எண்ணிக் கொண்டார். ஆயினும் அந்தப் பெண்களின் பரிதாப நிலை அவருடைய இதயத்தை இளகச் செய்திருந்தது. "அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், அம்மா! எனக்குப் பிரதி பிரயோஜனம் ஒன்றும் வேண்டியதில்லை. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன்!" என்றார். மறுநாள் காலையில் தன்னுடைய மனைவியை எந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாரோ, அதே ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் கொண்டுப்போய்ச் சேர்த்தார். ஆனால் இது விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் வீண் சந்தேகத்துக்கும் வீண் பேச்சுக்கும் இடமாகும் என்று சொல்லவில்லை. தினந்தோறும் பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தம் மனைவியைப் பார்க்கப் போனபோது ரமாமணியையும் துரைசாமி பார்த்து வந்தார். ரமாமணி துரைசாமியிடம் அளவில்லாத நன்றி பாராட்டினாள். அந்த நன்றி வெகு சீக்கிரத்தில் அத்தியந்த விசுவாசமாகவும் ஆருயிர்க் காதலாகவும் பரிணமித்து வந்தது. ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இராத்திரியில் ஆஸ்பத்திரியில் குழந்தைப் பேறு அடைந்தார்கள். இதற்குள்ளே மதோங்கர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு அந்தப் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். ரமாமணிக்கு இது தெரிந்தது, மதோங்கரின் கையில் அகப்படாமல் கங்காபாயுடன் வேறு இரகசிய இடத்துக்குப் போய்விட விரும்பினாள். அதற்கும் துரைசாமியின் உதவியைக் கோரினாள். ரமாமணியின் மோக வலையில் முழுவதும் சிக்கிக் கொண்ட துரைசாமி அவளுடைய கோரிக்கைக்கு இணங்கினார். விஸ்தாரமான பம்பாய் நகரில் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் ஜாகை பிடித்து அவர்களைக் கொண்டு போய் வைத்தார்.
ரமாமணியும் அவள் தங்கை கங்காபாயும் குழந்தை தாரிணியும் அங்கே வசிக்கத் தொடங்கினார்கள். துரைசாமி தன்னுடைய மனைவி ராஜம்மாளுக்குத் தெரியாமல் ரமாமணியின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார். தாரிணி பிறந்த வேளையில் பிறந்த ராஜம்மாளின் ஆண் குழந்தை சீக்கிரத்தில் இறந்து போயிற்று. அந்தத் துக்கத்தை மறப்பதற்காகத் துரைசாமி அடிக்கடி ரமாமணியின் வீட்டுக்குப் போய்த் தாரிணியை எடுத்துக் கொண்டு சீராட்டினார். இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ரஜினிபூர் மகாராஜா ஐரோப்பாவிலிருந்து திரும்பினார். ரமாமணி பம்பாயில் அவர் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்று பேட்டி காண விரும்பினாள். பேட்டி கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. சண்டை பிடித்துப் பேட்டி கண்டு மகாராஜாவிடம் நிலைமையை பற்றிச் சொன்னபோது ரஜனிபூர் மகாராஜா தமக்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்று சாதித்துவிட்டார். ரமாமணிபாய் அவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினாள். மகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய ஆட்கள் பலவந்தமாக அந்தக் கடிதத்தை ரமாமணியிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவளை வெளியே துரத்திவிட்டார்கள். ரமாமணி அளவில்லாத துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் ஜாகைக்குத் திரும்பிச் சென்றாள். கங்காபாயிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். கங்காபாய் மூர்ச்சித்து விழுந்தாள். அப்புறம் அவளுடைய உடல்நிலை நாளுக்கு நாள் சீர்க்கேடு அடைந்து வந்தது. சில மாதத்துக்கெல்லாம் கங்காபாய் இந்த மண்ணுலகை நீத்தாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினாறாம் அத்தியாயம்
