திரைப்பட மதிப்புரைகள்

திரைப்பட மதிப்புரைகள்அமேடியஸ்

அறிமுகம்:

 

ஆண்டனியோ ஸலைரி- கேள்விப்பட்டதுண்டா இந்தப் பெயரை எங்ககேயாவது? இசைக்கும் கலைக்கும் சாம்ராஜ்யமாக, பல கலை உலக மேதைகளை உலகிற்குத்தந்த வியன்னா நாட்டின் அரசவையில் புகழ்மிக்க இசைக்கலைஞராக இருந்தவர். ‘‘இசை எப்போதும் என் உடம்பில் காமம் போல் படர்ந்திருக்கிறது’’ என்று சொல்லியபடி, இசையோடு வாழ்ந்தவர். கடவுளின் புகழ்பாட தனக்கு அளிக்கப்பட்ட கருவி இசை மட்டுமே என நம்பியவர். தனக்கும் இசைக்குமான இடைவெளியை, எவரும் நிரப்பிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர். இத்தனை அர்ப்பணிப்பு இருந்தும் அவரால், அவருடைய புகழை நம் செவிகளுக்கு அழைத்து வர முடியவில்லை... காரணம்...?

மொசார்ட்- உலக அளவில் இசைப்பிரியர்கள் வழிபடும் பெயர்களுள் ஒன்று. இசை மேல் தீராத காதலும், நம்பிக்கையும் வைத்து தன்ன்னுடைய இசைக் குறிப்புகளைத் தவத்தில் கிடைத்த வரமாய் உலகிற்கு அளித்தவர். அவரின் 35 ஆண்டு வாழ்க்கையில் 30 ஆண்டுகளும் தன்னுடைய ஆன்மாவாக இசையினை உணர முடிந்தது. கலைஞனா வாழ்ந்ததினால் உலக நியதிப்படி சில தோல்விகளைத்தாங்கி, இறந்த பின்னரே கொண்டாடப்பட்டவர். தீவிரத்தன்மையும் இசை நுட்பங்களை தனதென ஆக்கிக்கொண்டு கலைத்தேடலை வேட்கையுடன் சுவாசித்து வந்த அவரின் வாழ்நாட்கள் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை. கா£ரணம்...? இசையை மட்டுமே நேசிக்கவும், அனுபவிக்கவும் செய்கிற இரு கலைஞர்களிடையே இழையும் உணர்வுப்போராட்டங்களை விரித்து நம் கண் முன் காட்டுகிற அமேடியஸ் (கிவிகிஞிணிஹிஷி) திரைப்படம் ஆழமாய் சொல்கிறது.

     

பனி பொழியும் இரவு. ஒரு வீட்டிலிருந்து அலறல் சப்தம். ‘‘மன்னித்துக்கொள் மொசார்ட், நான் உன்னைக் கொன்று விட்டேன்.’’ தொடர்ந்து பெரிய அலறல். சப்தம் நிற்கிறது. தாழிட்டக் கதவின் உள்ளே கழுத்தில் இருந்து இரத்தம் கொட்டும் நிலையில் கையில் கத்தியுடன் வயதான உருவம். அந்த இரவில் அவரைக்காப்பாற்ற ஆட்கள் தூக்கிச் செல்கின்றனர், பின்னணியில் இசை கேட்கிறது. வயதானவரின் நினைவில் இளமைத்துள்ளலான இசையும், குதூகலமாய் ஆடுபவர்களும் வந்து போகிறார்கள்.

