எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
- பாவேந்தர் பாரதிதாசன் 
 இல்லம் | எங்களைப்பற்றி | அறிவிப்புகள் | தொடர்புக்கு | தமிழ் நட்பகம் | வரி விளம்பரங்கள் | உதவி |
செய்திகள்

புதுவையை சேர்ந்த அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி கு.அ. தமிழ்மொழி அரிய சாதனைக்கான நடுவண் அரசின் தேசியக் குழந்தை விருது பெற்றார்

புதுச்சேரி மீனாட்சிப்பேட்டை இளங்கோ அடிகள் தெருவில் வாழ்ந்து வரும் தமிழ்நெஞ்சன்-குமாரி இணையரின் மகள் கு.அ. தமிழ்மொழி கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நடுவண் அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 2006-ஆம் ஆண்டிற்கான அரிய சாதனைக்கான தேசியக் குழந்தை விருதினைப் பெற்றிருக்கிறார்.

இலக்கியம், ஒவியம், பாடல், நாடகம் ஆகியவற்றில் தேசிய அளவில் சிறந்து விளங்குவதைப் பாராட்டி இவருக்கு குழந்தைகள் நாளான 14-ஆம் நாள் புதுதில்லியில் உள்ள பிரகதி திடலில் நடைபெற்ற குழந்தைகள் நாள் விழாவில், நடுவண் அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருவாட்டி.இரேணுகா சவுத்ரி அவர்கள் தேசியக்குழந்தை விருதை வழங்கினார். விழாவில் இந்திய அரசுச் செயலர் திரு.அனில் குமார், இயக்குநர் திருவாட்டி சாந்தா சின்கா, நாடாளுமன்றச் செயலர், தூதுவர் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கு.அ. தமிழ்மொழி தன்னுடைய 12-அம் அகவையில் (7-ஆம் வகுப்பு படிக்கும்போது) சிறகின் கீழ் எனும் துளிப்பா நூலை புதுச்சேரி முதலைச்சர் ந.அரங்கசாமி அவர்களால் வெளியிட்டுள்ளார். இந்நூல் கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருதினையும் திருமதி.சுந்தராம்பாள் இலக்கிய விருதினையும் பெற்றுள்ளது.

கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் 10-10-2005 முதல் காலை பேரவையில் நாளும் மூன்று துளிப்பா சொல்லி வருகிறார். இதனை1500 மாணவிகள் கேட்டு மகிழ்கின்றனர்.

இவர் ஜீவா விருது (2003), கவித்தென்றல் விருது, மனித நேய முரசு விருது (2005), சிறுவர் கலைச் சிறகம் விருது (2006). அரிமதி தென்னகனார்-அன்னை கோவிந்தாம்மாள் விருது (2007). சிந்தனைச் செம்மல் விருது (2007), யுவகலா பாரதி (2007), திருமதி சுந்தராம்பாள் இலக்கிய விருது (2007), துளிப்பா துளிர் விருது (2007) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர், 15 தொகுப்பு நூல்களிலும் 30 இதழ்களிலும் எழுதியிருக்கிறார். தமிழ்மொழி வளர்ச்சித் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். ஆழிப்பேரலை கொடையாக தம் அமைப்பு சார்பில் உருவா 1500/-திரட்டித் தந்திருக்கிறார். இவர் மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தில் செயலராகவும். சிறுவர் இலக்கியச்சந்திப்பு இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

புதுச்சேரியில் முதன்முறையாக இலக்கியத்திற்கான அரிய சாதனைக்காக நடுவண் அரசின் தேசியக்குழந்தை விருது பெறும் முதல் மாணவி என்பது கு.அ.தமிழ்மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படத்தில் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருவாட்டி.இரேணுகா சவுத்ரி தேசியக்குழந்தை விருது பெறும் கு.அ.தமிழ்மொழி மற்றும் இயக்குநர் திருவாட்டி சாந்தா சின்கா, இந்திய அரசுச் செயலர் திரு. அனில் குமார் ஆகியோர்.

ஒளிப்படத்தில் புதுச்சேரி முதலைச்சர் ந.அரங்கசாமி அவர்களின் பாராட்டிப்னைபெறும் கு.அ.தமிழ்மொழி.

வந்த பாதை

தமிழ் நூலகம்

தமிழ்த்தளங்கள்

திரைப்படங்கள்

இணைப்புகள்

பிற தளங்கள்


© Thamizhagam Net 2007