கல்கியின் அலை ஒசை
இரண்டாம் பாகம் - 'புயல்'

kalkiyin2 alai Ocai
Part-I1 (puyal)

In tamil script, TSCII format




Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format.
Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கல்கியின் அலை ஒசை
இரண்டாம் பாகம் - 'புயல்'

உள்ளுறை -அத்தியாயங்கள்
2.001 டில்லிப் பிரயாணம் மின்பதிப்பு
2.002 ரயில்வே சந்திப்பு மின்பதிப்பு
2.003 துயரத்தின் வித்து மின்பதிப்பு
2.004 சாலை முனையில் மின்பதிப்பு
2.005 ஹரிபுரா காங்கிரஸ் மின்பதிப்பு
2.006 பாதிக் கல்யாணம் மின்பதிப்பு
2.007 லலிதாவின் கடிதம் மின்பதிப்பு
2.008 சீதாவின் பதில் மின்பதிப்பு
2.009 மல்லிகை மாடம் மின்பதிப்பு
2.010 பகற் கனவுமின்பதிப்பு
2.011 தாஜ்மகால் மின்பதிப்பு
2.012 சரித்திர நிபுணர் மின்பதிப்பு
2.013 ரஜினிபூர் ஏரி மின்பதிப்பு
2.014 ரஜினிபூர் ஏரி மின்பதிப்பு
2.015 புனர் ஜென்மம் மின்பதிப்பு
2.016 தேவபட்டணம் தேர்தல் மின்பதிப்பு
2.017 "லலிதா! பயமாயிருக்கிறது....!" மின்பதிப்பு
2.018 "யார் அங்கே?" மின்பதிப்பு
2.019 "ஹலோ போலீஸ்!" மின்பதிப்பு
2.020 பாரம் நீங்கிற்று மின்பதிப்பு
2.021 ரஜினிபூர் பைத்தியக்காரி மின்பதிப்பு
2.022 கதவு திறந்தது! மின்பதிப்பு
2.023 தாரிணியின் கதை மின்பதிப்பு
2.024 நல்ல மாமியார் மின்பதிப்பு
2.025 "சுட்டு விடுவேன்!" மின்பதிப்பு
2.026 பேச்சு யுத்தம் மின்பதிப்பு
2.027 பிரயாணக் காரணம் மின்பதிப்பு
2.028 கடல் பொங்கிற்று மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை
இரண்டாம் பாகம் - 'புயல்'

முதல் அத்தியாயம் :
டில்லிப் பிரயாணம்

சென்னையிலிருந்து புறப்பட்டு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு அதிகமானபடியினால், உட்கார்ந்து உட்கார்ந்து சலித்துப் போன பிரயாணிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டும் பெருமூச்சு விட்டுப் புகையையும் கரித்தூளையும் கக்கிக் கொண்டும் சில சமயம் வீல் என்ற சத்தமிட்டு அலறிக் கொண்டும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரினால் பிரசித்தி பெற்ற நீராவித் தொடர் வண்டி தண்டவாளத்தின் மீது நீள நெடுகச் சென்றது. டில்லி ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரந்தான் இருந்தது என்றாலும், அந்த ஒரு மணியும் ஒரு யுகமாக மேற்படி ரயிலில் பிரயாணம் செய்தவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் எல்லாரிலும் அதிகமாக மனத்தில் அவசரமும் பரபரப்பும் கொண்டிருந்த சீதாவுக்கோ பாக்கியிருந்த அந்த ஒரு மணியும் ஒரு பிரம்ம யுகமாகத் தோன்றியது. மனிதர்களுக்கு ஒரு சதுர்யுகம் பிரம்மதேவருக்கு ஒரு பகல் என்று கணக்கு. அப்படியென்றால் பிரம்ம யுகம் எவ்வளவு நீண்டது என்பதை நேயர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். அந்தக் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதா பிரயாணம் செய்தாள். சீதாவின் மாமியார் காமாட்சி அம்மாளும் அதே வண்டியில் பக்கத்தில் இருந்தாள்.

காமாட்சி அம்மாளின் மடியைச் சிம்மாதனமாகக் கொண்டு வீற்றிருந்த இன்னொரு ஸ்ரீமதி யார்? அந்த ஸ்ரீமதியிடம் காமாட்சி அம்மாள் ஏன் அவ்வளவு பயபக்தி கொண்டிருக்கிறாள்? அவள் தன்னுடைய தோளிலும் கன்னத்திலும் 'பளீர் பளீர்' என்று அடிப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்? அப்புறம் நடப்பது இன்னும் விசித்திரமாயிருக்குது. காமாட்சி அம்மாளின் மடியில் வீற்றிருந்த ஸ்ரீமதியைச் சீதா கோபமாகப் பார்த்துப் பயமுறுத்துவதாகத் தன் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, "வஸந்தி! இதோ பார்! பாட்டியை அடிக்காதே! தெரியுமா!" என்று அதட்டுகிறாள். உடனே சீதாவுக்கும் அந்த ஸ்ரீமதி இரண்டு அடி கொடுக்கிறாள். மாமியார், மருமகள் இருவரும் பலமாகச் சிரிக்கிறார்கள்! "லயிலின் கயவைத் தற! கயவைத் தறக்காத்தா அப்பித்தான் அய்ப்பேன்!" என்று ஸ்ரீமதி வஸந்தி மழலை மொழி பேசியதும் நமக்கு ஒருவாறு விஷயம் புரிகிறது. ஸ்ரீமதி வஸந்திதேவி, காமாட்சி அம்மாளின் கண்ணுக்குக் கண்ணான செல்லப் பேத்தி. சௌந்தரராகவனும் சீதாவும் பெற்றெடுத்த சீமந்த புத்திரி. இப்போது அவளுடைய பிராயம் இரண்டு வருஷம் ஆறு மாதம்.

பாட்டியையும் அம்மாவையும் வஸந்தி மாற்றி மாற்றி அடித்ததற்குக் காரணம் என்னவென்பதை நேயர்கள் அவளுடைய மழலைப் பேச்சிலிருந்து ஊகித்திருப்பார்கள். ரயிலில் பலகணி வழியாக குழந்தை வெளியே எட்டிப் பார்க்கிறாள் என்பதற்காகக் காமாட்சியம்மாள் பலகணிக் கதவை மூடியிருந்தாள். மூடிய கதவைத் திறக்கவேண்டும் என்பது வஸந்தியின் கட்சி. இரண்டு பக்கமும் ஜன்னல் வழியாகப் பார்க்க முடியாவிட்டால் ரயிலில் பிரயாணம் செய்வதின் உபயோகம்தான் என்ன என்பது வஸந்தியின் கேள்வி. இதற்குத் தக்க பதில் சொல்ல முடியாத காரணத்தினால் காமாட்சி அம்மாள் சீக்கிரத்திலேயே ஜன்னல் கதவைத் திறக்கும்படி நேர்ந்தது. கதவைத் திறந்ததும் வஸந்தி தன் சின்னஞ்சிறு கையின் பட்டுப் போன்ற மிருதுவான ஆள்காட்டி விரலை வெளியிலே சுட்டிக்காட்டி, "அம்மா! அது என்ன? பாத்தி அது என்ன?" என்று கேட்டாள். "அது ஒரு பழைய காலத்துக் கோட்டை!" என்றாள் சீதா. "கோத்தைன்னா என்ன?" என்று வஸந்தி கேட்டாள். "கோட்டைன்னா கோட்டைதான்! உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சூரியா மாமாதான் வரவேணும்" என்றாள் சீதா. "சூரியா மாமாவைக் கூப்பிது அம்மா!" "இப்போது கூப்பிட்டால் அவருக்குக் காது கேட்காது. ரயில் நின்ற பிறகு வருவார் கொஞ்ச நேரம் சும்மா இரு!" "லயிலு நின்ன அப்பதம் எதுக்கம்மா வரணும்? லயிலு ஓதறபோதே மாமா வந்தா என்ன?" "ரயிலு ஓடுகிற போது வந்தால் உன் தலையில் ஒரு குட்டு!?" என்று சீதா குழந்தையின் தலையிலே ஒரு செல்லக் குட்டு குட்டினாள். "போ, அம்மா?" என்று சொல்லிவிட்டு வஸந்தி மறுபடியும் வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

வஸந்தியைப் போலவே வெளியே நோக்கிக் கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அதோ ஒரு கோட்டை! அங்கே ஒரு கோட்டை! எங்கே பார்த்தாலும் ஒரே கோட்டையாயிருக்கிறதே சீதா! இதையெல்லாம் யார் கட்டியதோ?" என்றாள். "பல ராஜாக்கள் கட்டியதாயிருக்கும், அம்மா! சுமார் ஆயிரம் வருஷம் டில்லிதான் இந்தியாவின் தலைநகரமா இருந்தது. ஆக்ராவிற்கும் டில்லிக்கும் நடுவில் இப்படித்தான் எங்கே பார்த்தாலும் இடிந்த கோட்டையாயிருக்கும்" என்றாள் சீதா. "நம்முடைய தென் தேசத்திலே யாத்திரை போனால் இரண்டு பக்கமும் ஒரே கோவிலாயிருக்கும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு கோபுரம் தெரியும். சிதம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி போகிற வரைக்கும் ஒரு தடவை நான் ஐந்நூறு கோபுரத்திற்கு மேலே எண்ணினேன். இந்தப் பக்கத்தில் கோயில் என்ற பேச்சே கிடையாது போலிருக்கிறது!" "இந்த வழியிலே மதுரை - பிருந்தாவனத்திலே மட்டும் கோவில் இருக்கிறது, அம்மா! பிருந்தாவனத்தில் இருக்கிற கோவில் நம்ம பக்கத்திலேயிருந்து வைஷ்ணவாள் வந்து கட்டியதாம். மற்றபடி இந்த வழியிலே கோயில் கிடையாதுதான். காசிப் பக்கம் போனால் ஏராளமான கோயில் இருக்குமாம்." "டில்லிப் பட்டணத்தில் கூடக் கோவில் கிடையாதா சீதா!"