காலை வேளை, மனநலக் காப்பகம் ஒன்றினுள் வருகிறார் ஓர் இளம் பாதிரியார். தனித்த அறை ஒன்றினுள் பியானோ இசைக்கும் சப்தம் கேட்கிறது. தன்னை மறந்த நிலையில் இசைத்துக் கொண்டிருக்கிறார் வயதானவர். ‘‘திரு. ஸலைரி’’ பாதிரியாரின் குரல் அறையினுள் ஒலிக்கிறது. இசை மட்டும் எதிரொலியாய் . சில விநாடிகளுக்கு பின் நிமிர்ந்து பார்க்கிறார் ஸலைரி “என்னுடைய மெலடிகளை எப்போதாவது நீ கேட்டிருக்கிறாயா” என்றபடி ஒரு மெட்டினை வாசித்துக் காண்பிக்கிறார். தர்மசங்கடமாய் உணர்கிறார் பாதிரியார். இப்பொது ஸலைரி வேறொரு மெட்டினை மாற்றுகிறார். உடன் உற்சாகமாகப் பாடுகிறார் பாதிரியார். மிகப் பிரபலமான அந்த மெட்டிற்காக ஸலைரி யைப் பாராட்டுகிறார் பாதிரியார். கூர்ந்த பார்வையுடன் ஸலைரி சிறிய மௌனத்திற்குப் பிறகு சொல்கிறார், “இது என்னுடையதிலை...” சிறிது மௌனம் “மொசார்ட்டினுடையது”. பாதிரியார் மிக கவனமாக கேட்கிறார், “நீங்கள் கொன்றதாக சொல்லப்படுகிற மொசார்ட்டா?”. ஸலைரி தன்னுடைய ஞாபக அடுக்குகளில் மெதுவாக ஆழ்ந்து போகிறார்.

“இறைவா! உன்னுடைய மகிமையையும் புகழையும் உலகுக்குப் பரப்ப இசை என்னும் ஞானத்தை எனக்குத் தருவாயாக..” இப்படி நீள்கிறது தேவாலய பிரார்த்தனையின் போது ஒரு சிறுவனின் மனம். அந்தச் சிறுவன் ஸலைரி யின் தந்தையோ நிமிடங்களைப் பணமாகும் வியாபார சிந்தனையோடு எந்த நேரமும். அதே சமயம் ஏழு வயது மொசார்ட் அரசவையில் தன்னுடைய இசைக்குறிப்பை வாசிக்கிறான். அவனின் எல்லாமுமாக இருந்து மொசார்ட் பெறும் வெற்றிகளை இரசிக்கிறார் தந்தை லீபோல்ட். ஸலைரியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட கடவுள் தந்தையை தன்னுடன் அழைத்துக்கொள்கிறார். இப்போது தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடங்குவதில் ஸலைரிக்கு எந்தத் தடையும் இல்லை. மிகச் சீக்கிரத்தில் வியன்னா அரசவையில் தலைமை இசையமைப்பாளர். பிறகென்ன...? அவர் அடைய நினைத்தது இதைத்தானே... ஆனால்...!

தன் மனதின் மையத்தில் அமர்ந்து தன்னை இதுவரை செலுத்தி வந்த மொசார்ட்டைப் பார்க்க ஏங்குகிறார் ஸலைரி. அதற்கான நாளும் வருகிறது. மொசார்ட்டைப் பார்க்க அவரின் இசை நடைபெறும் இடத்திற்கு வருகிறார் ஸலைரி. ஒவ்வொருவரின் முகத்தையும் உற்றுப்பார்க்கிறார். எப்படி இருப்பார் மொசார்ட்?

   