ரமாமணியின் தோல்வி
தாரிணி உண்மையில் ஒரு ராஜகுமாரி என்று எண்ணியதும் ராகவனுடைய உள்ளம் புயற்காற்றில் அலைகடலைப் போல கொந்தளித்தது. அதுவரை அவனுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்கள் விளங்கின. தாரிணி சாதாரணப் பெண் அல்ல என்று பலமுறை தான் எண்ணியது எவ்வளவு சரியாய்ப் போயிற்று என்று நினைத்துக் கர்வம் கொண்டான். ஒரு ராஜகுமாரியின் காதலுக்குத் தான் ஒரு சமயம் உரியவனாயிருந்தது குறித்துப் பெருமிதம் அடைந்தான். அந்த அபூர்வமான காதலைத் தான் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதை எண்ணி ஆதங்கம் அடைந்தான். ரஜினிபூர் ராஜ்யமே தனக்கு வந்திருக்க வேண்டியது என்றும், அது அநியாயமாக நஷ்டமாகிவிட்டது என்றும் அவனுடைய அந்தரங்கத்தில் ஒரு சபல நினைவு தோன்றி மறைந்தது! தான் எவ்வளவோ முயன்றும் அறிய முடியாத தாரிணியின் பிறப்பு மர்மத்தை இந்தச் சூரியா அறிந்துகொள்ள முடிந்தது பற்றி ஒரு பக்கம் வியப்பு உண்டாயிற்று. ராஜகுமாரி தாரிணி இந்தச் சூரியாவிடம் அந்தரங்கத்தை வெளியிட்டிருப்பதை எண்ணி மனம் எரிந்தான். தாரிணி, சூரியா, சீதா - ஆகிய மூவர் மீதும் அவனுக்கு அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. அந்த மூன்று பேரும் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்குச் சதி செய்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆயினும், இன்னும் சில விவரங்களைச் சூரியாவிடம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகையால் தன்னுடைய கோபத்தைக் காட்டி இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தீர்மானித்தான். ஆத்திரத்தையும் எரிச்சலையும் அசூயையும் குரோதத்தையும் கஷ்டப்பட்டு மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "சூரியா! நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது.
கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது!" என்றான். "கற்பனைக் கதையெல்லாம் மிஞ்சி விடும் உண்மைச் சம்பவங்கள் நம்முடைய சுதேச சமஸ்தானங்களில் எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனால் எனக்கு அந்தக் கதைகள் சுவாரஸ்யமா யிருப்பதில்லை. உள்ளத்தைப் பிளக்கும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகின்றன. கங்காபாயையும் ரமாமணியையும் போல் எத்தனை ஆயிரம் பெண்கள் துர்க்கதி அடைந்தார்களோ, யாருக்குத் தெரியும்? அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே!" என்று சூரியா கூறினான்.
"அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை. இது கலியுகம் அல்லவா? கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல்! கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார்? வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன்!" என்றான் ராகவன். "மேலே சொல்லுவதற்கு அதிகம் இல்லை. ஒருவேளை என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆயினும் எனக்குத் தெரியாத மீதி விவரங்களையும் சொல்லி விடுகிறேன்" என்றான் சூரியா. கங்காபாயின் சோக முடிவு ரமாமணியைக் குலுக்கிப் போட்டுவிட்டது. அவளுடைய அறிவே கலங்கிவிட்டது. அந்த நிலைமையில் ரமாமணி இருந்தபோது குழந்தை தாரிணியைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்புத் துரைசாமி ஐயருக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அக்குழந்தையிடம் ஏற்கெனவே இருந்த பாசம் மேலும் வளர்ந்து உறுதிப்பட்டது.