"கிடையாது அம்மா! அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு கோவிலைக் கூட நான் பார்க்கவில்லை; ரொம்ப காலமாய் டில்லியில் துருக்க ராஜ்யந்தான் நடந்தது. அதனாலே டில்லியில் எங்கே பார்த்தாலும் மசூதிகளாயிருக்கும். மசூதி இல்லாவிட்டால் துருக்க ராஜாவைப் புதைத்த சமாதி இருக்கும். நான் பார்த்த வரையில் டில்லியில் ஒரு கோவில்கூட என் கண்ணுக்குத் தட்டுப் படவில்லை. யாரோ பிர்லா என்கிற பணக்காரச் சீமான் புதிதாகக் கோயில் கட்டுகிறார் என்று சொன்னார்கள்." "தாஜ்மகால், தாஜ்மகால் என்று ஜபம் பண்ணுகிறாயே அதுவும் யாரோ ஒரு ராஜாவைப் புதைத்த இடந்தானோ?" உண்மையில் சீதாவின் மனம் அப்போது 'தாஜ்மகால்' ஜபம் செய்யவில்லை. ரயில் ஓடும் சமயம் சக்கரங்கள் உருண்டு உருண்டு போகும்போது அந்தச் சத்தத்திலிருந்து ஒருவித சுருதியும் தாளமும் ஏற்படுகின்றன அல்லவா? அந்தச் சுருதிக்கும் தாளத்துக்கும் இசையச் சீதாவின் மனது "டில்லி ஜங்ஷன்" "சௌந்தரராகவன்" என்றுதான் ஜபம் செய்து கொண்டிருந்தது. டில்லி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் தங்களுடைய வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டு தன் கணவன் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த கணவனைச் சந்திப்பதில் அவளுக்கு இருந்த அவசரத்தினாலே தான் ரயில் வெகு மெதுவாகப் போவதாய் அவளுக்குத் தோன்றியது.

இவ்விதம் மனம் சௌந்தரராகவனிடம் லயித்திருந்தாலும் மாமியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையைக் கருதியே பதில் சொல்லி வந்தாள். "இல்லை, அம்மா! தாஜ்மகால் ராஜாவைப் புதைத்த இடமல்ல; ராணியைப் புதைத்த இடம். ஷாஜஹான் என்னும் டில்லி பாதுஷாவுக்கு மும்தாஜ்மகால் என்று ராணி இருந்தாள். அவளிடம் பாதுஷாவுக்கு ரொம்பஆசை. அவள் இறந்த பின் ஷாஜஹான் வேறு கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவளைப் புதைத்த இடத்தில் தாஜ்மகால் என்னும் அற்புதமான கட்டிடத்தைக் கட்டினான். முழுதும் வெள்ளைப் பளிங்குக் கல்லால் கட்டி அதில் பலவர்ணக் கற்களினால் சித்திரப் பூ வேலைகள் செய்வித்தான். உலகத்திலேயே அவ்வளவு அழகான கட்டிடம் வேறு கிடையவே கிடையாதாம்!" "நீ பார்க்கவில்லையா, சீதா!" "இன்னும் பார்க்கவில்லை முன்னே நான் இங்கே வந்திருந்தபோது முழுசாக மூன்று மாசம் கூட இருக்கவில்லையே? 'தாஜ்மகாலுக்குப் போகலாம், போகலாம்' என்று உங்கள் பிள்ளை சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் சீமைக்குப் போக உத்தரவு வந்து விட்டது!" "அதனால் என்ன சீதா? இனிமேல் டில்லியில் தானே இருக்கப் போகிறீர்கள்? எப்போது இஷ்டமோ, அப்போது போய்ப் பாருங்களேன்!" "அதென்ன 'போய்ப் பாருங்களேன்' என்று சொல்கிறீர்கள்? நீங்களுந்தான் எங்களோடு வரவேண்டும் எல்லாருமாய்ப் போய்ப் பார்த்தால் போகிறது!"

"எனக்கு என்னத்துக்கடி அம்மா, இதெல்லாம்? ஏதாவது கோவில் குளத்துக்குப் போனாலும் பிரயோஜனம் உண்டு. தாஜ்மகாலும் கீஜ்மகாலும் எனக்கு எதற்கு? நான் பார்த்து என்ன ஆகப் போகிறது?" "அப்படிச் சொல்லாதீர்கள்! போய்ப் பார்த்தால் அப்புறம் அதிசயப்படுவீர்கள். டில்லியில் கூட ஷாஜஹான் கட்டிய அரண்மனை இருக்கிறது. அதில் திவானிகாஸ் என்றும் திவானிஆம் என்றும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அவற்றை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பதினாயிரம் கண்ணால் பார்த்தாலும் அலுக்காது ஓரிடத்தில் ஷாஜஹானுடைய அந்தப்புரமாம். அதில் ராணிகள் குளிப்பதற்காகப் பளிங்குக் கல்லாலேயே குளங்களும் வாய்க்கால்களும் அருவிகளும் கட்டியிருக்கிறார்கள். அடடா! அந்த அற்புதத்தை நேரில் பார்த்தால்தான் அதன் மகிமை தெரியும்." "அது எவ்வளவு மகிமையாயிருந்தாலும் சரி, எனக்கு வேண்டாம். டில்லியில் கோவில் இல்லாவிட்டால் போகட்டும்; இந்தக் கண்மணிதான் (வஸந்தியைக் காட்டி) எனக்கு சுவாமி, அம்மன், கோவில், குளம் எல்லாம் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால், சீதா! டில்லிப் பட்டணத்தில் எப்போதுமே துருக்க ராஜாக்கள்தான் ஆண்டார்களா? ஹிந்து ராஜாக்கள் எப்போதுமே ஆளவில்லையா?" "ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் டில்லியில் ஹிந்து ராஜாக்கள் இருந்தார்களாம்; பிரிதிவிராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" "கேட்ட மாதிரி இருக்கிறது; அதற்கு மேல் ஒன்றும் ஞாபகம் இல்லை நீ சொல், சீதா! பொழுது போகட்டும்!"

"டில்லியில் பிரிதிவிராஜன் என்று ஒரு ராஜா இருந்தான். டில்லிக்குப் பக்கத்தில் இன்னொரு ராஜ்யத்தில் ஜயச்சந்திரன் என்ற ராஜா இருந்தான். ஜயச்சந்திரனுக்குச் சம்யுக்தை என்ற குமாரி இருந்தாள். ஜயச்சந்திரனுக்குப் பிரிதிவிராஜன் மீது ஜன்மப் பகை. ஆனால் ஜயச்சந்திரனுடைய குமாரி சம்யுக்தை பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டு அவனையே கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித் திருந்தாள்..." "எப்படி அவளுக்குப் பிரிதிவிராஜன் பேரில் காதல் உண்டாயிற்று? அவர்கள் எப்போதாவது பார்த்துக் கொண்டதுண்டா?" "இல்லை, அம்மா! பிரிதிவிராஜனுடைய பராக்கிரமத்தையும் அழகையும் பற்றிச் சம்யுக்தை கேள்விப்பட்டிருந்தாள். நளனைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தமயந்தி காதல் கொண்டது போல் சம்யுக்தையும் பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டாள்." "நல்ல காதல்! அப்புறம்?" "அப்புறம் சம்யுக்தையின் கலியாணத்துக்காக ஜயச்சந்திரன் சுயம்வரம் வைத்தான். அதற்கு ஐம்பத்துநாலு தேசத்து ராஜாக்களையும் அழைத்தான். ஆனால் டில்லி பிரிதிவிராஜனை மட்டும் அழைக்கவில்லை. அழைக்காததோடு பிரிதிவிராஜனை அவமானப்படுத்துவதற்காக அவனைப்போல் ஒரு சிலை செய்து சுயம்வர மண்டபத்தின் வாசலில் காவல்காரனைப்போல் நிறுத்தி வைத்திருந்தான்!" "சேச்சே! என்ன கேவலமான காரியம்! அவனுக்கு ஏன் அப்படிப் புத்தி போயிற்று?"

"போதாத காலந்தான் நம்முடைய இந்திய தேசத்துக்கே போதாத காலம். அப்போது, சம்யுக்தை என்ன செய்தாள் தெரியுமா? கையில் மணமாலையுடன் ஒவ்வொரு ராஜாவாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். அவர்கள் கழுத்திலேயெல்லாம் மாலையைப் போடவில்லை. மண்டபத்தின் வாசலிலே பிரிதிவிராஜனுடைய சிலை வைத்திருந்ததை அவளுடைய தோழி அவளுக்குச் சொல்லியிருந்தாள். மண்டப வாசலண்டை வந்ததும் சட்டென்று அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய்க் கையிலிருந்த சுயம்வர மாலையைச் சிலையின் கழுத்தில் போட்டாள்.." "சுத்த அசட்டுப் பெண்ணாயிருக்கிறாளே! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டு என்ன பிரயோசனம்?" "என்ன பிரயோசனமா? கேளுங்கள்! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டதும் அதற்கு அந்த க்ஷணமே உயிர் வந்துவிட்டது! சம்யுக்தையைக் கட்டித் தூக்கிக்கொண்டு போய்..." "சிலைக்காவது, உயிர்வரவாவது? ஏதோ நிஜமாக நடந்த கதை சொல்கிறாய் என்றல்லவா நினைத்தேன்? விக்கிரமாதித்தன் கதை மாதிரி இட்டுக் கட்டிக் கதை சொல்கிறாயாக்கும்!" "இல்லை, அம்மா! நிஜமாக நடந்த கதைத்தான்!" "நிஜமாக நடந்த கதை என்றால் உண்மையாகவே சிலைக்கு உயிர் வந்தது என்று அர்த்தமா?" "பின் என்ன அர்த்தம்?"