கம்பீரத்தோடும் மிடுக்கோடும் வளைய வருகிற ஒவ்வொருவரின் முகத்திலும் “ இசைக்களையைத்” தேடுகிறார். ஸலைரிக்குத் தெரியவேயில்லை. விருந்தினர்களின் அறைக்குச் சென்று பார்க்கிறார். யாரும் இல்லை. சில நொடிகள் கழிந்த பிறகு ஒரு இளம்பெண் சிரித்தவாறு ஒடி வருகிறாள். ஒன்றும் செய்யத் தோன்றாத ஸலைரி தன்னை மறைத்துக் கொள்கிறார். இளம்பெண் யாரிடமோ இருந்து தப்ப்பிக்க வேண்டி மேசை அடியினுள் ஒளிந்து கொள்கிறாள். இப்போது யாரோ உள்ளே வருவது போல் காலடி ஓசை. ஸலைரி கூர்ந்து கவனிக்கிறார். வந்தவர் மேசைக்கடியில் உள்ள இளம்பெண்ணை வெளியே இழுக்கிறார். அந்த இளம்பெண் சிரித்துக் கொண்டே தன்னை விடுமாறு கேட்கிறாள். வந்தவர் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். இருவரின் ‘பயனற்றப்பேச்சுகளும்’ சில நொடிகள் நீள்கிறது. வந்தவர் பேச்சினூடே சிரிக்கிறார். அந்தச் சிரிப்பு ஸலைரியை முகம் சிணுங்க வைக்கிறது. சிரிப்பு சட்டென்று நிற்கிறது. மெல்லிய இசை தூரத்தில் கேட்கிறது. வந்தவர் உடனே விரைத்து நிற்கிறார். “நான் இல்லாமலேயே என் இசையை தொடங்கி விட்டார்கள்” என்று கூறியபடி அந்த அறையிலிருந்து ஓடுகிறார். ஸலைரி மிகுந்த அதிர்ச்சி ஆகிறார். விருந்து மண்டபத்தில் இசை அரங்கேறுகிறது. இளம்பெண்ணுடன் இருந்தவர் தன்னை மறந்த நிலையில் இசையுடன் ஒன்று கலக்கிறார்.

அந்த இசையில் பல மாயங்கள் இருப்பதாக ஸலைரிக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகள் தன்னை ஆட்டுவித்த மாய சக்தியான உந்துதலை நேரில் கண்டதும் பரவசத்திற்குப் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது ஸலைரி க்கு. தான் இத்தனை ஆண்டுகளாக பிரமித்து, ஆராதித்த ஒரு கலைஞனை இளம்பெண்ணுடன் பைத்தியக்காரத்தனமாப் பார்த்த நிமிடங்களில் இருந்து விலக முடியாமல் இருக்கிறார் ஸலைரி. அந்த நிமிடத்தில் இருந்து அவர் மனதில் ஒரு கேள்வி தோன்றுகிறது. “ஏன் கடவுள் தன்னுடைய இ¬க்கருவியை இந்தக் கிறுக்குத்தனமான படைப்பிற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறான்? ”இந்தக் கேள்வியும் வெறுப்பும் தான் ஸலைரியின் வாழ்நாள் முழுவதற்கும் தொடர்ந்து வருகிறது.

தன்னுடைய மொசார்ட் வியன்னாவிற்கு வருவது அந்த நாட்டு மன்னனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மொசார்ட் தன்னுடைய நாட்டினருக்கு முன் ‘ஒபேரா’ நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார். ஒபேரா என்கிற இசை நாடகம் இத்தாலி அல்லது ஜெர்மனி மொழியிலா என்கிற குழப்பம் வருகிறது. மொசார்ட் அந்த அரசவைக்கு வரும் நாள் வருகிறது. ஸலைரி மொசார்ட்டினை வரவேற்கவும், தன்னுடைய இசைக்குறிப்பினை அவரிடம் தரவும் மிகவும் விருப்பமாயிருக்கிறார். அந்த இசைகுறிப்புகளை வியன்னாவின் மன்னர் இசைக்க மொசார்ட் உள்ளே வருகிறார். அங்குள்ளவர்களில் மன்னர் யாரெனத் தெரியாமல் ஒவ்வொருக்குமாய் வணக்கம் சொல்லும் மொசார்ட்டை அனைவரும் விசித்திரமாய் பார்க்கின்றனர். மன்னர் எழுந்து மொசார்ட்டை வரவேற்கிறார். அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். ஸலைரியின் முறைவரும் போது மொசார்ட் தான் ஸலேரியைப் பற்றி மிகவும் அறிந்திருப்பதாகவும் அவரின் சில குறிப்புகளை அடிப்படையாக வைத்து தான் சில இசைமெட்டுகள் அமைந்திருப்பதாகவும் சொல்கிறார். ஸலைரிக்கு பெருமையினால் முகம் சிவக்கிறது. “ஆனால் அவையெல்லாமே திருத்தப்பட வேண்டியவை” என்று சொல்லிவிட்டு மொசார்ட் சிரிக்கிறார். ஸலைரியின் முகம் கறுக்கிறது.

