திரைப்பட மதிப்புரைகள்

திரைப்பட மதிப்புரைகள்கலர் ஆஃப் பேரடைஸ்

அறிமுகம்:

உலக சினிமாவைப் பற்றிய பரவலான அறிமுகமும், பார்வையும் சகஜமாகிக் கொண்டு வருகின்றன. எத்தனை நூற்றண்டுகள் ஆன போதிலும் நல்ல படைப்பு தன்னுடைய இருப்பைக் காட்டி விடும். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த நாட்டில் எடுக்கப்பட்ட நல்ல திரைப்படங்களும் நம்முடைய பார்வைக்கி கிடைக்கின்றன.

திரைத்துறையினர், ஊடகம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பலரும் தேர்ந்த திரைப்படங்களைப் பார்க்க விரும்புகின்றனர். ஈரான் என்றால் யுத்தமும் பூகம்பமும் மட்டுமே நினைவுக்கு வந்தகாலம் போய் சர்வதேச தரத்தில் அவர்களின் திரைப்படங்கன் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளன. கொரியா, சீனா, ஈரானிய மொழிப்படங்களின் யதார்த்தமும், கதைக்களமுமே அவர்கள் படைப்பை முன்னடத்தி செல்கிறது.

     

COLOUR OF PARADISE

கண்களை மறைத்து துணி ஒன்றினைக் கட்டுகிறோம். இருள் நம் கண்களுக்குள் நிரம்புகிறது. சுற்றிலும் கேட்கிற ஒலிகளே நம்முடைய திசையைத் திர்மானிக்கின்றன. இப்போது நமது கைகள் காற்றில் ஸ்பரிச்த்திற்காய் அலைகின்றன. அடி மேல் அடி வைத்து பயத்தோடு சவாரஸ்யமும் தரும் இந்தசில நிமிட அனுபவங்களுக்காகவே கண்ணாமூச்சி விளையாட்டை நாம் ஒருபோதும் மறப்பதில்லை.

அப்பாவின் இரண்டாவது திருமண ஆசையால் அலைக்ழிக்கப்படும் பார்வையற்ற சிறுவன் மொஹமதுவைப் பற்றியது ''Colour of Paradise''.

டெஹ்ரானில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் எட்டு வயதான மொகமது விடுமுறை மாதங்களைத் தன் பாட்டியோடும் இரண்டு சகோதரிகளுடனும் கழிக்க ஆவலோடு இருக்கிறான். விடுதியில் உள்ள சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வருகின்றனர். மாலை வேளையில் விடுதி அமைதியாக இருக்கிறது. மொகமது மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான். வெகு நேரம் கழித்து மொகமதுவின் அப்பா வருகிறார். பள்ளி நிர்வாகத்திடம், மொகமதுவைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடியாது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் அவனைத் தன்னோடு அழைத்துச் செல்கிறார்.

தங்களுடைய மலைக்கிராமத்தை அடைய அவர்கள் வெகுதூரம் பயணம் செய்கிறார்கள். மொகமது பேரூந்தில் பயணம் செய்யும் போது, தனது அப்பாவிடம் சன்னலுக்கு வெளியே என்ன காட்சிகள் தெரிகின்றன எனக் கேட்கிறான். அவனுடைய அப்பா வெறுப்பாக பதில் சொல்கிறார்.

அவர்களின் கிராமம் வருகிறது. நடக்கும் போதே தனக்குப் பழகிய இடம் வருதுவிட்டதை அறிந்த மொஹமத் உற்சாகமாகத் தனியே ஓடுகிறான். ஊர் எல்லையைத் தொட்டதுமே 'பாட்டி' , 'பாட்டி' என உரக்கக் கூப்பிடுகிறான். அவனுடைய இரு சகோதரிகளும் இவனை வரவேற்க ஒடி வருகின்றனர். மொகமது சகோதரியின் முகத்தைத் தடவி பார்த்து ''போன தடவ விட இப்ப வளர்ந்திருக்க'' என்கிறான்.

மொகமகவும், சகோதரிகளும் பாட்டியைப் பார்க்கத் தோட்டத்திற்கு செல்கின்றனர். பாட்டி பார்க்கும் போது தன்னை மரத்தின் பின்னால் ஒளித்துக் கொண்டு குரல் கொடுக்கிறான். மொகமத் இதைப் பார்த்த பாட்டியின் மனது நெகிழ்கிறது. மொகமதுவின் விடுமுறை நல்ல முறையில் செல்கிறது.

மொகமதுவின் அப்பா தன்னுடைய மனைவி இறந்த காரணத்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு மொகமது தடையாக இருப்பதனால் மரத்தச்சு செய்யும் ஒருவரிடம் மொகமதுவை சேர்க்க நினைக்கிறார். மரத் தச்சு செய்பவரும் கண்பார்வை இழந்தவர் என்பதனால் இதைக் காரணம் காட்டி பாட்டியிடம் சம்மதம் கேட்கிறார். ''உன்னுடைய சுயநலத்திற்காக படிக்க விரும்பும் பையனின் வாழ்க்கையைக் கெடுக்காதாதே'' என பாட்டி கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாள்.