"அந்தச் சிலைக்குப் பின்னால் நிஜப் பிரிதிவிராஜன் ஒளிந்து கொண்டிருந்தான். சமயம் பார்த்துச் சம்யுக்தையைக் கொண்டு போவதற்காகவே அவன் வந்து காத்துக்கொண்டிருந்தான். உடனே அவன் சம்யுக்தையைத் தூக்கிப் பக்கத்திலே தயாராயிருந்த குதிரையின் மேலே வைத்துக்கொண்டு பறந்தான். நிசமாகப் பறந்தானா என்று கேட்காதீர்கள்! பறக்கிறது மாதிரி வேகமாகக் குதிரையை விட்டுக்கொண்டு போனான். அவனைப் பிடிப்பதற்காக ஜயச்சந்திரனும் அவனுடைய ஆட்களும் தொடர்ந்தார்கள் ஆனால் முடியவில்லை. பிரிதிவிராஜனுடைய வீரர்கள் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்...." "அப்புறம் பிரிதிவிராஜனும் சம்யுக்தையும் கலியாணம் செய்து கொண்டு ரதியும் மன்மதனும் போல் சந்தோஷமாயிருந்தார்களாக்கும்!" "அப்படி இருந்தால்தான் தேவலையே? இல்லவே இல்லை. அந்தக் காலத்தில் கோரிமுகம்மது என்ற துருக்க ராஜா வடக்கேயிருந்து படையெடுத்து வந்தான். டில்லி வரையில் வந்து விட்டான். அவனைப் பிரிதிவிராஜன் நன்றாகத் தோற்கடித்துத் திருப்பி அனுப்பினான். முதலில் இரண்டு மூன்று தடவை இப்படி நடந்தது. அதற்கப்புறம் சம்யுக்தையின் தகப்பன் ஜயச்சந்திரன் கோரிமுகம்மதுவுக்கு ஓலை அனுப்பினான். 'நீ மறுபடியும் படையெடுத்து வா! உனக்கு நான் உதவி செய்கிறேன்' என்று.கோரிமுகம்மது, ஜயச்சந்திரன் இரண்டு பேரும் சேர்ந்து பிரிதிவிராஜனுடன் யுத்தம் செய்தார்கள். பிரிதிவிராஜன் கடைசி வரையில் சண்டை போட்டு யுத்தகளத்தில் செத்து விழுந்தான்."

"ஐயோ! பாவம்! சம்யுக்தையின் கதி என்னவாயிற்றோ!" "சம்யுக்தை தீயில் குதித்துப் பிராணனை விட்டாள். அது முதல் டில்லியில் துருக்க ராஜ்யம் ஏற்பட்டது. சீக்கிரத்தில் ஜயச்சந்திரனும் ராஜ்யத்தை இழந்து துருக்க ராஜாவுக்கு அடிமையானான்." "என்ன விபரீதம்? இதற்குத்தான் பெரியவர்கள் சொல்கிறதைக் கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. சம்யுக்தை தகப்பனார் சொன்னபடி கேட்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்திராது அல்லவா?" "அழகாயிருக்கிறதே, நீங்கள் சொல்வது! அது எப்படி சம்யுக்தையின் பேரில் பழி போடுகிறீர்கள்? ஜயச்சந்திரன் செய்தது என்ன நியாயம்? மகளுடைய சம்மதப்படி அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் என்ன? அது மட்டுமல்லாமல் சொந்த மாப்பிள்ளையின் பேரில் துவேஷத்தினால் அன்னிய ராஜாவோடு சேர்ந்தானே? அது எவ்வளவு பெரிய துரோகம்! என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தில் மட்டும் அப்பா அம்மா தலையிடுவது ரொம்பப் பிசகு என்று சொல்வேன். பெண்ணாயிருந்தாலும் சரி, பிள்ளையாயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பிடித்திருப்பவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்கு அப்பா அம்மா குறுக்கே நிற்கக் கூடாது. அப்படிக் குறுக்கே நிற்பவர்களைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விடவேண்டும்!"

இந்த வார்த்தைகள் காமாட்சி அம்மாளுக்கு ஒரு பழைய ஞாபகத்தை உண்டாக்கின. அவளுடைய முகம் சுருங்கியது; இதைப் பார்த்த சீதா, "அம்மா! உங்களுக்கு தலை வலிக்கிறதா, என்ன?" என்று கேட்டாள். "இல்லை!" என்று சொன்னாள் காமாட்சி அம்மாள். பிறகு, "நீ சொல்கிறது அவ்வளவு சரியில்லை, சீதா! தாயார் தகப்பனார் சொல்கிறது எப்போதும் தப்பாயிராது! குழந்தைகளின் நன்மைக்காகத்தான் சொல்லுவார்கள். குழந்தைகள் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தானே தாயார் தகப்பனாருக்கு இருக்கும்? எல்லாரும் ஜயச்சந்திரனைப்போல் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் சௌக்கியமாயிருக்க வேண்டும் என்றுதான் பெற்றவர்கள் யோசனை செய்து சொல்வார்கள்!" என்றாள். "வாஸ்தவந்தான், அம்மா! எல்லாரும் ஜயச்சந்திரனைப் போல் இருப்பார்களா? இப்போது என்னுடைய கலியாணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் இஷ்டம் போல் நீங்கள் விட்டதனால்தானே நடந்தது? இல்லாவிட்டால் நடந்திருக்குமா!" என்றாள் சீதா. மறுபடியும் காமாட்சி அம்மாளின் மனத்தில் சுருக்கென்று தைத்தது எனவே அவள் பேச்சை மாற்ற விரும்பினாள். "சூரியாவுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே, சீதா! ஏன் ஆகவில்லை என்று உனக்கு ஏதாவது தெரியுமா? குற்றங்குறை ஏதேனும் உண்டோ ?" என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை; சூரியாவுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? இருபது அல்லது இருபத்தொன்று தானிருக்கும். ஆனால் அவனிடம் கலியாணத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தவர்களிடம், 'நான் கலியாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்."

"பசங்கள் எல்லாருமே கொஞ்ச காலம் அப்படித்தான் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். கிட்டிமுட்டி வரும்போது சரி என்று சொல்லிவிடுவார்கள். சூரியா எது வரையில் படித்திருக்கிறான்?" "பி.ஏ. படித்துக்கொண்டிருந்தான்; இப்போது படிப்பை விட்டுவிட்டான்." "ஏன் விட்டுவிட்டான்? படிப்பு வரவில்லையா? சூரியாவைப் பார்த்தால் கொஞ்சம் அசடுப்போலத்தான் தோன்றுகிறது." "பார்ப்பதற்கு சூரியா அப்படித்தான் இருப்பான், ஆனால், உண்மையிலே ரொம்பக் கெட்டிக்காரன். என் கல்யாணம் நடந்ததே அவனால்தான் என்று சொல்லவேண்டும். உங்கள் பிள்ளை 'லலிதாவைப் பிடிக்கவில்லை; சீதாவைத்தான் பிடித்திருக்கிறது' என்று சொன்னதும் என் மாமாவும் மாமியும் மிக்க கோபம் அடைந்துவிட்டார்கள். அவர்களைச் சூரியாதான் சமாதானப்படுத்தினான்." "உன் மாமாவும் மாமியும் கோபித்துக்கொண்டால் கலியாணம் நின்று போய் விடுமா? கடவுள் யாருக்கு யார் என்று முடிபோட் டிருக்கிறாரோ அந்த மாதிரிதான் நடக்கும். அது இருக்கட்டும், சீதா! சூரியா ஏன் படிப்பை விட்டுவிட்டான்?"

"அவனுக்கு என்னவோ இங்கிலீஷ் படிப்புப் பிடிக்கவில்லையாம்! பி.ஏ. பாஸ் செய்துவிட்டால் அப்பாவும் அம்மாவும் ஏதாவது உத்தியோகம் பார்க்கும்படி வற்புறுத்துவார்களாம். யாராவது பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்து அவனைத் தொந்தரவு செய்வார்களாம்...." "பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்தால் அது ஒரு தொந்தரவா? நான் கூட என் தம்பி பெண்ணுக்குப் பார்க்கச் சொல்லலாம் என்றுதான் இவ்வளவு தூரம் சூரியாவைப்பற்றிக் கேட்கிறேன். உத்தியோகம் பார்க்காமல் அவன் வேறு என்ன செய்யப் போகிறானாம்." "இந்தப் பக்கத்தில் எங்கேயோ காங்கிரஸ் நடக்கிறதாம்; அதற்காக வருகிறானாம். ஆனால் திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை யாம். டில்லியிலேயே தங்கியிருந்து பத்திரிகைகளுக்கு எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானாம்." "ஓகோ! பத்திரிகைக்கு எழுதுவானா என்ன? அவ்வளவு கெட்டிக்காரனா? அப்படியென்றால் தேவலையே? சீதா! ராகவன் பத்திரிகைக்கு எழுதியதால்தான் அவனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?" "உங்கள் பிள்ளையையும் இவனையும் ஒன்றாகச் சொல்லாதேயுங்கள். அவரைப்போல் இவனுக்குப் படிப்பு உண்டா? அவ்வளவு சாமர்த்தியந்தான் உண்டா? ஏதாவது காமாசோமா என்று தமிழ்ப் பத்திரிகைக்கு எழுதுவான்."

