கட்டுரை
-க. காளிதாசன், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்
கடந்த 4-2-2008 அன்று அதிகாலை கோவை அருகே நடந்த விபத்து உலகெங்கும் இருக்கும் இயற்கை ஆர்வலர்களை மட்டுமன்றி இன்னும் மனதில் ஈரத்தை மிச்சம் வைத்திருக்கும் எல்லா மனிதர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கோவையிலிருந்து பாலக்காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மோதி 2 ஆண் யானைகள் உள்ளிட்ட 3 யானைகள் பரிதாபமாக இறந்தன. இதில் இறந்த பெண் யானையின் வயிற்றில் 20 மாதக் கருவாக இருந்து இன்னும் சில நாள்களில் பிரசவிக்க இருந்த ஆண் கன்று ரயில் மோதிய வேகத்தில் கருவிலிருந்து தூக்கி எறியப்பட, அந்தத் தாயோ தும்பிக்கையும் ஒற்றைக்காலும் தவிர உடலின் எந்த உறுப்பும் அடையாளம் தெரியாவண்ணம் சதைப்பிண்டங்களாய் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்தன.
இந்தக் காட்சியை நேரில் கண்டவர்கள் அந்தத் துயரிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். இந்த விபத்திற்கு யார் காரணம்? யானைகள் காட்டைவிட்டு ஏன் வெளிவருகின்றன? என்ற கேள்விகளுக்கான விடைகளை அறிந்தால்தான் இதுபோன்ற துயர நிகழ்வுகள் தொடராமல் செய்ய இயலும்.
புலி, சிங்கம் போன்ற ஊன் உண்ணிகள் பெரும்பாலும் தனித்தே வாழும். ஆனால் யானைகள் கூட்டமாக வாழும் பண்புடையது. பாட்டி, பெரியம்மா, சின்னம்மா, அம்மா ஆகிய அனைவரின் அரவணைப்பிலும் வளரும் வாய்ப்பு யானைக் கன்றுகளுக்கு கிட்டும். ஆண் யானைகள் மட்டும் பெரும்பாலும் கூட்டத்தை விட்டு விலகி தனித்து இருக்கும். ஒரு தாய் யானையால் கூட்டம் வழிநடத்தப்படுகிறது.
ஒவ்வொரு யானைக் கூட்டமும் தமக்கான வாழ்விடமாக ஏறக்குறைய 500 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டைப் பயன்படுத்துகின்றன. இதற்குக் காரணம் அதன் உணவுத் தேவையும் அவற்றின் செரிமானத் தன்மையும் ஆகும்.
ஒரு வளர்ந்த காட்டு யானைக்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. அது 150 லிட்டர் தண்ணீரைப் பருகும். ஆனால் உட்கொண்ட உணவில் 44 சதவிகிதம் வரைதான் செரிமானமாகிறது. மீதி செரிக்காமலே சாணமாக வெளியேறுகிறது. ஆகவே யானைகள் உணவைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளன.
எல்லா பருவ காலங்களிலும் தமக்கு உகந்த உணவு தேவையான அளவு கிடைக்க வேண்டும் என்பதால், அவை பெரும் பரப்புள்ள காட்டைப் பயன்படுத்துகின்றன.
ஒவ்வொரு பருவநிலையிலும் உணவும், நீரும் எங்கு கிடைக்கும் என்பதை அவை அறிந்துள்ளன. எனவே அதற்கேற்றவாறு தமது இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன.
யானைகள் ஓராண்டில் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு கூட்டமும் ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டுக்கு இடப்பெயர்ச்சி செய்யும்போது தமக்கென வழித்தடங்களைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் அவை இந்தப் பாதைகளை மாற்றிக் கொள்வதில்லை. பலநூறு ஆண்டுகளாக அவற்றின் மூதாதையர் பயன்படுத்திய அந்தப் பாதைகளே யானைகளின் வலசைப்பாதை (Elephant Corridors)களாகும்.
யானைகளின் சமூக வாழ்வில் முக்கியப் பங்காற்றும் அவற்றின் வாழ்விடத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அவற்றின் இயல்பை பாதிக்கும். மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளால் வலசைப்பாதைகள் தடுக்கப்படும் போதும், காடுகளின் அழிவால் வாழ்விடங்களை இழக்கும்போதும் துன்புறும் யானைகளே மனித வாழ்விடங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
கடந்த 100 ஆண்டுகளில் மலையோரங்களில் காட்டை அழித்து நாம் விரிவுபடுத்திய விளைநிலங்கள், கட்டிய அணைக்கட்டுகள், தோண்டிய சுரங்கங்கள் யாவும் யானைகளின் வாழ்விடங்களே.
நாம் நமது மேலாண்மைக்காக வனநிலம், பட்டா நிலம் என்றெல்லாம் பிரித்தாலும் அவை யானைகளின் இருப்பிடங்களே.
தமது வாழ்விடம் சுருங்கிப் போனதால் உணவும் தண்ணீரும் குறையும்போது நமது விளைநிலங்களை நோக்கி வருகின்றன. யானைகள் வாழும் காட்டோரம் அவை விரும்பி உண்ணும் வாழை, கரும்பு, தென்னை போன்ற பயிர்களைப் பயிரிடும்போது யானைப் பசிக்கு அவை இலக்காகின்றன.