வியன்னா மன்னர் மொசார்ட்டிற்கு ஸலைரி அமைத்த வரவேற்பு இசைக்குறிப்பைத் தருகிறார். தன் மனதில் ஏற்கனவே பதிந்து போய் விட்டது என்றும், ஒருமுறை கேட்டால் அப்படியே திரும்ப வாசித்து விட முடியும் எனவும், அதை வாசித்துக் காட்டுகிறார். ஸலைரி என்கிற கலைஞன் மனதில் அவமானமும், நிராகரிப்பும் எற்பட்டு விஷத்தன்மை ஏறுகிறது அந்த நிமிடத்தில்.

மொசார்ட்டின் ‘ஒபேரா’ நடைபெருகிறது. இசைக்கட்டுமானமும், அதன் நேர்த்தியும் ஸலைரியை என்னவோ செய்கிறது. ‘ஒபேரா’ முடிவில் மொசார்ட்டை புகழ்கிறார் அரசர். ஆனால், நிறைய இசைக்குறிப்புகளை (னீusவீநீணீறீ ஸீஷீtமீs) குறைத்திருக்கலாம் என்றதும் மொசார்ட்டிற்கு சிறிது கோபம் வருகிறது. அந்த சமயத்தில் மொசார்ட் ஓடிப்பிடித்து விளையாடிய இளம்பெண் தன் அம்மாவுடன் அங்கே வந்து தான் மொசார்ட்டைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகச் சொல்கிறாள். இதைக்கேட்ட பாடகி ஒருவர் கோபமாக அந்த இடத்த விட்டுச் செல்கிறாள். ஸலைரிக்கு மொசார்ட்டின் மேல் பகைமை வளர்கிறது. அந்தப் பாடகியைக் காதலிப்பவர் ஸலைரி.

   

தன்னுடைய காதலியும் மொசார்ட்டால் கவரப்பட்டதை நினைத்ததும் ஸலைரிக்கு ஏமாற்றமாக இருக்கிறது. மொசார்ட் தன் தந்தையின் அனுமதியை மீறி அந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் மொசார்ட்டின் மேல் கோபமாக இருக்கிறார் தந்தை. வியன்னாவில் மனையுடன் வசிக்கிறார் மொசார்ட். இந்த நிலையில் அடுத்த அடி கிடைக்கிறது ஸலைரிக்கு. வியன்னா மன்னன் தன் மகளுகுக்கு இசை கற்றுக்கொடுக்க நியமிப்பதற்காக மொசார்டை அணுகப் போகிறேன் என ஸலைரியிடன் சொல்கிறார். இது ஸலைரிக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அரண்மனை இசையமைப்பாளர் பணிக்கு மொசார்ட் விண்ணப்பிக்க, அது நிராகரிக்கப்படுகிறது. மொசார்ட், அரண்மனையைச் சார்ந்த முக்கியப் பொறுப்பாளரிடம் தனக்கு ஏன் பதவி கிடைக்கவில்லை என கேட்கிறார் “வியன்னாவில் நீ மட்டும் இசைக்கலைஞன் அல்ல, பலரும் இருக்கிறார்கள்” என்கிறார். “ஆனால் எல்லோரையும் விட நான் இசையில் சிறந்தவன்” என்று மொசார்ட் அங்கிருந்து வெளியேறுகிறார்.

தன் கணவனுக்குத் தெரியாமல் இசைக்குறிப்புகளை ஸலைரியுடன் கொண்டுவந்து , அரசவைப்பணிக்காக, கணவரை சிபாரிசு செய்ய வேண்டும் என கேட்கிறார். ஸலைரி, மொசர்ட் மனைவியிடம் தன்னை ஒரு பெருந்தன்மை மிக்க கலைஞனாகக் காட்டிக் கொள்கிறார். ஆனால் சிறு திருத்தம் கூட இல்ல மொசார்ட்டின் அசல் இசைக்குறிப்புகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் போது இறுமாப்பும், தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும் அவருக்குள்ளே போலியாகிப் போகிறது. “ அப்போதிலிருந்து தான் மொசார்ட்டுக்கு எதிரான தன்மையை என் மனதில் உணர்ந்தேன்” என்கிறார் ஸலைரி.