இந்தச் சமயத்தில் ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு கொஞ்சம் மெதுவாயிற்று. தூரத்தில் அநேக ஜனங்கள் ஏக காலத்தில் இரைச்சல் போடும் சத்தம் கேட்டது. சீதா ரயிலுக்கு வெளியில் எட்டிப் பார்த்தாள். "அம்மா! அம்மா! டில்லி ஸ்டேஷன் அதோ தெரிகிறது உங்கள் பிள்ளை ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்." "வந்திருக்கிறானோ அல்லது ஆபீஸில் அதிக வேலை என்று வேறு யாரையாவது அனுப்பி வைக்கிறானோ?" "அதெல்லாம் இல்லை; அவர் கட்டாயம் ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்" என்றாள் சீதா. இந்தச் சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே வஸந்தி தூங்கிப் போய்விட்டாள். குழந்தையைச் சீதா தட்டி எழுப்பி, "வஸந்தி வஸந்தி! டில்லி வந்துவிட்டது. அப்பா பிளாட்பாரத்தில் வந்திருப்பார், எழுந்திரு எழுந்திரு" என்றாள். காது செவிடுபடும்படியான பலவகை இயந்திரச் சத்தங்களுக்கும் மனிதரின் கூக்குரலுக்கும் மத்தியில் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் டில்லி ஸ்டேஷனுக்குள் பிரவேசித்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இரண்டாம் அத்தியாயம்
ரயில்வே சந்திப்பு

டில்லி ரயில்வே நிலையத்துக்குள் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பிரவேசித்தபோது பக்கத்துப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களின் முகங்கள் சீதாவின் கண்களில் தோன்றி மறைந்தன. ஆனால், அவளுடைய கண்களிலோ, கவனத்திலோ அந்த முகங்கள் ஒரு கணமும் நிற்கவில்லை. ஒரே ஒரு சுந்தர முகத்தை, தன் உள்ளத்தில் உறைந்து ஆத்மாவுடன் கலந்த முகத்தை, சீதாவின் கண்கள் ஆர்வத்துடன் தேடின. அந்த முகம் தெரிந்ததும், "வஸந்தி அதோ அப்பா!" என்று சீதா கூச்சலிட்டது ரயில்வே ஸ்டேஷன் சத்தங்கள் அவ்வளவுக்கும் மேலாகக் 'கிறீச்' என்று கேட்டது. சௌந்தரராகவனைப் பார்த்த பிறகும் கூட இந்தச் சனியன் பிடித்த ரயில் எதற்காக மேலே நகருகிறது என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவன் நின்ற இடத்துக்கு அப்பால் சுமார் முப்பது அடி தூரத்தில் சீதா இருந்த வண்டி போய் நின்றது. "வஸந்தி! அதோ பார், அப்பா வருகிறார்!" என்று குதூகலித்தாள் சீதா. "அப்பா எங்கே? காத்து அம்மா!" என்றாள் குழந்தை. கூட்டத்தில் இடிபடாமல் நாஸுக்காகப் புகுந்து விலகிக் கொண்டு சீதா இருந்த வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த ராகவன் திடீரென்று பாதி வழியில் நின்றான்.

சீதா இருந்த வண்டிக்கு எதிர்ப்புறத்தில், பிளாட்பாரத்தின் மறுபக்கத்திலிருந்து, ஒரு ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது. சௌந்தரராகவன் அந்த வண்டியை நோக்கினான். ஒரு கணம் அங்கேயே தயங்கி நின்றான். பிறகு சீதாவை நோக்கி வருவதற்குப் பதிலாக, எதிர்ப்புறத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியை நோக்கி அவசரமாகச் சென்றான். இந்தச் சமயம் அவன் கூட்டத்தையும் நெருக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. முட்டி மோதிக் கொண்டும் இடித்து பிடித்துக் கொண்டும் சென்றான். ராகவன் இலக்கு வைத்துப்போன ரயில் வண்டியில் பலகணிக்கு அருகில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து ராகவன் ஏதோ கேட்டான். அவள் ஏதோ பதில் கூறினாள், இவன் திரும்ப ஏதோ சொன்னான். இதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. கடைசி கார்டு வண்டி போகிற வரையில் ராகவன் அங்கேயே நின்று போகும் ரயிலையும் பலகணிக்கு வெளியே தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, திரும்பி, சீதா இருந்த வண்டியை நோக்கி வந்தான்.

மேலே கூறிய நிகழ்ச்சியைச் சீதா கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். தன்னையும் குழந்தையையும் பார்த்த பிறகு சௌந்தரராகவன் நேரே தங்களிடம் வராமல் எதிர்ப்பக்கத்து ரயிலை நோக்கிப் போனது சீதாவுக்குச் சிறிது ஏமாற்றம் அளித்தது. இன்னொரு ரயிலில் இருந்த பெண்கள் யார் என்பது அவளுக்குத் தெரியாது. எனினும் தன்னைவிட அவர்களை முக்கியமாகக் கருதி ராகவன் அங்கே போய்ப் பேசியது சீதாவின் உள்ளத்தில் 'சுருக்' என்ற வேதனையை உண்டாக்கியது. மேற்சொன்னதெல்லாம் அவளுடைய உள்ளத்தின் ஒரு நிமிஷ நேரத்து அனுபவம் தான். ராகவன் அருகில் வந்ததும் மனது ஒரே குதூகலமடைந்தது. "வஸந்தி! அப்பா கிட்டப்போ!" என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பலகணி வழியாக வெளியே எடுத்து விட்டாள். குழந்தை தாவிக்கொண்டு அப்பாவிடம் சென்றது. ராகவனும் ஆசையோடு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவனுடைய மனது குழந்தையிடம் லயிக்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

பிளாட்பாரத்தில் நடந்த மேற்படி ஒரு நிமிஷ நாடகத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் சாமான் வகையறாக்களைச் சரி பார்த்து வண்டியிலிருந்து இறக்குவதில் முனைந்திருந்தாள். "சீதா முதலில் நீ கீழே இறங்கு! சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்குகிறேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். சீதா வண்டியிலிருந்து இறங்கினாள், போர்ட்டர்களுக்குக் கட்டளை போட்டுக் கொண்டிருந்த சௌந்தரராகவனுக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவனாக ஏதாவது சொல்லுவான், கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் பேசுகிற வழியாகக் காணவில்லை. "நீங்கள் ஸ்டேஷனுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்று நானும் அம்மாவும் பந்தயம் போட்டுக் கொண்டு வந்தோம்!" என்றாள் சீதா. ராகவன் காதில் அது விழுந்ததாகவே தோன்றவில்லை. அவன் மனம் வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. "புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு வஸந்திக்கு உடம்பு சரியில்லை. புறப்பட முடியுமோ, என்னமோ என்று பயமாய்ப் போய்விட்டது!" என்றாள் சீதா. கொஞ்சம் ராகவனுடைய கவனம் திரும்பியது "வஸந்திக்கு என்ன உடம்பு?" என்று கேட்டான். "அஜீரணம் மாதிரி இருந்தது?" குழந்தைகளுக்கு அஜீரணமே வரக்கூடாது. குழந்தைகளுக்கு என்னவிதமாக உடம்பு வந்தாலும் அது வளர்ப்பவர்களுடைய தப்பிதந்தான்?" என்று ராகவன் கடுமையான குரலில் கூறினான்.

தான் ஆரம்பித்த பேச்சு பிசகாய்ப் போய்விட்டதென்பதை அறிந்து சீதா மௌனமானாள். சாமான்கள் இறக்கப்பட்ட பிறகு காமாட்சி அம்மாள் பெஞ்சுகளுக்கு அடியில் குனிந்து பார்த்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கினாள். ராகவனை அருகில் வந்து பார்த்து, "ஏண்டா அப்பா!" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே?" என்றாள். "ஆமாம், அம்மா! இளைத்துத்தான் போய்விட்டேன். இத்தனை நாள் உங்களையெல்லாம் பார்க்காத கவலையினாலே தான்!" என்றான் ராகவன். இந்தச் சமயத்தில் அதே ரயிலில் வேறொரு வண்டியிலிருந்து இறங்கிய சூரியா அவர்கள் நிற்குமிடத்துக்குச் சமீபமாய் வந்து சேர்ந்தான். ராகவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை போர்ட்டர்களைப் பார்த்துச் "சாமான்களை எடுங்கள்" என்றான். சூரியாவுடன் ராகவன் பேசாதது சீதாவுக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. சூரியாவைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

பிறகு மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, "சூரியாவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்று கேட்டாள். "எந்தச் சூரியாவை?" என்றான் சௌந்தரராகவன். "எந்தச் சூரியாவை என்கிறீர்கள்? லலிதாவின் அண்ணா சூரியாதான்!" "மாப்பிள்ளை! அடியோடு என்னை மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது!" "ஓகோ! கலியாணத்தின்போது ஒரே கோபமாக இருந்தானே, அந்தப் பையனா? இங்கு எங்கே வந்தான்?" என்று ராகவன் கேட்டான். இதனால் சீதாவின் மனக் கஷ்டம் மேலும் அதிகமாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயம் காமாட்சி அம்மாள் அவர்களுடைய பேச்சில் தலையிட்டாள். "வழி நெடுகச் சூரியாதான் எங்களுக்கு ஒத்தாசையாயிருந்து வந்தான்; அவன் வந்திராவிட்டால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போயிருக்கும்" என்றாள். "இந்த வண்டியிலேயே இவன் வந்தானா, என்ன? இறங்குகிறபோது நான் பார்க்கவில்லையே?" என்றான் ராகவன். "இல்லை, மாப்பிள்ளை ஸார்! நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை!" என்றான் சூரியா. "அதனால் பாதகமில்லை ஆனால் என்னை மட்டும் மாப்பிள்ளை சார் என்று கூப்பிடாமல் இருந்தால் சரி. கொஞ்சம் அநாகரிகமாகத் தோன்றுகிறது" என்றான் ராகவன். இதற்குள் போர்ட்டர்களின் தலையில் சாமான்கள் ஏறிவிட்டன. ராகவன் கையிலிருந்த குழந்தையைக் காமாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டாள். ராகவன் முன்னால் வழிகாட்டிச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.