ரமாமணிபாய்க்கு அறிவு கொஞ்சம் தெளிந்தபோது தன் தங்கையின் அகால முடிவுக்குக் காரணமாயிருந்த ரஜினிபூர் ராஜாவையும் அவருடைய துர்மந்திரி மதோங்கரையும் பழிக்குப் பழி வாங்குவது என்று சங்கல்பம் செய்து கொண்டாள். இந்த உத்வேகமே அவளுடைய உடலுக்கும் உயிருக்கும் வலிமையைத் தந்து எத்தனையோ கஷ்டங்களைச் சகிக்கும் சக்தியை அவளுக்கு அளித்து வந்தது. பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் குழந்தை தாரிணியை மதோங்கர் வசத்தில் பாதுகாப்பதற்கும் ரமாமணிக்குப் புருஷத் துணை அத்தியாவசமாயிருந்தது. ஆதலின் பெண்மைக்குரிய சகல சாமர்த்தியங் களையும் பிரயோகித்து ஸ்டேஷன் மாஸ்டர் துரைசாமியின் சிநேகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். துரைசாமி ஐயரின் பாடு, ரொம்பவும் சங்கடமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய சொற்ப சம்பளத்தைக் கொண்டு, பம்பாய் நகரில் இரண்டு தனிக் குடும்பங்களை நடத்தவேண்டி வந்தது. பணக்கஷ்டம் அதிகமாயிற்று, அதோடு தன் மனைவி ராஜம்மாளிடம் உண்மை நிலையைச் சொல்லுவதற்கு வழியில்லாததால், பணச் செலவுக்குப் பொய்க் காரணம் சொல்ல வேண்டியதாயிருந்தது.
குதிரைப் பந்தய தினங்களில் பந்தயத்துக்குத் தான் போய் வந்ததாகவும் பணம் நஷ்டப்பட்டதாகவும் சொல்லி வந்தார். முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதில் ராஜம்மாள் பெருந் துயரத்துக்கு ஆளானாள். அதோடு உத்தமமான ஒழுக்கம் படைத்தவர் என்று தான் எண்ணியிருந்த கணவன் குதிரைப் பந்தயத்துக்குப் போக ஆரம்பித்திருப்பது பற்றிப் பெரிதும் வருந்தினாள். அதைத் தவிர வேறு கெட்ட நடவடிக்கைகளுக்குத் தன் கணவர் ஆளாகியிருப்பாரோ என்ற சந்தேகங்கள் அவள் மனதில் தோன்றின. அவற்றை வெளியிட்டுக் கணவரிடம் கேட்கும் தைரியம் ஏற்படவில்லை. மனதிற்குள்ளேயே துயரத்தை வைத்து வளர்த்து வந்தாள்.
இதற்கிடையில், தாரிணி பிறந்த இரண்டு வருஷத்துக்குப் பிறகு ராஜம்மாளுக்குச் சீதா பிறந்தாள். இதற்குப் பிறகாவது தன் கணவனுடைய நடவடிக்கைகள் திருந்தும் என்று ராஜம்மாள் எதிர்பார்த்தாள். அவ்வித நல்ல மாறுதல் ஏற்படாதது கண்டு மேலும் மனம் குன்றினாள். நாட்கள் வருஷங்களைப் போலவும், வருஷங்கள் யுகங்களைப் போலவும் ராஜம்மாளுக்குப் சென்று வந்தன. ரமாமணிக்கும் அப்படித்தான்; ஆனால் குழந்தைகளான சீதாவுக்கும் தாரிணிக்கும் வருஷங்கள் இறகு கட்டிக் கொண்டு பறந்து சென்றன. துரைசாமி ஐயருக்கோ கழிந்த நாட்களையும் வருஷங்களையும் கணக்குப் பண்ணுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. தாரிணிக்கு வயது வந்தபோது தன்னுடைய தாயும் தகப்பனாரும் உலகத்தில் உள்ள மற்ற தாய் தந்தையரைப் போல் மணம் செய்துகொண்டு வாழ்கிறவர்கள் அல்ல என்னும் விஷயம் தெரிய வந்தது. தன்னுடைய தாயின் மர்மமான காரியங்கள் அவளுக்குப் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஒவ்வொரு சமயம் விலை உயர்ந்த ஆபரணங்களை அவளுடைய தகப்பனாரிடம் தாயார் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்லுவதைக் கவனித்திருந்தாள். ஒரு நாள் தாயாரிடம் சந்தேகங்களை வெளியிட்டாள். அதன் பேரில் ரமாமணி ரஜனிபூர் ராஜாவினால் தன்னுடைய தங்கை கங்காபாய்க்கு நேர்ந்த கதியைப் பற்றியும் அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் தான் தீர்மானித்திருப்பது பற்றியும் தாரிணியிடம் கூறினாள். கங்காபாயின் கதையைக் கேட்டதிலிருந்து தாரிணியின் மனம் தான் பிறந்த தேசத்தின் நிலைமையைப் பற்றிச் சிந்திக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாயிற்று.