ஒரு மாலை வேலை உற்சாகமான மனநிலையுடன் வீட்டுக்குள் வருகிறார் மொசார்ட். வீட்டின் படிகளின் மேல் ஒரு உருவம் நிற்கிறது. நொடி நேரம்தான். ‘அப்பா’ என்றபடி ஒடிப்போய் அவரை அணைத்துக் கொள்கிறார் மொசார்ட். அப்பா லீபோல்ட் மகனின் பொருளாதார நிலையை விசாரிக்கிறார். எல்லம் சரியாகவே இருக்கிறதென்றும் வியன்னா மக்கள் அன்பாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லியபடி தன் மனைவியை அறிமுகம் செய்கிறார்.

 

மொசார்ட் தன் மனைவியையும் தந்தையையும் அழைத்துக்கொண்டு, ஒரு கேளிக்கை விடுதிக்கு செல்கிறார். அங்கு அனைவருக்கும் ஒரு முகமுடி தரப்படுகிறது. லீபோல்டிற்கு கருப்பு நிறத்தில் ஒரு முகமூடி. அங்கு மொசார்ட் ஒவ்வொரு இசைக்கலைஞன் போலவும் பியானோவில் வாசித்துக்காட்டிகிறார். அந்த இடத்தில் நிற்கும் ஸலைரி தன் பெயரைக்கூறி வாசிக்குமாறு சொல்கிறார். சொன்னது ஸலேரி எனத்தெரியாமல் கேலி செய்வது போல் வாசித்துக் காட்டுகிறார். அனைவரும் சிரிக்கின்றனர். ஸலைரிக்கு இது அடுத்த அடி.

மொசார்ட்டின் அப்பா திரும்பி வந்தது இழந்த புதையல் மீண்டும் கிடைத்த திருப்தியாகத் தோன்றுகிறது மொசார்ட்டிற்கு. முழு நேரமும் இசையிலேயே ஆழ்கிறார். அவருடைய இசைத்தேடலை அபூர்வமான ஒன்றாகப் பார்க்கும் ஸலைரி, ஒரு வேலைக்காரப்பெண்ணை வேவு பார்க்க அனுப்புகிறார். தெரியாத நபரை வீட்டு வேலைக்கு அனுமதிக்க வேண்டாம் என்கிறார் லீபோல்ட். இதில் லீபோல்டுக்கும் மொசார்ட்டின் மனைவிக்கும் ஏற்படுகின்ற சண்டையில், லீபோல்ட் வீட்ட்டை விட்டு வெளியேருகிறார். ஒரு நாள் மொசார்ட் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வேலைக்காரி உதவியுடன் வருகிறார் ஸலைரி. வேலைகாரி வீட்டில் தங்கத்தினை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை எல்லாம் காட்டுகிறாள். ஸலைரிக்கு அது ஒரு பொருட்டாகவேப் படவில்லை. மொசார்ட் எங்கு உட்கார்ந்து எழுதுவார் எனக்கேட்கிறார். அந்த அறைக்குள் செல்கிறார். அந்த அறை முழுவடுதும் இசையால் நிரம்பி வழிவது போல் உணர்கிறர். மொசார்ட் எழுதிக்கொண்டிருந்த இசைக்குறிப்பையும் மை இறகையும் அவரது கை மெதுவாகத் தொடுகிறது.

மொசார்ட் பாதி எழுதி வைத்துவிட்டுப்போன இசைக்குறிப்பு வியன்னா மன்னர் தடை செய்த நாடகத்தை அடிப்படையாகக்கொண்டது. இததை மன்னரிடம் சொல்கிறார் ஸலைரி. மொசார்ட்டிடம் விசாரணை நடக்கிறது. மொசார்ட் அந்த இயத்திலேயே நாடகம் தொடங்கும் விதத்தை செய்து காட்டுகிறார். இசை நாடகம் அரங்கேறுகிறது. 6 பேர் ஒரே சமயத்தில் தனித்தனியாக இருபது நிமிடங்கள் பாடும் அந்தக் காட்சி ஸலைரியை ஒரே அடியாக நிலைகுலையச் செய்கிறது. ஆனால் மன்னரோ நாடகத்தின் சில காட்சிகளில் கொட்டாவி விடுகிறார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் ஸலைரி. நிகழ்ச்சி முடிந்ததும் நாடகம் தனக்கு அலுப்பு மிகுந்ததாக இருந்தது என்றபடி செல்கிறார் மன்னர்.