"இதுதானா நமக்கு வாங்கியிருக்கிற மோட்டார் கார்?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது. அதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. சாமான்களைக் காரில் ஏற்றியானதும் காமாட்சியம்மாளையும் சீதாவையும் குழந்தையுடன் பின் ஸீட்டில் உட்காரச் செய்தான். தான் முன் புறத்தில் டிரைவருடைய ஸீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்து ஸீட் காலியாகத்தானிருந்தது. சூரியா விடைபெற்றுக் கொள்வதற்காக நின்றான். காலி இடத்தில் சூரியாவை ஏறிக்கொள்ளச் சொன்னால் என்ன என்று சீதாவுக்குத் தோன்றியது. ராகவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள் அவன் சொல்லவில்லை. சீதா ஏமாற்றத்துடன் சூரியாவைப் பார்த்தாள். அவளுடைய மனோ நிலையைத் தெரிந்துகொண்ட சூரியா முகபாவத்தினால் தன் அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டான். வண்டி புறப்படலாயிற்று சீதா மெல்லிய குரலில், "அம்மா சூரியா உங்களிடம் சொல்லிக் கொள்கிறான் போலிருக்கிறது!" என்றாள். காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, சூரியா! போய் வருகிறாயா? ஊருக்குப் போவதற்குள்ளே ஒரு நாளைக்கு ஆத்துக்கு வந்துவிட்டுப் போ!" என்று சொன்னாள். "சீதாவுக்கு மாமியாரிடம் நன்றி உணர்ச்சி பொங்கியது. சூரியா, "ஆகட்டும், மாமி! அவசியம் வந்துவிட்டுப் போகிறேன். மாப்பிள்ளே! உங்களுடைய விலாசம் என்ன?" என்று கேட்டான்.

ராகவனுடைய குணம் ஒருவாறு சூரியாவுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. அதற்காக அத்தங்காளின் உறவை விட்டு விடுவதாக அவனுக்கு உத்தேசம் இல்லை, மாப்பிள்ளை தன்னை அழைக்காவிட்டால் அவர்களுடைய ஜாகையில் போய்ப் பார்த்து விடுகிறது என்று தீர்மானித்திருந்தான். "நம்பர் எட்டு, நாதிர்ஷா ரோடு?" என்று சொல்லிவிட்டு ராகவன் மோட்டாரை விட்டான். மோட்டார் போகத் தொடங்கியதும் சீதா மறுபடியும் உற்சாகம் கொண்டாள். "வஸந்தி பார்த்தாயா? அப்பா மோட்டார் ஓட்டுகிறார்!" என்றாள். "நானும் மோட்டார் ஓத்துவேன்!" என்றாள் வஸந்தி. சீதா கலகலவென்று சிரித்தாள், "கேட்டீர்களா அம்மா உங்கள் பேத்தியின் பேச்சை! இவளும் கார் ஓட்டுவாளாமே?" என்றாள். "ஓட்டினாலும் ஓட்டுவாள்; இவள் பெரியவளாகும் போது உலகத்திலேயே இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடக்கப் போகிறதோ!" என்றாள் காமாட்சி அம்மாள். ராகவன் அப்போது பேச்சில் தலையிட்டு, "அம்மா! பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை! இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது! ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள்!" என்று சொன்னான்.

ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள். பழைய அனுபவத்திலிருந்து, ராகவனுடைய ஹாஸ்யத்தைப் புரிந்து கொண்டு சிரிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வரும் என்பதைச் சீதா அறிந்திருந்தாள். ஏதாவது புரியாவிட்டால் ராகவன் விளக்கிச் சொல்லமாட்டான். "உன்னிடம் வந்து சொல்லப் போனேனே?" என்று முடித்துவிடுவான். இதனால் அவன் பேச்சுப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சீதா சமயோசிதம் பார்த்துச் சிரித்து விடுவது வழக்கம். சீதாவின் சிரிப்பு நிற்பதற்குள் 'டர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. ராகவன் சட்டென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். வயதான முஸ்லிம் ஸ்திரீ ஒருத்தி உயிர் தப்பினாள். இன்னும் அரை அங்குலம் வண்டி நகர்ந்திருந்தால் அந்த முஸ்லிம் ஸ்திரீயின் பேரில் வண்டி மோதி அவளைக் கீழே தள்ளி இருக்கும். முதலில் காமாட்சி அம்மாளுக்கும் சீதாவுக்கும் விஷயம் இன்னதென்று தெரியவில்லை. தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு அடி வயிற்றில் நெருப்புச் சுட்டது போலிருந்தது. "ஏம்மா, மோத்தார் நின்னுத்து?" என்று கேட்டாள் வஸந்தி. மறுபடியும் கார் போக ஆரம்பித்ததும் காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, மோட்டார் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லையா? நீயே எதற்காக ஓட்ட வேண்டும்!" என்றாள். "டிரைவர் வைத்துக்கொண்டால், சம்பளம் கொடுக்க வேணுமே? மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது? இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி!" என்றான் ராகவன்.

அப்போது சௌந்தரராகவனுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் என்பது அவன் தாயார், மனைவி இருவருக்கும் தெரியும். ஆகையால், 'பணத்துக்கு எங்கே போகிறது' என்று அவன் கேட்டது பரிகாசத்துக்காக என்றே நினைத்தார்கள்! சீதா சிரித்தாள். "எதற்காகச் சிரிக்கிறாய்! நான் சொல்கிறது வேடிக்கை என்று நினைத்தாயா?" என்றான் ராகவன். "ஆமாம்!" என்றாள் சீதா. "எதனால் வேடிக்கை என்று உனக்குத் தோன்றுகிறது?" என்று ராகவன் கேட்டான். "மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் வருகிறது; டிரைவருக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் யாராவது நம்புவார்களா? உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே!" என்றாள் சீதா. "பெண்ணையும் உன்னைப் போலவே வளர்த்துக் கொண்டு வருகிறாயாக்கும்!" என்றான் ராகவன். அதற்கும் சீதா சிரித்துக்கொண்டே, "என் மாதிரி வளர்க்காமல் வேறு யார் மாதிரி வளர்க்க வேண்டுமாம்!" என்று கேட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் ராகவன் ஓட்டிய கார் தனக்கு இந்து முஸ்லீம் வேற்றுமைப் புத்தி கிடையாது என்று நிரூபித்தது. இப்போது ஒரு ஹிந்து ஸ்திரீ மீது அது ஏறப் பார்த்தது! நல்ல வேளையாக ஏறிவிடவில்லை. "ஏண்டாப்பா ராகவா! இன்னும் மோட்டார் நன்றாய் விடுவதற்கு நீ கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறதே! அதற்குள்ளே என்ன அவசரம்? நன்றாய்க் கற்றுக்கொள்ளுகிற வரையிலாவது டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"எனக்கு நன்றாய் மோட்டார் விடத் தெரியும் அம்மா! ஆனால் இன்றைக்கு மனது கொஞ்சம் குழம்பியிருக்கிறது அதனால்..." "இன்றைக்கு மனது எதற்காகக் குழம்ப வேண்டும்?" "செத்துப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று உயிரோடு வந்து நின்றால், மனக் குழப்பம் ஏற்படாதா? அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால்?...." "என்ன சொல்கிறாய், ராகவா! எனக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமில்லையே? நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது! அவ்வளவுதான். ஏண்டி சீதா! நீ ஏதாவது எனக்கு உடம்பு ரொம்ப அதிகமாயிருந்தது என்று கடிதம் எழுதிவிட்டாயோ!" "உங்களுடைய உடம்பைப்பற்றி நான் எழுதவே இல்லையே?" என்றாள் சீதா. "நானும் உங்களைச் சொல்லவில்லை, அம்மா! உங்களுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்த விஷயமே எனக்கு இது வரைக்கும் தெரியாது வேறொருவரைப்பற்றிச் சொன்னேன்." "அப்படி யார் செத்துப் பிழைத்து உயிரோடு வந்தது?" "ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் பார்க்கவில்லையா?" "நான் பார்க்கவில்லையே? எந்த ரயில்வே ஸ்டேஷனில்?" "டில்லி ஸ்டேஷனில்தான் உங்கள் வண்டி வந்து நின்றதும் எதிர்ப்புறத்தில் ஒரு வண்டி புறப்பட்டது அதிலே பார்க்கவில்லையா?" "நான் ஒன்றும் பார்க்கவில்லை அதில் யார் போனது?" "அப்புறம் சொல்கிறேன்" என்றான் ராகவன்.