அச்சமயம் இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உப்புச் சத்தியாகிரஹ இயக்கத்தில் கலந்து கொண்டாள். பிற்பாடு, பீஹார் பூகம்பத்தைப் பற்றிய செய்தி வந்தபோது பூகம்பத்தினால் துன்புற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றாள். ஏறக்குறைய இதே சமயத்தில் ராஜம்மாள் நீடித்த நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்றும் பிழைப்பது துர்லபம் என்றும் ரமாமணிக்குத் தெரியலாயிற்று. தன்னால் கஷ்டத்திற்கு ஆளான ராஜம்மாளையும் அவளுடைய குமாரி சீதாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரமாமணியின் மனதில் வெகு காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் தருணம் என்று எண்ணினாள். ரஜனிபூர் ஆபரணங்களில் தன்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு துரைசாமி இல்லாத சமயத்தில் ராஜம்மாளைப் பார்க்கச் சென்றாள். சீதாவின் கலியாணத்துக்கு என்று ரத்தின ஹாரத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பினாள். இந்த முக்கியமான கடமை தீர்ந்த பிறகு ரமாமணி தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாள். பம்பாய்க்கு வந்திருந்த ரஜனிபூர் ராஜாவைக் கத்தியினால் குத்திக் கொல்லப் பிரயத்தனம் செய்தாள். அந்தப் பிரயத்தனம் பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் இருந்தபோது ரமாமணியின் பைத்தியம் முற்றியது. சிறையி லிருந்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சென்று சில காலத்துக்குப் பிறகு அங்கிருந்து விடுதலை அடைந்தாள். ரஜனிபூர் ராஜாவும் அதற்குப் பிறகு அதிக காலம் உயிரோடிருக்கவில்லை. ஆகவே விடுதலையாகி வந்த ரமாமணி அடுத்தாற்போல் தான் பழி தீர்க்க வேண்டிய மதோங்கரின் பேரில் கவனம் செலுத்தினாள். புது டில்லியின் சாலைகளில் அலைந்து திரிந்து மதோங்கரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முயற்சியிலும் ரமாமணி தோல்வியே அடைந்தாள். ஏனெனில், அவள் மதோங்கரை வெகு காலம் தேடிக் கொண்டிருந்தது கடைசியில் ஒரு நாள் பிடித்து விட்டோ ம் என்று எண்ணிய சமயத்தில், ரமாமணிக்கு முன்பாகவே மதோங்கரின் பேரில் பழி தீர்க்க விரும்பியவன் ஒருவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டான்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினேழாம் அத்தியாயம்
படிகள் பிழைத்தன!
கங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியா சௌந்தரராகவனைப் பார்த்து, "மாப்பிள்ளை ஸார்! யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே? அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா?" என்றான். "தெரிகிறது, சூரியா! ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே? கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையே?" என்று ராகவன் கேட்டான். "எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்?" என்றான் சூரியா. "ஏன்? என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று ராகவன் கேட்டான். "அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை!" என்றான் சூரியா. "எதற்காகத் தேடினீர்கள்?" என்று ராகவன் கேட்டான். "தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை!" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், "மிஸ்டர் ராகவன்! அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது! அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றான்.
சூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின. "என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்?" என்று கேட்டான். "நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன். எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே? நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்!..." ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, "அட சூரியா! உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்!" என்றான். "அந்த அபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுவாயா? - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு? இதைக் கேள், சூரியா! தாரிணியை ஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்." "ராகவன்! தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணி வேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்!"
"என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாக எண்ணமாக்கும்!" என்றான் ராகவன். "அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோ சொல்லமாட்டீர்கள்!" "ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய்? இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும்?"