மறுநாள் மொசார்ட் ஸலைரியை சந்தித்து தான் அருமையான கலைஞனாக இருந்தபோதும் மன்னருக்கு ஏன் நாடகம் பிடிக்கவில்லை என கோபத்துடன் கேட்கிறார். மக்கள் சிறிது ஆசுவாசுபடுத்திக்கொள்ள இசை நாடகத்தின் நடுவில் சில இடங்களில் எளிமையான இசையைப் புகுத்த வேண்டும் என்கிறார் ஸலைரி. அதைத் தான் கற்றுக் கொள்வதாச் சொல்லி செல்கிறார் மொசார்ட்.

அதன் பின் நடந்த ஸலேரியின் இசை நாடகத்தை மொசார்ட் ரசித்துப் பார்க்கிறார். மன்னர் மிகவும் பாராட்டுகிறார். அப்போது ஸலைரியின் கண்கள் மொசார்ட்டைப் பார்க்கின்றன. ஒவ்வொருவராய் பாராட்டும் போதும் ஸலைரி மொசர்ட்டின் வார்த்தைகளையே உன்னிப்பாய் கேட்கிறார். அந்தக் கச்சேரியில் இருந்து உற்சாகமாய் வீட்டிற்குத் திரும்பிய மொசார்ட்டிற்கு லீபோல்ட் இறந்த செய்தி கிடைக்கிறது. அன்றிலிருந்து அவருடைய உற்சாகம், சிரிப்பு எல்லம் வடிந்து போகிறது.

அப்பாவை இழந்த பின் மொசார்ட்டின் இடிந்த மனதின் துக்கம் கூட இசையாய் வெளியாகிறது. அவருடைய இசை நாடகங்கள் மேலும் தீவிரத்தன்மை அடைகின்றன. “அந்த சோகமான, ஆழமான இசையின் ஒவ்வொருத்துளியிலும் லீபோல்ட் மேல் மொசார்ட் வைத்திருந்த இரக்கத்தைக் கண்டேன் ”என்று சொல்லி நிறுத்துகிறார் ஸலைரி.

 

ஒரு கையில் மதுக்கோப்பையும், மறுகையில் இசைக்குறிப்புகளுமாக தூக்கமில்லாத கண்களுடன், இசையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறார் மொசார்ட். ஒரு இரவு அவர் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத்திறந்த மொசார்ட்டின் முகம் அதிர்கிறது. எதிரில் கருப்பு அங்கியும் முகமுடியும் அணிந்து ஒரு உருவம் நிற்கிறது. அந்த கருப்பு அங்கியும் முகமுடியும் லீபோல்ட் கேளிக்கை விருந்தில் அணிந்திருந்தது. அந்த உருவம் மொசார்ட்டிடம் இரங்கற்பா எழுதச்சொல்லி கேட்கிறது. யாருக்கு எழுத வேண்டுமென மொசார்ட் கேட்க, “இறக்கப்போகும் ஒருவனுக்காக” என்றபடி பணப்பையை கொடுத்துவிட்டு அந்த உருவம் செல்கிறது. “மக்கள் கூடியுள்ள இறுக்கமான அமைதியில் கடவுளுக்கு முன்னே சவப்பெட்டியில் படுத்துக்கிடக்கும் சிறிய உருவமான மொசார்ட்டிற்கு அந்த இரங்கற்பா வாசிக்க நான் முடிவு செய்தேன். ஆனால் எப்படிக் கொல்வது என்பது தெரியவில்லை” என்று சொல்கிறார் ஸலைரி.