காமாட்சி அம்மாள் எதிர்ப்புறத்து ரயிலைப் பார்க்கவில்லைதான்; ஆனால் சீதா பார்த்துக்கொண்டிருந்தாள். ராகவன் ஓடிப்போய் யாரோ ஒருத்தியிடம் இரண்டு வார்த்தை பேசியதையும், அதற்குள்ளே வண்டி போய் விட்டதையும் ராகவன் ஒரு மாதிரி முகத்துடன் திரும்பி வந்ததையும் சீதா பார்த்துத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள். "அந்த ரயிலில் போனது யார் என்று கேளுங்கள், அம்மா!" என்று மாமியாரைத் தூண்டினாள்.இதற்குள் மூன்றாவது தடவையாக மோட்டார் வண்டி நின்றது. சடக்கென்று நின்றபடியால் மறுபடியும் மாமியாருக்கும் மருமகளுக்கும் பயம் உண்டாயிற்று. "என்ன? என்ன?" என்றார்கள். "ஒன்றும் இல்லை; வீடு வந்துவிட்டது!" என்றான் ராகவன். சீதா வீட்டைப் பார்த்தாள்; அழகான சின்னஞ்சிறு பங்களா. முன்புறத்திலும் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகள் இளமரங்கள். சீதாவின் உள்ளத்தில் இன்பம் பொங்கித் ததும்பியது. "வஸந்தி! உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது?" என்றாள். "இது அப்பா கத்திய வீதா, அம்மா? நம்பளுக்காகக் கத்தியிருக்காளா?" என்றாள் வஸந்தி.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

மூன்றாம் அத்தியாயம்
துயரத்தின் வித்து

கலியாணம் நடந்த உடனேயே சௌந்தரராகவன் சீதாவைத் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துப் போனான். இங்கிலீஷ் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக அவர்கள் தங்கினார்கள். ஒரு மாத காலம் கந்தர்வலோகத்தில் சஞ்சாரம் செய்து காண்டிருந்தார்கள். புதுடில்லியின் அழகான சாலைகளிலும் சதுக்கங்களிலும் பழைய டில்லியின் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகள், மசூதிகளிலும் அவர்கள் கைகோத்துக் கொண்டு உலாவி வந்தார்கள். இம்மாதிரி சில வருஷங்களுக்கு முன்னால் இன்னொரு பெண்ணுடன் கைகோத்துக்கொண்டு இதே இடங்களில் உலாவியது பற்றி ராகவனுக்கு அவ்வப்போது நினைவு வருவதுண்டு. ஆனால் அந்த நினைவை அலட்சியமாக உதறி எறிந்து விட்டுப் பக்கத்தில் நின்ற தன் தர்மபத்தினி சீதாவின் கரத்தை ராகவன் கெட்டியாகப் பிடித்துக்கொள்வான். பிறகு ராகவன் இங்கிலாந்துக்கு அவசரமாகப் புறப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பேரில் சீதாவைச் சென்னைக்கு அழைத்து வந்து தன் பெற்றோர்களிடம் விட்டான். தானும் சில நாள் தங்கியிருந்து, சீதாவுக்கு ஆயிரம் விதமாகத் தேறுதல் கூறினான். அச்சமயம் சீமைக்குப் போவதால் தன்னுடைய உத்தியோக வாழ்க்கைக்கு ரொம்ப அனுகூலம் ஏற்படும் என்றும், அப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பம் மறுபடி கிடைப்பது அரிது என்றும், அதை நழுவவிடுதல் மிக்க அறிவீனமாகும் என்றும் எடுத்துச் சொன்னான்.

மனதாரத் தெரிந்தெடுத்து ஆசையுடன் மணந்து கொண்ட மனைவியை அவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வதில் தனக்கு மட்டும் வருத்தமில்லையா என்று கேட்டான். வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு அவள் குறுக்கே நிற்கலாமா என்றான். அடுத்த தடவை தான் வெளிநாட்டுக்குப் பிரயாணமாகும்போது அவளையும் அவசியம் அழைத்துப் போவதாக உறுதிமொழி கூறினான். சீதாவுக்கு ஒரு பக்கத்தில் தன்னுடைய இதய நாயகனை இவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்கிறதே என்று துக்கம் துக்கமாய் வந்தது. இன்னொரு பக்கத்தில் ராகவன் சீமைக்குப் போவது பற்றிப் பெருமையாகவும் இருந்தது. அழுது கொண்டே சிரித்தாள், சிரித்துக் கொண்டே அழுதாள். ஒரு நிமிஷம் 'போகவேகூடாது' என்று பிடிவாதம் பிடித்தாள். அடுத்த நிமிஷம், "கட்டாயம் போக வேண்டும்" என்று வற்புறுத்தினாள். கடைசியாக விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் திரும்பி வருவதற்கு பதினைந்து மாதத்துக்கு மேலாயிற்று. அதற்குள் சீதாவின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகள் நேர்ந்தன. அவளுடைய அருமைத் தாயார் பம்பாய் ராஜம்மாள் தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தோம் என்ற மனத்திருப்தியுடன் இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். தன்னுடைய புருஷர் துரைசாமி அய்யரின் மடியின் மீது தலையை வைத்துக்கொண்டு கடைசி மூச்சை விடும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்தது. அதோடு அவள் பெரிதும் ஆசை வைத்திருந்த அகண்ட காவேரிக் கரையில் அவளுடைய உடல் தகனமாகும் பேறும் கிடைத்தது.

தாயார் இறந்து பல தினங்கள் வரையில் சீதா கண்ணீரும் கம்பலையுமாயிருந்தாள். மாமியார் எத்தனை ஆறுதல் சொல்லியும் அவளுடைய துக்கம் தீரவில்லை. மாமனார் பகவத் கீதையிலிருந்து எவ்வளவு சுலோகங்கள் சொல்லி வியாக்யானம் செய்து காட்டியும் அவளுடைய மனம் நிம்மதியடையவில்லை. இப்பேர்ப்பட்ட துக்கம் தனக்கு நேர்ந்த சமயத்தில் தன் அருமைக் கணவர் பக்கத்தில் இல்லாமற் போனது அவளுடைய துயரத்தை அதிகமாக்கியது. உண்மையான அன்பு, சினேகம் இவற்றின் பெருமை அதுதான் அல்லவா? அன்புடையவர்களிடமும் சிநேகிதர் களிடமும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் துக்கம் குறைந்து சீக்கிரத்திலேயே மனச்சாந்தி ஏற்படுகிறது. அன்புள்ளோரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் அந்தச் சந்தோஷம் பொங்கிப் பெருகுகிறது. சீதாவுக்கு நேர்ந்த பெருந்துக்கத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ளச் சௌந்தரராகவன் அருகில் இல்லை.இதனால் அவளுடைய துக்கம் வெகு காலம் நீடித்திருந்தது.சீதாவின் வாழ்க்கையில் இன்னொரு முக்கிய சம்பவம் - சந்தோஷமான சம்பவம் - நேர்ந்த பிற்பாடுதான், அந்தத் துக்கம் மறைந்தது.

சீதா தன் உயிருக்கே நேர்ந்த அபாயத்திலிருந்து கடவுள் அருளால் பிழைத்து எழுந்து தான் பெற்ற செல்வக் கண்மணியைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் அவளுக்கு மறந்தே போய்விட்டது. தாயாரை நினைத்துக்கொண்டு துக்கப்படுவதற்கு இனிமேல் அவளுக்கு நேரம் ஏது? அதோடு கூடக் காமாட்சி அம்மாளும் மற்றும் அக்கம் பக்கத்து மூதாட்டிகளும், "உன் அம்மாவே உன் வயிற்றில் பெண்ணாய் வந்து பிறந்து விட்டாள்!" என்று அடிக்கடி சொன்னதனால் சீதாவுக்கு அத்தகைய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தன் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதில் உண்டான ஆனந்தத்தில் தன்னைப் பெற்ற தாயின் முகத்தை மறந்தாள். சீமைக்குப் போயிருக்கும் கணவன் திரும்பி வந்ததும் குழந்தையை அவரிடம் காட்டி ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்யும் நேரத்தை எண்ணி எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தாள். சீமைக்குப் பயணமாகும்போது ராகவன் சீதாவைக் கான்வெண்ட் ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லிப் பெற்றோர்களிடமும் ஏற்பாடு செய்துவிட்டுப் போனான். அதன்படி சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகவில்லை என்று அறிந்ததும் அவன் மிக்க கோபம் கொண்டு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக அவனுடைய தகப்பனார், "உன்னுடைய சீமந்தக் கலியாணத்துக்கு அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறது; உடனே புறப்பட்டு வந்து சேரவும்" என்று எழுதினார்.

சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாத காரணம் இப்போது ராகவனுக்குப் புலனாயிற்று. அதனால் அவன் சந்தோஷமடைந் தானா, அதிருப்தி கொண்டானா என்று சொல்ல முடியாது. பதில் கடிதத்தில் பரிகாசமாக, சீமந்தக் கலியாணத்தை ஆறு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளவும்; தள்ளி வைக்க முடியாவிட்டால் பர்த்தி வைத்து நடத்தி விடவும்!" என்று எழுதியிருந்தான். சீதாவுக்கு இந்தக் கடிதம் அளவில்லாத கோபத்தை அளித்தது. ராகவனுடைய கடிதங்களை விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் போல் போற்றிப் பத்திரப்படுத்தும் வழக்கமுடைய சீதா மேற்படி கடிதத்தைச் சுக்கலாகக் கிழித்தெறிந்தாள். ராகவன் அவ்வாறு பரிகாசமாகப் பதில் எழுதியது பற்றி மாமியாரிடம் புகாரும் சொன்னாள். மாமியாரும் மருமகளும் வெகு ஒற்றுமையாகவும் அன்யோன்னியமாகவும் இருந்து வந்தார்கள். "மருமகள் மெச்சிய மாமியார் இல்லை" என்னும் பழமொழி அவர்கள் விஷயத்தில் பொய்யாயிற்று. "அம்மா! உங்களிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாதென்று என் 'ஓர்ப்படி' பிறந்த வீட்டோ டு போய் விட்டாளாமே? அவள் எவ்வளவு பெரிய ராட்சஸியா இருக்க வேண்டும்?" என்றாள். அக்கம் பக்கத்து வீடுகளில் தன் மாமியார் தன்னை அன்புடன் நடத்துவது பற்றிப் பெருமையுடன் சொல்லிக் கொண்டாள். காமாட்சியம்மாளின் மனோரதம் நிறைவேறி விட்டது. அந்த அம்மாள் பத்மாபுரத்தின் வீதிகளில் கம்பீரமாகப் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்தான். வஸந்தியைப் பார்த்து அகமகிழ்ந்து முகமலர்ந்தான். சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாததினால் ஏற்பட்ட கோபத்தையும் மறந்தான். புதுடில்லியில் ஜாகை கிடைத்ததும் கடிதம் எழுதி அவர்களைத் தருவித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போனான். நல்ல ஜாகை கிடைப்பதற்கு இத்தனை காலம் ஆகிவிட்டது. சீதா புதுடில்லிக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று; அந்த ஏழு நாளும் புது ஜாகை போடும் ஏற்பாடுகளில் எல்லாரும் முனைந் திருந்தார்கள். இந்த நாற்காலியை எடுத்து அந்த அறையில் போடுவது, அந்த அலமாரியைத் தூக்கி இந்த அறைக்குக் கொண்டு வருவது, கட்டில்களை மாற்றி மாற்றிப் போடுவது, சமையல் வேலைகளுக்கு ஏற்பாடு செய்வது, அம்மிக் குழவியும் கல்லுரலும் சம்பாதிப்பது, கிராமபோனும் ரேடியோவும் வைப்பது ஆகிய காரியங்களில் சதா ஈடுபட்டிருந்தார்கள். சாயங்காலம் வந்ததும் சீதா முன்போல அதாவது கலியாணம் ஆனவுடனே வந்திருந்த நாட்களைப்போல் ராகவனுடன் வெளியில் உலாவச் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுவாள். காரியம் அதிகமாக இருந்தபடியால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வாள்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் காலை ராகவனைப் பார்த்து, "இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள். வெளியில் எங்கேயாவது அழைத்துப் போங்கள்!" என்றாள் சீதா. "நான் அழைத்துப் போவது என்ன? உனக்கு இஷ்டமான போது இஷ்டமான இடத்துக்குப் போய் வருவதுதானே!" என்றான் ராகவன். "அழகாயிருக்கிறது; நான் மட்டும் தனியாகப் போவதாக்கும்?" "போனால் என்ன? உன்னை யாராவது வழிப்பறி செய்து கொண்டு போய் விடுவார்களா? இங்கே இன்னும் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறது; காங்கிரஸ் ராஜ்யம் பூராவும் வந்து விடவில்லை!" என்றான் ராகவன். "என்னை ஒருவரும் கொண்டுபோய் விடமாட்டார்கள்; வாஸ்தவந்தான். ஆனாலும் தனியாகத்தான் போக வேண்டும் என்றால், நான் போகவே மாட்டேன்." "தனியாகப் போக வேண்டாம்; உன் மாமியாரையும் கூட அழைத்துக் கொண்டு போயேன்?" "மாமியாரை நான் கூட அழைத்துக் கொண்டு போவதற்கு உங்களுடைய அனுமதி வேண்டுமாக்கும்!" என்று சீதா பொய்க் கோபம் வருவித்துக் கொண்டு சொன்னாள். "சரி; சரி! கோபித்துக்கொள்ளாதே! இன்று சாயங்காலம் சீக்கிரம் வந்து உன்னை 'வாக்கிங்'க்கு அழைத்துப் போகிறேன்," என்று சொல்லிவிட்டு ராகவன் சென்றான். அவ்விதமே அன்று மாலை சீக்கிரமாக ராகவன் திரும்பி வந்தான். சீதாவைப் பார்த்து "மோட்டாரில் 'வாக்கிங்' போகலாமா? அல்லது கால்நடையாகப் போகலாமா?" என்று கேட்டான்.

வழக்கப்படி சீதா ராகவனுடைய ஹாஸ்யத்துக்காகச் சிரித்துவிட்டு, "மோட்டாரில் 'வாக்கிங்' எப்படிப் போவது? நடந்தே போகலாம்!" என்றாள். காமாட்சியம்மாள் தான் 'வாக்கிங்' வரவில்லையென்றும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள்; சீதா விரும்பியதும் இதுதான். ஆகையால் ராகவனுடன் உல்லாசமாக கிளம்பினாள். இருவரும் கன்னாட் சர்க்கிளுக்கு வந்து ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு 'இந்தியா கேட்'டை நோக்கிச் சென்றார்கள். இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் உள்ள செயற்கை நீர் ஓடைகளில் ஒன்றுக்கு அருகில் பச்சைப் பசும்புல் தரையில் உட்கார்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து வரும் சமயம். நானா திசைகளிலும் வரிசை வரிசையாக வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியத் தலைநகரின் மின்சார தீபங்கள் பிரகாசித்தன. "கந்தர்வலோகம் என்று சொல்கிறார்களே! அந்த கந்தர்வலோகம் இதைவிடவா அழகாயிருக்கும்?" என்றாள் சீதா. "நான் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; அதனால் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை" என்றான் ராகவன். சீதா சிரித்துக்கொண்டே நானும் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; ஆனால் கந்தர்வலோகத்தைப் பற்றிப் பாரதியார் 'ஞான ரதம்' என்ற புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதுடில்லியைவிடக் கந்தர்வலோகம் அவ்வளவு ஒன்றும் ஒசத்தியில்லையென்று எனக்குத் தோன்றுகிறது!" என்றாள். "நான் 'ஞான ரத'த்தில் ஏறினதில்லை; அதனால் அபிப்பிராயம் சொல்ல முடியாது" என்றான் ராகவன்.

ஞான ரதம் வெறும் கற்பனை ரதம். ஆனால் நீங்கள் வான ரதத்தில் ஏறி ஆகாசத்தில் பறந்திருக்கிறீர்கள். ஞான ரதத்தைப் போல் கந்தர்வலோகமும் கற்பனை லோகந்தான். நீங்களோ லண்டன், பாரிஸ் முதலிய உண்மை நகரங்களுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள். ஏன்னா? புதுடில்லியைவிட லண்டனும் பாரிஸும் அழகுதானே?" என்று சீதா கேட்டாள். "ஏன்னா என்று இனிமேல் என்னை அழைப்பதில்லை என்று நீ சபதம் செய்தால் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்" என்றான் ராகவன். "ஆகட்டும்; இனிமேல் 'ஏன்னா' என்கவில்லை; 'ஏன் ஸார்?' என்கிறேன். லண்டன் அழகா, டில்லி அழகா? ஏன் ஸார்?" என்றாள் சீதா. "லண்டன் ஒரு விதத்தில் அழகு; டில்லி இன்னொரு விதத்தில் அழகு" என்றான் ராகவன். சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகவனுடைய கண்கள் அங்குமிங்கும் சுழன்று பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சமயம் சாலையோடு இரண்டு பெண்கள் நடந்து போனார்கள். சாய்ந்து படுத்திருந்த ராகவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவர்களை உற்றுப் பார்த்தான்; மறுபடியும் புல் தரையில் சாய்ந்து கொண்டான். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. "ஏன் ஸார்! அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருத்தியைப் பார்த்துப் பேசினீர்களே? அவள் யார்? என்று சீதா கேட்டாள். "அவள் யாராயிருந்தால் உனக்கென்ன?" என்று ராகவன் கேட்ட குரலில் கடுமை தொனித்தது.

"யார் என்று சொன்னால் என்ன!" "சொல்ல முடியாது." "ஏன் சொல்ல முடியாது?" "எனக்கு இந்த ஊரில் எத்தனையோ பேரைத் தெரியும். அவர்களையெல்லாம் யார் யார் என்று உனக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?" "உங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் எனக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே?" "உனக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் தெரிந்தால் போதும். ஊரில் உள்ளவர்களை எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை." பொங்கி வந்த கோபத்தைச் சீதா அடக்கிக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். "ஏன் ஸார்? அவள் யார் என்று சொல்லமாட்டீர்களா!" மௌனம். "நம்ம பக்கத்து மனுஷியா? இந்த ஊர்க்காரியா?" மௌனம். "என்னோடு ஏன் பேசப் போகிறீர்கள்? இதற்குத்தான் 'வாக்கிங்' அழைத்து வந்தீர்களாக்கும்?" என்று கூறிய சீதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இதற்குத்தான் அழைத்துவர மாட்டேன் என்று சொன்னேன். பெண்களின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாயல்லவா? சனியன்!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் பசும்புல் தரையிலிருந்து எழுந்தான். "நான் ஒன்றும் சனியன் இல்லை" என்று சீதா கூறி இன்னும் முணுமுணுத்தாள். சீதாவின் குற்றமற்ற இளம் உள்ளத்தில் துன்பத்தின் வித்து விதைத்தாகிவிட்டது. அது முளைத்து வளர்ந்து மரமாகி என்னென்ன பலன்களைத் தரப் போகிறதோ, யார் கண்டது?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நான்காம் அத்தியாயம்
சாலை முனையில்