மொகமது பிடிவாதம் செய்து உள்ளூரில் இருக்கும் சகோதரிகளின் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான். பள்ளியில் அவனை அனைவரும் அன்போடு வரவேற்கின்றனர். மொகமதுவின் 'பிரெய்லி' கல்வி முறையும், வாசிப்பும் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். மற்றவர்கள் வாசிப்பதைத் திருத்துகிறான் மொகமத். ஆசிரியர் மொகமதுவை வாசிக்கச் சொல்கிறார். எந்தத் தடையுமில்லாமல் வாசிக்கிறான். பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் மொகமதுவை சுற்றிக் கொள்கின்றனர். இதனைத் தூரத்தில் இருந்து அவன் அப்பா பார்க்கிறார். கோபத்தோடு பாட்டியிடம் சண்டை போடுகிறார்.

மொகமதுவின் ஆர்வத்தைக் கெடுக்க வேண்டாமென்று பாட்டி கெஞ்சுகிறாள்.

ஒருநாள் பாட்டி சந்தைக்கு சென்றிருக்கும் நேரத்தில் மொகமதுவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அப்பா. கடைக்குச் சென்று வரும் பாட்டி, முகமது வீட்டில் இல்லை என்றதும் புரிந்து கொள்கிறாள். முகம் இறுக்கமடைகிறது.

மொகமதுவும், அவன் அப்பாவும் பயணம் செய்கின்றனர். தான் வேலை செய்யும் நிலக்கரி தொழிற்சாலையில் மொகமதுவை உட்கார வைக்கிறார் அவன் அப்பா. மொகமது சுற்றிலும் கேட்கும் பறவைகளின் ஒலி, குதிரையின் கனைப்புச் சத்தம், நீரின் சலசலப்பு ஒலிகளை தன்னுள் மொழிபெயர்த்துக் கொள்கிறான்.

வேலை முடிந்ததும் மொகமதுவும் அவன் அப்பாபவும் மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அப்பா அழைத்துச் செல்லும் பாதையில் கேட்டும் ஒலிகளை வைத்து இது தன்னுடைய கிராமத்திற்கு செல்லும் பாதை இல்லை என தெரிந்து கொள்கிறான். பாட்டியிடம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் மொகமதுவை பலவந்தமாக அழைத்துச் செல்கிறார் அவன் அப்பா.

மரத்தச்சரிடம் மொகமதுவை விட்டு கிளம்பிச்செல்கிறார். மரத்தச்சர் மொகமதுவிகம் தானும் அவனைப் போல பார்வை இல்லாதவன் தான் என ஆறுதல் சொல்கிறார். மொகமது அழுகிறான். ''ஏன் அழுகிறாய்'' என கேட்கிறார் தச்சர்.

"எனக்கு கண் தெரியாத்தால் யாரும் என்னை விரும்புவதில்லை. என் பாட்டிக்குக் கூட என்னைப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆசிரியர் ''கண்பார்வையற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார். நான் கேட்டேன், பிறகு ஏன் கருணையுள்ள அவர் பார்வையற்றவர்களை படைக்கிறார்? அதற்கு ஆசிரியர், ' ஏனென்றால் கடவுளும் கண் பார்வையற்றவர்தான் ' என்கிறார். கடவுளை நாம் நம் விரல் நுனியில் அறிய முடியும் என்று சொன்னார். அதிலிருந்து நான் விரல் நுனியின் ஸ்பரிச்த்தில் கடவுளை அறிகிறேன். என் மனதில் உள்ள ரகசியங்களைக் கூட அவரிடம் சொல்கிறேன்" என்று அழுதுகொண்டே சொல்கிறான் மொகமத். மரத்தச்சர் சிறிது நேர மேளனத்திற்குப் பிறகு, "உங்கள் ஆசிரியர் சொன்னது சரி தான்" என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார்.

இங்கு பாட்டிக்கும், அப்பாவுக்கும் விவாதம் வருகிறது. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்புகிறாள். மொகமதுவின் அப்பா போக வேண்டாமென்று தடுக்கிறார். ஆனாலும் கிளம்பி விடுகிறாள் பாட்டி. போகும் வழியில் மயக்கமாகி விழும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா.

உடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறார் மொகம்துவின் அப்பா. பாட்டி அமைதியாக தன்னுடைய நகைகளை எடுத்துக் கொடுக்கிறாள். அன்றிரவே இறந்து போகிறாள்.

மரத்தச்சர் மொகமதுவிற்கு வேலை கற்றுது தருகிறார்- அங்குள்ள சூழலோடு தன்னை இணைத்துக் கொள்கிறான் மொகமத். பாட்டியின் இறப்பைத் தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்து கொள்கிறான் மொகமது. வருத்தத்தில் அழுகிறான் . பாட்டியின் மரணத்தை துர்சகுனமாக நினைத்து மொகமது அப்பாவின் திருமணத்தை நிறுத்துகின்றனர். மனம் நொந்து போய் மொகமதுவைத் தன்னோடு அழைத்துக் கொள்ள வருகிறார் அவனுடைய அப்பா.