இரங்கற்பா எழுதும்போதெல்லாம் லீபோல்ட் உருவத்தில் ஸலைரி மொசார்ட்டைத் தொந்தரவு செய்கிறார். ஏழ்மை நிலைக்குப் போன மொசார்ட்டைப் பிரிந்து மனைவி குழந்தையுடன் செல்கிறாள். மனைவியைத்தேடி அவள் அம்மா வீட்டிற்குச் செல்கிறார் மொசார்ட்.“நீ கேவலமானவன் உன் இசையின் பின் சென்று என் பெண்ணைக்கெடுத்து விட்டாய். நீயும் உன் இசையும் எனத் திட்டுகிறாள்.” “ நான் மோசவானவனாக இருக்கலாம், ஆனால் என் இசை அப்படி அல்ல” என்கிறார் மொசார்ட். அந்தத் துக்கத்தையும் வெறுப்பையும் கூட இசையாய் பாவிக்கும் மனது இருக்கிறது மொசார்ட்டிற்கு.

மிகுந்த உடல் பலவீனத்தோடு ஒரு இசை நாடகத்தில் பங்கேற்கும் மொசார்ட் அங்கேயே மயங்கி விழுகிறார். மொசார்ட்டைத் தூக்கிக்கொண்டு அவரின் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஸலைரிக்குக் கிடைக்கிறது. அனைவரையும் அனுப்பி விட்டு மொசார்ட்டுடன் அறையில் தனித்து இருக்கிறார். கதவு தட்டப்படுகிறது. மொசார்ட் திடுக்கிட்டு விழித்து ஸலைரியிடம், “அவனாகத் தான் இருக்கும்- நான் இன்னும் அந்த இரங்கற்பாவை முடிக்கவில்லை” என்று பயப்படுகிறார். ஸலைரி போய் கதவைத் திறக்கிறார். இசை அரங்கத்திற்கான பணத்தை மொசார்ட்டிடம் தந்து விடுமாறு சொல்லி பணமுடிப்பைத்தந்து செல்கின்றனர் சிலர். ஸலைரி கையில் உள்ள பணமுடிப்பைப் பார்த்ததும் பலவீனமாய் எழுந்து உட்காருகின்ற மொசார்ட் காலைக்குள் அந்த இரங்கற்பாவை முடிக்க வேண்டும் என்கிறார். மொசார்ட் சொல்ல சொல்ல அந்த இரவு முழுவதும் ஸலைரி எழுதுகிறார். மொசார்ட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமலும், அதே சமயம் நடு நடுவே பாடிக்காட்டியும் ஸலைரி அதற்குள் ஆழ்கிறார். மொசார்ட்டின் இசைஞானம் முழுவீச்சில் தெரிய வந்த அந்த கணத்தின் பிரமிப்பில் இருந்து மீளாமல் அமர்ந்திருக்கிறார் ஸலைரி. மிகவும் பலவீனமாக ஆகியிருந்த மொசார்ட்டைத் தூங்கச் செய்துவிட்டு போய்ப்படுக்கிறார் ஸலைரி. விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த மொசார்ட்டின் மனைவி, ஏதோ உள்ளுணர்வுத் தாக்க இரவோடு இரவாகப் புறப்பட்டு வருகிறாள். படுக்கையில் படுத்திருக்கும் மொசர்ட்டிடம் கலங்கி மன்னிப்புக் கேட்கிறாள் அங்குள்ள இசைக்குறிப்பில் வேறொருவரின் கையெழுத்து இருப்பதைப் பார்த்து குழம்புகிறாள். ஸலைரியை எழுப்பி, “ நீ தான் என் கணவரின் இந்த நிலைக்குக் காரணம். அவரை நீ ஏமாற்றுகிறாய்” என கோபமாகக் கத்துகிறாள். எதுவும் பேசமுடியாத பலகீனத்தோடு மொசார்ட் தன் மகனை அணைத்துக்கொள்கிறார். இசை மௌனிக்கிறது மொசார்ட் மனைவியின் அலறல் கேட்கிறது. அடுத்து சொற்பமான சிலருடன் மொசார்ட்டின் இறுதி ஊர்வலம் அதிகாலை வேளையில் செல்கிறது. பனிபொழிந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த பாதிரியார் கண்களில் நீர் வழிகிறது. ஸலைரியிடம் இப்போது ஆழ்ந்த அமைதி. தன்னுடைய அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்படும் ஸலைரி முகத்தில் ஆழ்ந்த புன்னகையும் எள்ளலும் கிண்டலும் அப்பாவித்தனமும் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளச் சொல்லும் மொசார்ட்டின் அடையாளமான சிரிப்பு ஸலைரி முகத்தின் அமைதிக்குப் பின்னே ஒலிக்கிறது.