"ஒரு நாளும் இல்லை யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு அல்லவா? ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா? தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும்?" "சூரியா! நீ வக்கீல் வேலைக்குப் போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப் போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய் ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காக என்றும் தெரியும். வேறொன்று மில்லை, கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான்! சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே? அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" சூரியா கொதித்து எழுந்து, "ராகவன்! ஜாக்கிரத்தை! தாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்....?" என்றான். மேலே பேசவரவில்லை. அவனுடைய உதடுகள் துடித்தன. "ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய்? ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ? ரஸியா பேகத்தைப் போல!" என்று ராகவன் ஏளனம் செய்தான்.
"சரி, மாப்பிள்ளை! உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய் வருகிறேன்!" என்று சூரியா புறப்பட்டான். "அடடே! அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டு கிளம்பாதே, அப்பா! உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ? என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய்! நான் தாலி கட்டிய புருஷன்தானே? நீ அருமை அம்மாஞ்சி அல்லவா!" சூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது. "இது என்னடா, சூரியா! பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய்? உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே? அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்..." என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, "என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்!" என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்து போனான்.
சூரியா மேலும் கூறினான்:- "சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்று கேட்டீர்கள் அல்லவா? இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள்!' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை.
மாப்பிள்ளை! நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்' என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன்.
அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின்தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது, அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். 'தந்தி வந்ததா!' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி! கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான் என்ன செய்யலாம்?" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் வருகிறது" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று.
ஆகா! இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான்? இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா? எனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது. "ரொம்ப சரி! உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம். ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்தார்?" என்று ராகவன் கேட்டான்.
"ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறை தண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயே உங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேகம் தாரிணிக்கும் இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நிச்சயமா யிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்...."
"சூரியா! அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! நான் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும் உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றியடைந்திராது!" "நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்!" "ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை! எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவது நேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்." "சூரியா! நீ சொல்வது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடைய கையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்து கொள்ளட்டும்! விவாகரத்துக் கொடுக்க நான் தயார்!" என்றான் ராகவன். "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் சீதாவுடன்
இல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன்! நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும் எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை." ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா? சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. "சூரியா! உனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்கு எண்ணமா? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா?" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். "அடே! முட்டாள்! ஜாக்கிரதை! எனக்கு வீணில் கோபம் மூட்டாதே!" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில் பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். "ஏன் கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய்? மகாவீரனாயிற்றே நீ!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால் நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோ ம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால் ஏற்பட்டிருக்கிறது....."
"ஓஹோ அப்படியா? மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா? 'ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும்! அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்!" என்று இன்னொரு கன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால் வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, "உங்களுக்கு இப்போதாவது திருப்தி ஆயிற்று அல்லவா? மனம் குளிர்ந்து விட்டது அல்லவா? போய் வருகிறேன்!" என்றான். "எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே! சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது!" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். "இதோ பார்! சூரியா! இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்!" என்றான். "மாப்பிள்ளை! நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான் பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது.
நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்!" என்றான் சூரியா. "அடே! முட்டாள்! என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்?" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத் தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில் சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். "இதென்ன சூரியா மாமா? மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன? ஐயையோ?" என்றாள் வஸந்தி. "ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்!" என்றான் சூரியா. "வஸந்தி! சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாக அதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன!" என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே!' என்று சிரித்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினெட்டாம் அத்தியாயம்
பட்டாபியின் வெற்றி
தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. "பட்டாபிராமன் வாழ்க! கறுப்பு மார்க்கெட் வீழ்க!" என்ற கோஷம் மூலை முடுக்குகளிலெல்லாம் எழுந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தலை நரைத்த வயோதிகர்கள் வரையில் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். கறுப்பு மார்க்கெட் வியாபாரத்தில் கொள்ளைப்பணம் சம்பாதித்த பழைய சேர்மன் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் முப்பதினாயிரம் ரூபாய் வாரி இறைத்திருந்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருந்தது. வோட்டு ஒன்று நூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பழைய சேர்மன் பிரம்ம பிரயத்தனம் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் அவருக