யானைகள் வராமல் இருக்க கல்லெறிந்தும், பட்டாசு வெடித்தும், மின் வேலிகள் அமைத்தும் தடுக்க முயல்கிறோம். கல்லெறிதலால் காயப்படும் போதும் மின் வேலியில் அதிர்வுக்குள்ளாகும் போதும் எரிச்சலடையும் அந்தப் பெரிய உயிரினத்தின் மனநிலை மனிதர்களுக்கு எதிராக மாறுகிறது.
ரயில் விபத்துகளில் மட்டுமன்றி சட்ட விரோதமான மின் வேலிகளில் அடிபட்டு இறந்துபோகும் யானைகளின் எண்ணிக்கையும் தொடர்கிறது. ஒரு பேருயிர் இப்போது தமது வாழ்வின் இருத்தலுக்கான கடைசிப் போராட்டத்தில் உள்ளது.
யானைகள் அழிந்து போனால் அதன் விளைவுகள் நமது காட்டைப் பாதிக்கும். நமது காட்டின் உயிர்ச் சூழலைக் காப்பதில் யானைகளின் பங்கு மகத்தானது.
யானைகள் உட்கொள்ளும் மரங்கள் உள்ளிட்ட பல தாவரங்களின் விதைகள் அதன் சாணத்தில் வெளியேறுகின்றன. அந்த விதைகளுக்கு முளைப்புத்தன்மையும் உயிர்த்தன்மையும் அதிகம்.
ஆகவே காடெங்கும் அந்தத் தாவரங்கள் முளைக்கின்றன. யானைகள் இல்லாவிட்டால் இவற்றில் பல தாவரங்கள் காட்டில் இல்லாமல் போய்விடும். அதனால்தான் யானையை "ஆதார உயிரினம்' என்கின்றனர்.
காடுகள் துண்டாடப்பட்டு தீவுகளானதால் இன்று அசாம் போன்ற வடகிழக்கு மாகாணங்களில் யானை மனித மோதல் உச்சத்தில் உள்ளது. யானைகளால் மனிதர்களும், மனிதர்களால் யானைகளும் கொல்லப்படும் துயரநிலை தொடர்கிறது. அந்த அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இல்லை.
இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகளின் வழித்தடங்கள் அமைந்துள்ள தனியார் நிலங்களை விலைக்கு வாங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக யானைகளின் வழித்தடங்களை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.
ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள தனியார் வசம் உள்ள யானை வழித்தடங்களை அரசு கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும்.
மனிதர்களுக்கு அமைதி வேண்டும் என்பதற்காக நகரத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள காடுகளை ஒட்டி ஆசிரமங்களையும் கல்வி நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் அமைக்கிறோம். இவற்றால் யானைகளும் மற்ற வன உயிரினங்களும் அமைதியை இழக்கின்றன என்பதை உணர்கிறோமா?
வனத்துறை மட்டுமன்றி வேளாண் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுலாத்துறை ஆகிய அனைத்துத் துறைகளின் அக்கறையால் மட்டுமே யானை வாழ்விடங்களைப் பாதுகாக்க இயலும். வனப்பகுதியை ஒட்டி மேற்கண்ட துறைகளால் ஏற்படுத்தப்படும் எல்லா வளர்ச்சிப் பணிகளும் வல்லுநர் குழுவின் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டும்.
வல்லுநர் குழுவில் எல்லா துறை உயர் அதிகாரிகளோடு தகுதி வாய்ந்த கானுயிர் ஆய்வாளர்கள், அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழலாளர்கள், பழங்குடி மக்கள், விவசாயிகள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
யானைகள் போன்ற அரிய விலங்குகள் நடமாட்டமுள்ள வனப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சாலைகளில் இரவுநேர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி அவற்றின் வாழ்விடத்தில் சிலமணி நேரமாவது அந்த விலங்குகள் சுதந்திரமாக நடமாட வழி செய்ய வேண்டும்.
காடுகளைக் கிழித்து புதிய சாலைகள், ரயில் பாதைகள் ஆகியவை உருவாகாமல் இருக்க அரசு முடிவு எடுக்க வேண்டும். ஏற்கெனவே வனப்பகுதியில் உள்ள ரயில் பாதைகளில் வேகத்தைக் குறைத்து ரயில்கள் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் காடுகளில் நிறைந்திருந்த யானைகளின் உணவான பழமரங்கள், மூங்கில் ஆகியவை குறைந்து போயின. அவற்றை மீண்டும் வளர்த்தெடுக்கும் முயற்சியை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
யானைகள் விரும்பி உண்ணும் வாழை, கரும்பு, தென்னை, சோளம் போன்ற பயிர்களை காட்டோர விளைநிலங்களில் பயிரிடாமல் தவிர்க்க வேண்டும்.
மிச்சமிருக்கக்கூடிய மிகக்குறுகிய பரப்பளவுள்ள காடுகளே நமக்கு தண்ணீரையும் உயிர்க்காற்றையும் தந்து மனித குலத்தை வாழ வைக்கிறது. எதிர்வரும் தலைமுறைக்கான உயிர் ஆதாரமாக அவையே மிச்சமிருக்கின்றன.
காடுகள் நமக்கு எப்படி அவசியமோ அப்படியே நமது காட்டுக்கு யானைகள் அவசியம். காடு, கானுயிர் பற்றிய சரியான விழிப்புணர்வை விவசாயிகள், பொதுமக்களிடம் கொண்டு செல்வதன் மூலமே யானைகளையும் காடுகளையும் காப்பாற்ற முடியும்.