அன்டேனியோ ஸலைரியின் முகத்தில் கடைசி வரை பதில் தெரியாத கேள்வியாக இருந்தது இது தான். “என் மனதில் இசை வேட்கையை விதைத்து, என்னை அவமாப்படுத்துவது போல் ஒரு கிறுக்குத்தனமான பிறவியிடம் அற்புத இசையைக் கொடுத்து என் முன்னாள் கடவுல் என் அனுப்பினார்?” படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த’ கேள்வி எஞ்சி நிற்கிறது.

ஒவ்வொரு முறையும் தனக்கு வருகிற அவமானங்களையும் தன் இசை மீது கொண்ட அதீத நம்பிக்கையினாலேயே எதிர்கொண்டவர் மொசார்ட். இந்த நம்பிக்கை தான் ஸலைரியை மொசார்ட்டுக்கு எதிராக சில சமயங்களில் செயல்பட வைக்கிறது.

படத்தில் இசை ஒரு கதாபாத்திரமாகவும், உணர்வாகவும் நிரம்பியிருக்கிறது. இசைக்குழுவின் உழைப்பு படம் முழுக்கத்தெரிகிறது. மொசார்ட்டின் இசையையே பதிவு செய்திருக்கிறார்கள்.

 

அண்டனியோ ஸலைரியாக எஃப்.மிர்ரே ஆப்ரஹாம் நடித்துள்ளார். படம் முடிந்த பின்னும் கூட இவரது முகமும், குரலும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. குற்ற உணர்ச்சில் உருகும் போதும், ஆற்றாமையில் வருந்தும் போதும், கோபகாக இருக்கும் போதும், அவருடைய உணர்ச்சிகள் நம்மையும் ஸ்லேரியாக மாற்றுகிறது.

மொசார்ட்டாக வாழ்ந்திருக்கும் டாம் ஹல்ஸ் முகமாக மொசார்ட்டை நாம் அறிந்து கொள்கிறோம். அவருடைய சிரிப்பும், உடல் மொழியின் வெளிப்பாடும் மிக அற்புதமானது

ஸலைரியின் வாக்குமூலத்தை படம் தருகிறது. ஒரு கலைஞனின் பார்வையில் உலகம் புகழும் சக கலைஞன் ஒருவரைப்பற்றி எந்தவித புகழ்கெடுதியும் இல்லாமல் சொன்னதில் திரைக்கதை அருமையான அவதாரம் காண்பிக்கிறது. இந்தக்கதை திரைப்படமாவதற்கு முன் நாடகமாக இருந்தது. இதன் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் ஸாஃபர் தயாரிப்பில் ஸால் ஜாயிண்ட்ஸ்.

18 ஆம் நூற்றாண்டையும் மேடைகளையும் அரங்குகளையும் கதாபாத்திரங்களையும் நம் கண் முன் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். பனிபொழியும் பகலையும் இரவையும் சரித்திர கால ஒளியையும் நமக்குத் தருகிறவர் ஒளிப்பதிவாளர். மிராஸ்வாவ் ஆன்ட்ரிசெக்.

எந்தவித நெருடலும் இல்லாமல் ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தை மற்றொருவரின் கோணத்தில் திரைக்கதைக் கெடாமல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மிலால் ஃபார்மேன்.

இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்கு புது முகங்கள் வேண்டும் என பல மாதங்களாக முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். அவரின் முயற்சியும், உழைப்பும் படத்தின் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது.

1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் 8 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளது.

ஜா. தீபா

திரைப்பட மதிப்புரைகள்

Bookmark and Share   Lunarpages Affiliate Program