இருவரும் மெளனமாகவே பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது ஏற்படுகின்ற எதிர்பாராத நிகழ்வினால் மொகமதுவின் அப்பா அலைகழிக்கப்படுகிறார்.

நம்பிக்கையின் மொழியோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். பார்வையற்றவர்களுக்கு கடவுள் விரல் நுனியில் இருக்கிறார் என்பதை மொகமத் ஒவ்வொரு முறையும் செயலில் காட்டுகிறான்.

மறவைகள், நீரின் சத்தம், அலைகளின் ஒசை என எல்லா ஒலிகளையுமே மொழிப்படுத்தி தனக்குள் புரிந்து கொள்கிறான் மொகமது.

தனது தந்தைக்காக விடுதியில் காத்திருக்கும் போது, பறவைக் குஞ்சு ஒன்றின் சத்தத்தையும் அதைத் தொடர்ந்து கேட்கும் பூனைச் சத்தத்தையும் கேட்கிறான் மொகமது. சத்தம் வந்த திசையில் பூனையை கை வீசி விரட்டி விட்டு குஞ்சினைத் தாய்ப் பறவை இருக்கும் கூட்டில் கொண்டு சேர்க்கிறான். இதே போல் பாட்டியும் வீட்டை விட்டு கிளம்பும் அவசர நேரத்திலும் கரையோரமாகத் துள்ளும் மீனை நீரில் விட்டுச் செல்கிறான்.

சுற்றியுள்ள உயிர்களுககு முக்கியத்துவம் கொடுக்கும் மொகமதுவும் பாட்டியும் பிரிந்ததும் அவரவர் இடத்தில் அமைதியாகி விடுகின்றனர்.

நிறங்களைப் பற்றிய நேரடி அறிமுகம் இல்லாத மொகமதுவிற்கு மென்மையான ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் என மனதில் பதிந்து போயுள்ளதை. பாட்டியின் கை பிடித்து வரும் போது, "பாட்டி, உன் கை வெள்ளையாக இருக்கிறது" என்கிறான். "வயலில் வேலை செய்வதால் கறுத்துப் போய் உள்ளது" என்கிறாள் பாட்டி. "இல்லை, இல்லை வெள்ளையாக அழகாக உள்ளன " என்று திரும்பவும் சொல்கிறான்.

திரைப்படத்தின் பல இடங்களில் பறவைகளின் ஒலிகள் முக்கியமான இடம் வகிக்கிறது. மொகமதுவின் அப்பா ஒரு பறவையின் சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் படபடப்பும் பயமும் அடைகிறார்.

காற்றைக் கையில் பிடிப்பது, இயற்கை மேல் வைத்துள்ள அன்பு என மொகமதுவின் உலகம் ரசனையாகவே இருக்கிறது. இதனாலேயே மரத்தச்சரிடம் வேலைக்குச் சேர்ந்ததும் அங்குள்ள சூழலோடு மொகமது எளிதில் இணைந்து கொள்கிறான்.

குழந்தைகள் திரைப்படங்களில் உலக அளவில் முக்கிய இடம் பெறுகிறது இந்தப் படம். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி ஈரான் இயக்குநர்களில் முக்கியமானவர். 'Colour of Paradise' பற்றி சொல்லும் போது "இந்தப் படத்தில் த்ந்தையும் மகனும் ஊனமுற்றவர்கள். சிறுவன் உடல் ஊனமுற்றவன், ஆனால் தந்தையோ மன ஊனம் கொண்டவர்" என்கிறார் இயக்குநர் மஜித் மஜிதி.

இவருடைய மற்ற திரைப்படங்கள்
1. Baoluk(1992)
2. Father(1996)
3. Children of Heaven(1997)
4. The Colour of Paradise(1996)
5. Baran(2001)

பல ஆவணப்படங்களும், குறும்படங்களும் இயக்கியுள்ளார். 1996ம் ஆண்டு வெளிவந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக Colour of Paradise படத்தைத் தேர்வு செய்தது 'டைம்' பத்திரிகை.

எட்டு வயது சிறுவன் மொகமதாக மொகஸென் ரமேசானி நடித்திருக்கிறான். பாட்டியாக சலிமே பெய்ஸியும், அப்பாவாக ஹீசேன்

மஹ்ஜீபும் நடித்துள்ளனர்.

திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் மஜித் மஜீதி. படத்தொகுப்பு ஹசன் ஹசந்தூஸ்த். இசை அமைத்திருக்கிறார் அலிரேஜா கோஹண்டயரி.

பார்வையற்ற சிறுவனை சூழ்ந்துள்ள வண்ணமயமான உலகத்தை அழகான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் மொகமத் தாவூதி.

ஜா. தீபா

திரைப்பட மதிப்புரைகள்

Bookmark and Share   Lunarpages Affiliate Program