உலாவச் சென்று திரும்பி வந்த அன்றிரவு சீதா வெகு நேரம் தூங்கவில்லை. புதுடில்லியில் புதுக் குடித்தனம் போட்ட பிறகு முதன் முதலாகத் தன் பிரிய நாயகன் தன்னை உலாவ அழைத்துச் சென்ற தினத்தில், தான் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு அவனுக்கு எரிச்சல் உண்டாக்கியதை நினைத்து நினைத்து வருந்தினாள். இருந்தாலும் அவர் எதற்காக, 'அவள் யார் என்பதைச் சொல்ல மறுக்க வேண்டும் என்ற எண்ணம் ஊசியினால் நெஞ்சைக் குத்துவதுபோல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. சென்னை பத்மாபுரத்தில் மாமனார் வீட்டில் வசித்த போது, சில கோள் - சொல்லிப் பெண்கள் ராகவனுடைய பழைய காதலைப் பற்றி ஊரில் ஏற்பட்டிருந்த வதந்தியை அவளிடம் பிரஸ்தாபித்தார்கள். அப்போது அவள் அதை நம்பவில்லை. பொறாமையினால் சொல்கிறார்கள் என்றே எண்ணினாள். அந்த வம்புப் பேச்சு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. 'ரயிலில் பார்த்த பெண் அவள்தானோ, என்னமோ? தினம் தினம் ஆபீஸுக்குப் போகிறதாகச் சொல்லி விட்டுப் போகிறாரே, அவளைப் பார்க்கத்தான் போகிறாரோ என்னமோ?' என்று தோன்றியது. "என்ன மூடத்தனம்? அவள்தான் எங்கேயோ போய்விட்டாளே?

மேலும், ரயிலில் அவளைப் பார்த்துவிட்டு இவர் அதிசயப்பட்டதிலிருந்து அவ்வளவு பழக்கப்பட்டவளாகவே தோன்றவில்லை. அப்படி இருக்க நாமாக மனத்தை ஏன் புண்படுத்திக் கொள்கிறோம்? 'பெண் புத்தி பேதைமை' என்று சொல்லுவது வாஸ்தவந்தான்!" என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள். "லலிதாவைப் பார்க்க வந்த இடத்தில் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை வலியக் காதலித்து மணந்து கொண்டாரே; அப்படி என்னை ஆட்கொள்ள வந்த உத்தம புருஷரைப் பற்றி வீண் சந்தேகம் கொள்வது எவ்வளவு பிசகு? கூடவே கூடாது!" என்று தனக்குதானே புத்தி சொல்லிக் கொண்டாள். இனிமேல் அன்று சாயங்காலம் நடந்தது போல் நடப்பதற்கே இடங்கொடுக்கக் கூடாது என்றும், அவருக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றிக் கேட்கவே கூடாது என்றும் சங்கல்பம் செய்து கொண்டாள். இவ்வளவு திடமான தீர்மானத்துக்கு வந்த பிறகும், "ஏதோ நான் தெரியாத்தனமாகக் கேட்டு விட்டதாகவே இருக்கட்டும்; 'அவள் யார்' என்று சொல்லியிருந்தால் என்ன? எதற்காக மறுக்க வேண்டும்?" என்ற நினைவு தோன்றி வேதனை செய்தது.

இந்த வேதனை நிறைந்த சிந்தனையெல்லாம் மறுநாள் பொழுது விடிந்ததும், தூக்கத்தில் கண்ட துர்சொப்பனம் விழித் தெழுந்ததும் மங்கி மறைவது போல், சீதாவின் மனத்திலிருந்து மறையத் தொடங்கியது. ராகவனுக்குக் காலை காப்பி கொண்டு கொடுத்த போது அவன் அவளைப் பார்த்துச் செய்த புன்னகையில் அடியோடு மறைந்துவிட்டது. வழக்கம்போல் ராகவன் ஆபீஸுக்கு புறப்பட்டபோது சீதா வஸந்தியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். ராகவன் அவளைக் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்சினான். தோளில் சாத்திக் கொண்டு தட்டிக் கொடுத்தான்; கன்னத்தை மெதுவாகக் கிள்ளினான். "வஸந்தி! என்னோடு நீ ஆபீஸுக்கு வருகிறாயா?" என்று கேட்டான். "வதேன் அப்பா! இப்பவே வதேன்!" என்றாள் வஸந்தி. "சரிதான்; உன்னை அழைத்துக் கொண்டு போனால் நான் வேலை செய்தாற் போலத்தான்!" என்றான். சமையல் அறையிலிருந்து வந்த காமாட்சி அம்மாள், "வஸந்திக்கும் வயதாகும்போது உன்னைத் தோற்கடித்து விடுவாள், பார்! உன்னைவிடப் பெரிய உத்தியோகம் பார்ப்பாள்!" என்றாள். "அதைப் பற்றிச் சந்தேகம் என்ன? அவளுடைய அம்மா யார்? சீதாவுக்குப் பிறந்த பெண் சோடையாகப் போய் விடுவாளா?" என்றான் ராகவன். சீதாவுக்குப் பெருமை தாங்கவில்லை.

"நான் என்ன அவ்வளவு கெட்டிக்காரியா? வஸந்தி முழுக்க முழுக்க என் மாமியாரைக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாள். நீங்கள் வேணுமானால் இரண்டு பேருடைய முகத்தையும் ஒத்திட்டுப் பாருங்கள்!" என்றாள் சீதா. காமாட்சி அம்மாளுடைய சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. "ஆகக் கூடி உங்கள் இரண்டு பேருக்குள்ளேயே வஸந்தியின் சமர்த்தைப் பங்கு போட்டுக் கொள்ளப் பார்க்கிறீர்கள். எனக்குக் கொஞ்சம் கூடக் 'கிரெடிட்' கொடுக்க நீங்கள் தயாராயில்லை!" என்று ராகவன் சொல்லி வஸந்தியை அம்மாவிடம் ஒப்புவித்து விட்டு ஆபீஸுக்குப் புறப்பட்டான். மேலும் ஒரு வாரம் சென்றது ராகவனாகத் தன்னை 'வாக்கிங்' போக மறுபடி அழைப்பான் என்று சீதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக் கிறதாகக் காணப்படவில்லை. ஆகையால் சீதாவே அந்தப் பேச்சை எடுக்க வேண்டியதாயிற்று. "வெளியே போய் அதிக நாளாயிற்றே? இன்றைக்குப் போகலாமா?" என்று சீதா கேட்டாள். "போகலாம் ஆனால் நீ அன்றைக்குக் கேட்டது போல் அசட்டுத்தனமான கேள்வி ஒன்றும் கேட்கக் கூடாது. கேட்கிறதில்லை என்று ஒப்புக்கொண்டால் போகலாம்!" என்றான் ராகவன்.

"நான் கேட்கவில்லை; அப்படி ஏதாவது நான் தப்பித் தவறிக் கேட்டாலும் நீங்கள் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லுங்களேன்!" என்றாள் சீதா. "அதெல்லாம் முடியாது நீ அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டால் எனக்குக் கோபந்தான் வரும்! அதைவிட வெளியே போகாமலிருப்பதே நல்லது" என்றான் ராகவன். "நான் ஒன்றும் கேட்கவில்லை; ஊமையைப் போல் இருக்கவேண்டும் என்றாலும் இருக்கிறேன்" என்றாள் சீதா. "பார்த்தாயா இங்கேயே ஆரம்பித்து விட்டாயே? நான் வரவில்லை!" என்றான் ராகவன். சீதா பயந்துவிட்டாள்; "நான் சாதாரணமாகத்தான் சொன்னேன் கோபித்துக் கொண்டு சொல்லவில்லை வாருங்கள், போகலாம்" என்றாள். இன்றைக்கு வேறொரு பக்கம் போனார்கள்; போகும்போது பேச்சு அதிகமில்லை. தப்பாக ஏதாவது பேசிவிடக் கூடாது என்று சீதா சர்வ ஜாக்கிரதையாக இருந்தாள். ராகவனும் அக்கம் பக்கம் அதிகமாகப் பார்க்கவில்லை. சீதா தான் எதிரில் வந்த ஸ்திரீகளை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டு போனாள். பச்சைப் புல் வட்டம் ஒன்று வந்தது; அதன் இடையிடையே அழகிய பூஞ்செடிப் புதர்கள் சில இருந்தன. "நடந்தது போதும்; இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம்" என்றாள் சீதா.

பசும்புல் வட்டத்தைச் சுற்றிச் சில பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள்; ராகவனும் சீதாவும் ஒரு பூஞ்செடிப் புதரின் அருகில் அமர்ந்தனர். பெஞ்சிகளில் ஒன்றில் ஒரு பார்ஸி கனவானும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு குழந்தைகளும் புல் தரையில் ஓடியாடுவதைப் பார்த்து அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்! "வஸந்தியையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம் இங்கே ஓடி விளையாடுவாள்!" என்றாள் சீதா. "இவ்வளவு தூரம் அவளால் நடக்க முடியுமா? அல்லது அவளைத் தூக்கிக் கொண்டுதான் வர முடியுமா? காரிலேதான் அழைத்துக் கொண்டு வரவேண்டும்!" என்றான் ராகவன். "ஆமாம்" என்றாள் சீதா; சற்றுப் பொறுத்து, "அம்மாவையும் குழந்தையையும் அழைத்துப்போய் டில்லி அதிசயங்களை எல்லாம் காட்ட வேண்டாமா?" என்று கேட்டாள். "காட்ட வேண்டியதுதான் ஆனால் வஸந்திக்கு இந்த வயதில் ஒன்றும் தெரியாது. அம்மாவுக்கு ஊர் சுற்றுவதில